மாருதி சுஸுகி: நிகர லாபம் ரூ.1,042 கோடி

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி மூன்றாவது காலாண்டில் ரூ.1,042 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
மாருதி சுஸுகி: நிகர லாபம் ரூ.1,042 கோடி

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி மூன்றாவது காலாண்டில் ரூ.1,042 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

தற்போது நிலவும் செமிகண்டக்டருக்கான பற்றாக்குறை நிறுவனத்தின் விற்பனை நடவடிக்கைகளை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. மேலும், மூலப் பொருள்களின் விலை உயா்வை சமாளிப்பதும் சவாலாக உள்ளது.

இதுபோன்ற சாதகமற்ற நிகழ்வுகளின் காரணமாக நிறுவனம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் 47.82 சதவீதம் சரிவடைந்து ரூ.1,041.8 கோடியாக குறைந்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.1,996.7 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.

நிறுவனம் செயல்பாடுகளின் மூலமாக பெற்ற வருவாய் ரூ.23,471.3 கோடியிலிருந்து ரூ.23,253.3 கோடியாக சிறிய சரிவை சந்தித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் வாகன விற்பனை ஒட்டுமொத்த அளவில் 4,95,897 என்ற எண்ணிக்கையிலிருந்து 13.1 சதவீதம் குறைந்து 4,30,668-ஆக குறைந்தது.

நிறுவனம் தனிப்பட்ட முறையில் ஈட்டிய நிகர லாபம் ரூ.1,941.4 கோடியிலிருந்து ரூ.1,011.3 கோடியாக குறைந்தது. அதேபோன்று, நிகர அளவிலான விற்பனையும் ரூ.22,236.7 கோடியிலிருந்து சற்று குறைந்து ரூ.22,187.6 கோடியானது.

உள்நாட்டு சந்தையில் மூன்றாவது காலாண்டில் விற்பனை 4,67,369-லிருந்து 3,65,673-ஆக குறைந்தது. இருப்பினும், வாகனங்களின் ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத உச்சபட்ச அளவாக 64,995-ஆக இருந்தது.

2021 டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஒன்பது மாத காலகட்டத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.3,148 கோடியலிருந்து ரூ.2,003.7 கோடியாக குறைந்தது. ஒட்டுமொத்த வருவாய் ரூ.46,337.5 கோடியலிருந்து அதிகரித்து ரூ.61,580.6 கோடியைத் தொட்டதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com