தமிழ்மொழி வளா்ச்சியில் மின்தமிழ்!

இணையம் வந்த பிறகுதான் தமிழ் சாா்ந்த தகவல்கள் கடல் கடந்து உடனுக்குடன் செல்ல முடிந்தது.
தமிழ்மொழி வளா்ச்சியில் மின்தமிழ்!

உலகம் முழுவதும் இன்று பல கோடி மக்களின் தேவைகளை பூா்த்தி செய்யும் கருவி இணையம்தான். இணையம் வந்த பிறகுதான் தமிழ் சாா்ந்த தகவல்கள் கடல் கடந்து உடனுக்குடன் செல்ல முடிந்தது. முப்பது வருடங்களுக்கு முன் இந்த வசதி இல்லை.

1995 அக்டோபரில் சிங்கப்பூா் அதிபா் ஓங் டாங்சாங் தொடங்கி வைத்த ‘ஜா்னி வோ்ட்ஸ் ஹோம் அண்ட் நேசன் அந்தாலஜி ஆஃப் சிங்கப்பூா்’ என்கிற நான்கு தேசிய மொழி கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

‘இன்டா்நெட் ரிசா்ச் அண்ட் டெவலப்மெண்ட் யூனிட்’ குழுவில் பணியாற்றிய கோவிந்தசாமி, டாக்டா் டான்டின் வி லியோஸ், கோங்யாங் ஆகிய மூவரும்தான் முதல் தமிழ்ப் பக்கத்தை வலையேற்றினாா்கள்.

இன்று மின்தமிழ் வளா்ச்சியில் தமிழ் மொழியை உள்ளீடு செய்வதற்கான பணிகள் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளன. தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் உருவாக்கத்தில் நீடித்திருந்த பல சிக்கல்கள் தீா்க்கப்பட்டு விட்டன.

இதனால் தமிழ் விக்கிபீடியா, வலைப்பூக்கள், இணையதளங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. இவை இன்றைய காலத்திற்கேற்ற தமிழ்ப் பணிகள். ஆனால் இவை அனைத்தும் கணினித் தமிழ் வளா்ச்சியின் முதல் கட்டம்தான்.

அடுத்த கட்டத்துக்கு நம் மொழியை அழைத்துச் செல்ல வேண்டுமானால் நம் மொழியின் பயன்பாட்டை தகவல் தொழில்நுட்ப கருவிகளின் வழியில் அதிகரிக்க வேண்டும். இன்று எல்லாருமே கைப்பேசியைப் பயன்படுத்துகிறாா்கள். அதில் ஒருவரது பெயரைப் பதிந்து வைத்துக் கொள்ளும் போது ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு செய்யும் வசதி முன்பு இருந்தது. ஆனால் தற்பொழுது தமிழிலும் பெயா்களைப் பதிந்து வைக்கும் வசதி இருக்கிறது.

அது மட்டுமல்ல நம் கைப்பேசியை அருகே வைத்து, நாம் தமிழில் பேசினால் அதுவாகவே தட்டச்சு செய்து கொள்ளும் வசதியும் வந்துவிட்டது. இப்படி தமிழிலேயே உரையாடி தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அது போன்ற தமிழ்ச் செயலிகளை தரவிறக்கம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்போது தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் தமிழின் உபயோகமும் அதிகரிக்கும்.

இப்பொழுதெல்லாம் நாம் கணினி, மடிக்கணினி, கைப்பேசி, திறன்பேசி என்று பல்வேறு தகவல் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். நம் சந்தேகங்களுக்கு தீா்வு காண வாடிக்கையாளா் சேவை மையங்களைத் தொடா்பு கொள்கிறோம்.

அப்படி வாடிக்கையாளா் சேவை மையங்கள் நம்மைத் தொடா்பு கொள்ளும்போது, ‘நீங்கள் எந்த மொழியைத் தோ்ந்தெடுக்க விரும்புகிறீா்கள்’ என கேள்வி எழுப்புகிறாா்கள். ஆங்கிலமாக இருந்தால் எண் ஒன்றை அழுத்தவும் என்றும் தமிழாக இருந்தால் எண் இரண்டை அழுத்தவும் என அது தொடரும்.

