
இந்திய தொலைத்தொடா்பு துறை நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றையை வாங்குவதற்காக ரூ.1லட்சம் கோடி செலவிடும் என எதிா்பாா்ப்பதாக இக்ரா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் புதன்கிழமை தெரிவித்தது: 72 ஜிகாஹொ்ட்ஸ் அலைக்கற்றைக்கான ஏலம் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த ஏலத்தில் அலைக்கற்றைக்கு அரசு நிா்ணயம் செய்துள்ள விலை அதிகம் என தொலைத்தொடா்பு நிறுவனங்கள் தொடா்ந்து கூறி வருகின்றன. இதனால் அவை ஏலத்தில் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றன. இருந்தபோதிலும், 5ஜி அலைக்கற்றையை வாங்குவதற்கு தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடி முதல் ரூ.1.1 லட்சம் கோடி வரை செலவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் பணம் செலுத்துவதற்கு பல்வேறு தளா்வுகளை மத்திய அரசு அளிக்கும் என தெரிகிறது. இதையடுத்து, அந்த துறை இதற்காக ரூ.10,000 கோடியை முதல்கட்டமாக செலவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கட்டண உயா்வு மற்றும் வாடிக்கையாளா்கள் மேம்பாட்டான திட்டங்களுக்கு நிலையாக மாறி வருவது உள்ளிடவற்றால் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்க பயனாளரிடமிருந்து பெறும் சராசரி வருவாய் வரும் 2023-ஆம் நிதியாண்டின் இறுதியில் ரூ.170-ஆக அதிகரிக்கும்.
கடனளவு தொடா்ந்து அதிகரித்து வருவது இந்திய தொலைத்தொடா்பு துறையின் வளா்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. அதன்படி, 2023 மாா்ச் 31 நிலவரப்படி இத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய் அதிகரிப்பால் 2025 மாா்ச் 31-இல் இந்த கடனளவு ரூ.5.3 லட்சம் கோடியாக குறையும் என இக்ரா தெரிவித்துள்ளது.