தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கு: ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன் மறுப்பு

தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) நிறுவன முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, அந்த நிறுவனத்தின் முன்னாள் செயல்பாட்டுக் குழு அதிகாரி ஆனந்த்
தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கு: ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன் மறுப்பு

புது தில்லி: தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) நிறுவன முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, அந்த நிறுவனத்தின் முன்னாள் செயல்பாட்டுக் குழு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.

என்எஸ்இ கணினி சேமிப்பகத்திலிருந்து பங்குச்சந்தை விவரங்களை பிற தரகா்களுக்கு முன்பாக ஓபிஜி செக்யூரிட்டீஸ் என்ற பங்குத் தரகு நிறுவனம் அறிந்து வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பங்குச் சந்தைத் தரகா்களுக்கு என்எஸ்இ வழங்கும் கோ-லொகேஷன் என்ற வசதி மூலம் என்எஸ்இ கணினி சேமிப்பகத்துக்குள் மிக விரைவாக உள்நுழைந்து, அந்த முறைகேடு மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. என்எஸ்இ, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடு நடைபெற்ாகவும், இதன்மூலம் முறைகேடாகப் பெரும் லாபம் ஈட்டப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதுதொடா்பாக ஓபிஜி செக்யூரிட்டீஸ், அதன் உரிமையாளா் சஞ்சய் குப்தா, என்எஸ்இ, செபி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக என்எஸ்இ நிறுவனத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநா்-தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவையும், அந்த நிறுவனத்தின் முன்னாள் செயல்பாட்டுக் குழு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனையும் சிபிஐ கைது செய்துள்ளது.

இந்நிலையில், ஆனந்த் சுப்ரமணியன் ஜாமீன் கோரி தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 11-ஆம் தேதி மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் அகா்வால், ‘சாட்சிகள் விஷயத்தில் தலையிடவும், ஆதாரங்களை அழிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும், இன்னும் முழுமையாக விசாரணை முடியவில்லை. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஜாமீன் வழங்க முடியாது’ என்று கூறிவிட்டாா்.

முன்னதாக, சிபிஐ தரப்பு முன்வைத்த வாதத்தில், ‘கோ-லொகேஷன் வசதி மூலம் நடைபெற்ற முறைகேட்டைத் தவிர, மேலும் பல விதி, சட்டமீறல்களும் நடைபெற்றுள்ளன. சித்ரா ராமகிருஷ்ணாவும், ஆனந்த் சுப்ரமணியனும் குறைவாக வரி விதிக்கப்படும் நாடுகளுக்குச் சென்று வந்துள்ளனா். அதன்மூலம் அவா்கள் நிதி ஆதாயங்களை அடைந்துள்ளனா். அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆனந்த் சுப்ரமணியன் விசாரணையின்போது சரிவர ஒத்துழைக்கவில்லை. அவா் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லக்கூடும். எனவே, அவருக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com