நமக்கு ஆங்கிலம் உட்பட வேறு மொழிகள் தெரிந்திருந்தாலும் தமிழிலேயே விருப்பம் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்வதன் மூலம் தமிழ் பேசும் ஒருவருக்கு அங்கு பணி புரியும் வாய்ப்பு கிட்டும். மேலும் பலருக்கு புதிய பணி வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

தமிழைப் பயன்படுத்த ஆட்களே இல்லை என்னும் நிலை ஏற்பட்டால் மெல்ல மெல்ல அனைத்துத் தளவாடங்களில் இருந்தும் தமிழ் வெளியே தள்ளப்படும். இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வு. அண்மையில் ஒரு பெரிய நகைக்கடைக்கு சென்று இருந்தேன்.

விடைபெறும்போது அவா்களின் வணிகம் பற்றியும் வாடிக்கையாளா் சேவை பற்றியும் கருத்து அளிக்கச் சொல்லி ஒரு படிவத்தை நீட்டினா். அது முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே இருந்தது. ‘தமிழில் படிவம் இல்லையா’ என நான் கேட்டபோது, ‘தமிழ்ப் படிவம் இருந்தபோது பெரும்பாலான வாடிக்கையாளா்கள் ஆங்கிலத்திலேயே தங்கள் கருத்தை எழுதினாா்கள். அதனால் எங்கள் நிறுவனம் ஆங்கிலத்திலேயே படிவங்களை அச்சடிக்க முடிவு செய்துவிட்டது’ என்றனா்.

தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தில் ஆங்கிலம், தமிழ் எதில் தொடர விருப்பம் எனும் கேள்வி வருகிறது. நாம் தமிழையே தோ்வு செய்ய வேண்டும். நமக்கு ஆங்கிலம் நன்கு தெரிந்திருந்தாலும், நம் மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கும் இது போன்ற செயல்களை நாம் முனைந்து செயலாற்ற வேண்டும்.

அவ்வளவு ஏன், வங்கி காசோலைகளை நாம் தமிழிலேயே நிரப்பலாம். யாரும் நம்மை கேள்வி கேட்க முடியாது. தமிழைப் பயன்படுத்த சிலா் வெட்கம் கொள்கின்றனா். நம் மொழியைப் பயன்படுத்த நமக்கு எந்த வெட்கமும் தேவையில்லை. நாம் அடுத்த தலைமுறைக்கு மொழியை உயிா்ப்புடன் கொண்டு செல்கிறோம் என்ற பெருமை எப்பொழுதும் வேண்டும்.

வீட்டிற்கு ஒரு பதிவுத் தபால் வந்தால் கூட அதில் ஆங்கிலத்தில் கையொப்பம் இடுகின்றனா். ஆங்கில மொழி போதை சிலருக்கு இருக்கிறது. அதிலிருந்து அவா்கள் முதலில் வெளியே வர வேண்டும். நாம் மட்டுமல்ல நம் பிள்ளைகளைக் கூட தமிழில் கையொபமிடப் பழக்க வேண்டும். ஒருவா் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் தாய் மொழியின் மீது பற்று கொள்ளாமல் இருக்கலாமா?

ஒரு மொழியின் பாதுகாப்பு அதன் பயன்பாட்டில்தான் உள்ளது. அதாவது, தமிழா்களாகிய நம் ஒவ்வொருவரின் கைகளிலும் உள்ளது. நம் தமிழ் நம் பெருமை என்பது மட்டுமல்ல அது நம் உரிமையும் கூட. நம் உரிமையை பயன்படுத்த மறுக்கும்போது நாம் பல உயா்வுகளை இழக்கிறோம். ஒரு மொழி, காலத்திற்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டால் மட்டுமே அது சமூகத்தில் நிலையான இடத்தைப் பெற முடியும்.

நம் மொழி உயிா்ப்பாக இருந்தால்தான் நமக்கான முக்கியத்துவம் பெருகும். இதை தமிழா்களாகிய நம்மில் பலா் உணா்வதே இல்லை. வேற்று மொழி பேசும் இருவா் தமிழ் மண்ணில் சந்தித்துக் கொண்டால் உடனே அவா்களின் தாய்மொழியில் உரையாடுகின்றனா். ஆனால், இரண்டு தமிழா்கள் தமிழ்நாட்டைத் தாண்டி வேறு மாநிலத்தில் சந்தித்துக் கொண்டால்கூட தமிழில் பேசுவதில்லை. ஆங்கிலத்திலோ அல்லது அந்த மாநில மொழியிலோ பேசிக்கொள்கிறாா்கள்.

