ஐடி, வங்கிப் பங்குகளில் லாபப் பதிவு: 498 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும்
ஐடி, வங்கிப் பங்குகளில் லாபப் பதிவு: 498 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 498 புள்ளிகளை இழந்தது. 4 நாள் தொடர் சரிவுக்குப் பிறகு திங்கள்கிழமை ஏறுமுகம் கண்ட சந்தையில், செவ்வாய்க்கிழமை தொடக்கத்தில் இருந்து ஐடி, வங்கி, எஃப்எம்சிஜி நிறுவனப் பங்குகளில் லாபப் பதிவு அதிகம் இருந்தது.
 செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ள அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில், வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்த முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தாக்கம் குறிப்பாக, மேற்கத்திய சந்தைகளில் எதிரொலித்து வருகின்றன. இதையொட்டி ஐரோப்பா, ஆசியா மத்திய வங்கிகளிலும் இதேபோன்ற நடவடிக்கை இருக்கும் என்பதால், உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கலாம் என முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது உள்நாட்டுச் சந்தையிலும் பங்குகள் விற்பனை அதிகரிக்க காரணமாக அமைந்தது. தொடக்கத்தில் ஏறுமுகத்தில் சென்ற சந்தையில் பின்னர் படிப்படியாக சரிவு ஏற்பட்டது. மொத்தத்தில் அமெரிக்க ஃபெடரல் வங்கிக் கூட்டத்தின் முடிவு மற்றும் ஜிடிபி தரவுகளுக்காக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 2,228 பங்குகள் விலை சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,467 நிறுவனப் பங்குகளில் 1,110 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,228 பங்குகள் சரிவுப் பட்டியலிலும் இருந்தன. 129 பங்குகளின் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. 108 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 34 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு வர்த்தக முடிவில் ரூ.257.55 லட்சம் கோடியாக குறைந்தது.
 திடீர் சரிவு: தொடர்ந்து நான்கு நாள் சரிவுக்குப் பிறகு திங்கள்கிழமை ஏற்றம் பெற்ற சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை காலையில் 68.16 புள்ளிகள் கூடுதலுடன் 55,834.38-இல் தொடங்கிய சென்செக்ஸ் அதற்கு மேலே செல்லவில்லை. பின்னர், 55,203.43 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 497.73 புள்ளிகள் (0.89 சதவீதம்) குறைந்து 55,268.49-இல் நிலைபெற்றது. பெரும்பாலான நேரம் சந்தை கரடியின் ஆதிக்கத்தில் இருந்தது.
 இன்ஃபோசிஸ், ஆக்ஸிஸ் பேங்க் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இடம்பெற்றன. இதில் பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் 3.40 சதவீதம், தனியார் வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் 3 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. அடுத்ததாக, ஹிந்துஸ்தான் யுனி லீவர், டாக்டர் ரெட்டீஸ் லேப், விப்ரோ, கோட்டக் பேங்க் உள்ளிட்டவை 2 முதல் 2.85 சதவீதம் வரை
 குறைந்தன.
 மேலும், முன்னணி ஐடி நிறுவனங்களான ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், டெக் மஹிந்திரா மற்றும் ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க், எஸ்பிஐ, மாருதி சுஸýகி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
 பஜாஜ் ஃபின்சர்வ் அபாரம்: அதே சமயம், முன்னணி தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபின்சர்வ் 5.58 சதவீதம் (ரூ.704.10) உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பார்தி ஏர்டெல், பவர் கிரிட், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஏஷியன் பெயிண்ட்ஸ், எம் அண்ட் எம், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ் உள்ளிட்டவையும் சிறிதளவு உயர்ந்து ஆதாயப் பட்டியலுக்கு வந்தன.
 நிஃப்டி 147 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 511 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,435 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. "நிஃப்டி 50' பட்டியலில் 11 பங்குகள் ஆதாயத்தையும், 38 பங்குகள் வீழ்ச்சியையும் சந்தித்தன. வர்த்தக முடிவில் நிஃப்டி 147.15 புள்ளிகள் (0.88 சதவீதம்) குறைந்து 16,483.85-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது 16,632.90-இல் தொடங்கிய நிஃப்டி, 3.20 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 16,636.10 வரை சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com