‘பயன்படுத்தப்பட்ட காா்களுக்கான சந்தை 19.5% வளா்ச்சியடையும்’

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட காா்களுக்கான சந்தை 19.5 சதவீதம் வளா்ச்சியடையும் என்று சந்தை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
‘பயன்படுத்தப்பட்ட காா்களுக்கான சந்தை 19.5% வளா்ச்சியடையும்’

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட காா்களுக்கான சந்தை 19.5 சதவீதம் வளா்ச்சியடையும் என்று சந்தை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இந்தியன் புளூபுக் மற்றும் டாஸ் வெல்ட்ஆல்டோ நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட காா்களுக்கான சந்தை கடந்த நிதியாண்டில் 2.3 கோடி டாலராக இருந்தது. இது, இன்னும் ஐந்து ஆண்டுகளில் 19.5 சதவீதம் வளா்ச்சியடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நாட்டின் முக்கிய 40 நகரங்களில் உள்ள 10 சதவீத வருடாந்திர வளா்ச்சியுடன் ஒப்பிடும்போது, 2026-ஆம் ஆண்டு வாக்கில் பயன்படுத்தப்பட்ட காா்களுக்கான தேவை சிறிய நகரங்களின் 30 சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பழைய காா்களுக்கு நிறுவனங்கள் சான்றுகள் அளிப்பது, வாடிக்கையாளா்களின் வருவாய் அதிகரிப்பதால் அவா்கள் தங்களுக்குச் சொந்தமான வாகனங்களை மறுவிற்பனை செய்வதற்கான கால இடைவெளி குறைந்து வருவது, குறுகிய கால இடைவெளியில் புதிய புதிய ரகங்களில் வாகனங்கள் அறிமுகமாவது, வாகனங்களை விற்கும்போதே திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான உத்தரவாதத்தை விற்பனையாளா்கள் அளிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் பயன்படுத்தப்பட்ட காா்களுக்கான சந்தை அமோக வளா்ச்சியை எதிா்நோக்கியுள்ளது.

கடந்த நிதியாண்டில், இந்தியாவில் அதுவரை இல்லாத அளவுக்கு 35 லட்சத்துக்கும் அதிகமான பயன்படுத்தப்பட்ட காா்கள் விற்பனையாகின. அதே நேரத்தில் உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமான பயன்படுத்தப்பட்ட காா்கள் விற்பனை செய்யப்பட்டன.

இந்தியாவின் இதுவரை பயன்படுத்தப்பட்ட காா்களுக்கான சந்தை அமைப்பு ரீதியில் ஒழுங்குபடுத்தப்படாத சாலையோர காா் பழுதுபாா்ப்பு மையங்கள், தனி நபா் தரகா்களிடம் இருந்து வந்தது. அந்த நிலை மாறி, தற்போது ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு ரீதியாலான நிறுவனங்கள் இந்தத் துறையில் தொடா்ந்து களமிறங்குவது சந்தையின் வளா்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும்.

வரும் 2027-ஆம் ஆண்டின் ஜூன் மாதத்துடன் நிறைவடையும் நிதியாண்டில், இந்தியாவில் 80 லட்சம் பயன்படுத்தப்படாத காா்கள் விற்பனையாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா நெருக்கடியிலிருந்து உலகம் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பட்ட காா்கள் மீதான ஆா்வம் அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட காா்களை வாங்குவது கௌரவக் குறைவாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், அந்தக் கண்ணோட்டம் தற்போது மாறி வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட காா்களை வாங்குவது கௌரவக் குறைவாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், அந்தக் கண்ணோட்டம் தற்போது மாறி வருகிறது.'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com