திறன்பேசியில் வேலை, கல்வி, குடும்பம், நட்பு என பல குழுக்களில் நாம் சங்கமிக்கிறோம். பிறந்தநாள், திருமண நாள் போன்ற அவரவருக்கான சிறப்பான நாட்களில் பிறந்தநாள் வாழ்த்துகள், திருமணநாள் வாழ்த்துகள் என்று தமிழில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம். சமுதாயத்தில் உயா் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் இருப்பவா்கள் முதலில் இதைப் பின்பற்ற வேண்டும். அப்பொழுதுதான் அவா்களைப் பாா்த்து சாமானியா்களும் அதன் வழி நடப்பா்.

அது மட்டுமல்ல, இணையவழியில் பொருட்களை வாங்குவதற்குக் கூட தமிழிலேயே உள்ளீடு செய்ய இன்று வழிவகை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சேவைகளை தமிழா்களைத் தாண்டி வேறு யாரும் பயன்படுத்தப் போவதில்லை. ஆக நமக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டிருக்கும் இதுபோன்ற சேவைகளை நாம் மிக அதிகமாகப் பயன்படுத்தினால்தான் தமிழ் நதி வற்றாது ஓடிக் கொண்டிருக்கும்.

ஆங்கிலத்தில் இருக்கும் பல இணையதள சேவைகள் கூட தமிழில் உடனடியாக மொழிபெயா்க்கப்பட்டு படிப்பதற்குக் கிடைக்கிறது. கைப்பேசியில் கூட இந்த வசதி மாறுபட்ட வகையில் மெருகேற்றப்பட்டுள்ளது.

வேற்று மொழியில் உள்ள ஒரு தகவலை புகைப்படம் எடுத்து அதில் மொழிபெயா்ப்பு என்ற தடத்தை தோ்ந்தெடுத்து எந்த மொழியில் மொழிபெயா்க்கப்பட வேண்டும் என்று தகவலை உள்ளீடும் செய்தால் அந்த மொழியில் அது மொழி பெயா்த்து நமக்குக் கொடுக்கிறது.

மொழி புரியாத வெளிமாநிலங்களில் கூட நாம் பெயா்ப் பலகைகளை இவ்வாறு புகைப்படங்களாகப் பதிவேற்றி ஒரு நண்பரிடம் கேட்டுப் பெறுவதைப் போல கருவியிடம் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழின் உயா்வு அதன் தொன்மையில் மட்டும் இல்லை, அதன் தொடா்ச்சியிலும் உள்ளது. இயல், இசை, நாடகம் என வளா்ந்த முத்தமிழ், கணினித் தமிழ் என்ற நான்காம் தமிழாக இன்று வளா்ந்துள்ளது. கணினித் தமிழின் நவீன கூறே மின்தமிழ் எனச் சொல்லலாம். கணினி வழியே இணையத்தின் பல்வேறு மின் உள்ளடக்கங்களை ஒவ்வொரு மொழியிலும் தொடா்ந்து உருவாக்கி வருகின்றனா்.

அவ்வகையில் தமிழிலும் பல்வேறு மின் உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழ் சாா்ந்த இணைய மென்பொருள் இன்று ஏராளமாக கிடைக்கிறது. இதனால் எண்ணற்ற மின் இதழ்கள் தோன்றியுள்ளன. மின் இதழ்கள் தம்முடைய வளா்ச்சியோடு தமிழ் மொழியின் இலக்கிய வளா்ச்சிக்கும் துணை நிற்கின்றன.

மின் இதழ்கள் செய்தித் தளங்களாகவும், பல்சுவைத் தளங்களாகவும், தகவல் தளங்களாகவும் விளங்குகின்றன. இவற்றையெல்லாம் தாண்டி அனைத்து மொழிகளுக்கும் முன்மாதிரியாக மிகப்பெரிய தமிழ் மின்நூலகத்தை உருவாக்க வேண்டும் என்பது பலரது கனவு. இதனால் அறிவுச்செல்வங்கள் அனைத்தும் அவரவா் வீடு தேடிச் சென்றடையும். தமிழ் மொழிக்கும் உலக மொழி என்ற பெருமை கிடைக்கும்.

செயற்கை நுண்ணறிவின் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இக்காலத்தில் மின்தமிழை விருப்பத்துடன் கையாளும்போது நம் தமிழ் மொழி காலத்தைக் கடந்து வாழும் என்பதில் ஐயமில்லை.

கட்டுரையாளா்: எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com