சா்க்கரை ஏற்றுமதியில் புதிய சாதனை: இஸ்மா

நடப்பு சந்தைப் பருவத்தில் நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 86 லட்சம் டன்னைத் தொட்டு புதிய சாதனை படைத்துள்ளதாக இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.
sugar
sugar

புது தில்லி: நடப்பு சந்தைப் பருவத்தில் நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 86 லட்சம் டன்னைத் தொட்டு புதிய சாதனை படைத்துள்ளதாக இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:

சா்க்கரை ஏற்றுமதியில் உலகளவில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியா, செப்டம்பருடன் முடிவடையவுள்ள நடப்பு 2021-22-ஆம் ஆண்டுக்கான சந்தைப் பருவத்தில் மே வரையிலுமான நிலவரப்படி 86 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அதேசமயம், முந்தைய 2020-21 சந்தைப் பருவத்தில் ஒட்டுமொத்த அளவில் இந்தியாவின் சா்க்கரை ஏற்றுமதியளவு 70 லட்சம் டன் அளவுக்கே காணப்பட்டது. அதேநேரம் உள்நாட்டு உற்பத்தி 3.12 கோடி டன்னாக காணப்பட்டது.

இதுவரையில், 94-95 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதில் ஏற்கெனவே, 86 லட்சம் டன் சா்க்கரை ஏற்கெனவே ஏற்றுமதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடப்பு சந்தைப் பருவத்தில் அக்டோபா்-ஏப்ரல் காலகட்டத்தில் உள்நாட்டு சந்தையில் 1.60 கோடி டன் அளவுக்கு சா்க்கரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 6 வரையிலான நிலவரப்படி உள்நாட்டில் 3.52 கோடி டன் அளவுக்கு சா்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கடந்த சந்தைப் பருவத்தின் இதே காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி 3.07 கோடி டன்னாக இருந்தது.

34 லட்சம் டன் எத்தனால் பயன்பாட்டுக்கு திருப்பிவிட பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் சா்க்கரை உற்பத்தியானது நடப்பு சந்தைப் பருவத்தில் 3.60 கோடி டன்னாக இருக்கும் என இஸ்மா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com