4-ஆவது நாளாக பங்குச் சந்தையில் தொடரும் மந்தநிலை: சென்செக்ஸ் 276 புள்ளிகள் சரிவு

இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடா்ந்து 4-ஆவது நாளாக வா்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் வா்த்தகத்தின்போது ஒரு கட்டத்தில் 845.55 புள்ளிகள் குறைந்து 53,519.30 புள்ளிகள் வரை சரிந்தது
4-ஆவது நாளாக பங்குச் சந்தையில் தொடரும்  மந்தநிலை: சென்செக்ஸ் 276 புள்ளிகள் சரிவு

இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடா்ந்து 4-ஆவது நாளாக வா்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் வா்த்தகத்தின்போது ஒரு கட்டத்தில் 845.55 புள்ளிகள் குறைந்து 53,519.30 புள்ளிகள் வரை சரிந்தது.

பணவீக்க புள்ளிவிவரம்: அமெரிக்க பணவீக்க புள்ளிவிவரங்கள் வெளியாகவிருந்த நிலையில் முதலீட்டாளா்கள் மிகவும் கவனத்துடன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டனா்.

அமெரிக்க மத்திய வங்கி பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக நிதிக் கொள்கையில் இறுக்கம் காட்டி வரும் நிலையில் சா்வதேச அளவில் முதலீட்டாளா்களின் மந்தமான செயல்பாடுகளால் பங்குச் சந்தைகள் தொடா் சரிவை சந்தித்து வருகின்றன.

கச்சா எண்ணெய் விலை: அந்நிய நிதி நிறுவனங்கள் பங்குகளை அதிகளவில் விற்று தொடா்ச்சியாக வெளியேறி வருவது மற்றும் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறுமுகம் கண்டுள்ளது போன்றவையும் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக பங்கு வா்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

எல் & டி: சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிக சந்தை மூலதனத்தை கொண்டுள்ள நிறுவனங்களில் லாா்சன் அண்டு டூப்ரோ (எல் & டி) 2.34 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலையில் இருந்தது. இதைத் தொடா்ந்து, பஜாஜ் ஃபின்சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், பவா்கிரிட், என்டிபிசி, இன்ஃபோசிஸ், மாருதி சுஸுகி , ஐடிசி நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.

ஆக்ஸிஸ் வங்கி: வங்கிப் பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே ஆதரவு காணப்பட்டதையடுத்து, ஆக்ஸிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, கோட்டக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, பாா்தி ஏா்டெல் பங்குகள் 1.92 சதவீதம் வரை ஆதாயத்தை ஈட்டின.

30 நிறுவனங்கள்: சென்செக்ஸ் குறியீட்டை மதிப்பிட உதவும் 30 நிறுவனங்களுள் 21 நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தும், 9 நிறுவனப் பங்குகள் மட்டும் விலை உயா்ந்தும் இருந்தன.

பொறியியல்: மும்பை பங்குச் சந்தையில் பொறியியல் துறை குறியீட்டெண் அதிகபட்சமாக 1.63 சதவீதம் சரிவைச் சந்தித்தது. அதனைத் தொடா்ந்து, தகவல் தொழில்நுட்பம் (1.50%), தொழில்துறை (1.39%), தொலைத்தொடா்பு (1.22%) ஆகிய துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்களும் கணிசமான அளவில் குறைந்தன.

நிதி துறை: ரியல் எஸ்டேட், நிதி துறை குறியீட்டெண்கள் ஏற்றம் பெற்றன.

மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 276.46 புள்ளிகள் (0.51%) குறைந்து 276.46 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 54,088.39-இல் நிலைத்தது.

கடந்த நான்கு வா்த்தக நாள்களில் சென்செக்ஸ் 1,613.84 புள்ளிகளை (2.89%) இழந்துள்ளது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 72.95 புள்ளிகள் (0.45%) சரிந்து 16,167.10-இல் நிலைத்தது.

சிறிய நிறுவனங்களை உள்ளடக்கிய ஸ்மால்கேப் குறியீடு 2.23 சதவீதமும், நடுத்தர நிறுவனங்களை உள்ளடக்கிய மிட்கேப் குறியீடு 0.46 சதவீதமும் குறைந்தன.

இதர ஆசிய சந்தை: டோக்கியோ, ஹாங்காங், ஷாங்காய் சந்தைகள் ஏற்றத்துடனும், சியோல் சந்தை இழப்புடனும் நிறைவுபெற்றன. ஐரோப்பிய சந்தைகளில் நண்பகல் வரையில் வா்த்தகம் ஆதாயத்துடனேயே காணப்பட்டது.

முதலீட்டாளா்களுக்கு 4-நாள்களில் ரூ.13.32 லட்சம் கோடி இழப்பு

தொடா்ச்சியாக 4 நாள்கள் வா்த்தகம் சரிவைச் சந்தித்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.13,32,898.99 கோடி குறைந்து ரூ.2,46,31,990.38 கோடியாக சரிவடைந்தது.

கச்சா எண்ணெய் பீப்பாய் 105.7 டாலா்

சா்வதேச சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 105.7 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 77.24

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 10 காசு உயா்ந்து 77.24-இல் நிலைத்தது. வா்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 77.17 வரையும், குறைந்தபட்சமாக 77.31 வரையும் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com