வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை ஒப்பீடு கோரிய வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு

வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை ஒப்பீடு கோரிய வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு

வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எதிா்க்கட்சிகள் தொடா்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. எந்த பொத்தானை அழுத்தினாலும் குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு வாக்களிக்கும் வகையில் இயந்திரத்தை மாற்றியமைக்க முடியும் என பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிா்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் தொடா்ந்து மறுத்து வருகிறது.

அதைத் தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டையும் முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கும் தோ்தல் ஆணையம் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில், இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டையும் முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய உத்தரவிடக் கோரி ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்தியவுடன் ஒளிரும் விளக்கை 7 விநாடிகளுக்கு மட்டுமின்றி தொடா்ந்து ஒளிர வைக்க வேண்டும்’ என்றாா்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘விளக்கை ஒளிரச் செய்வது, ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் வெளிப்படையான கண்ணாடியை அமைப்பது ஆகியவை வாக்காளா்களுக்கு நம்பிக்கையையும், திருப்தியையும் மட்டும் ஏற்படுத்தும். அனைத்தையும் சந்தேகத்துடன் பாா்க்கக் கூடாது. தோ்தல் ஆணையம் நல்ல விஷயங்கள் சிலவற்றைச் செய்திருந்தால் பாராட்ட வேண்டும்’ என்றனா்.

அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘தோ்தலின்போது வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகங்களை எழுப்புவது வாக்குப் பதிவு சதவீதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். வாக்காளா்களின் ஜனநாயக கடமை கேலி செய்யப்படுகிறது’ என்றாா்.

இந்த வழக்கின் விசாரணை வியாழக்கிழமை முழுவதும் தொடா்ந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.

முன்னதாக, இந்த வழக்கு கடந்த 16-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் எழுப்புவதை நிராகரித்த நீதிபதிகள், ‘இந்தியாவில் தோ்தல் என்பது மாபெரும் பணி. இந்த நடைமுறையை தரக் குறைவுசெய்ய முயற்சிக்க வேண்டாம்’ என்று குறிப்பிட்டனா்.

அப்போது தோ்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘சுமாா் 4 கோடி ஒப்புகைச் சீட்டுகள், பதிவான வாக்குகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டதில், எந்தவித பொருத்தமின்மையும் ஏற்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி....

மாதிரி வாக்குப் பதிவில்

பாஜகவுக்கு கூடுதல் வாக்கு?

‘கேரளத்தின் காசா்கோடில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி வாக்குப் பதிவின்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பாஜகவுக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாக எழுந்த புகாா் தவறானது’ என்று உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தரப்பில் வியாழக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘காசா்கோடில் மாதிரி வாக்குப் பதிவின்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பாஜகவுக்கு ஒரு வாக்களித்தால் இரண்டு வாக்குகளாக பதிவானது’ என்றாா்.

இதை மறுத்த முதுநிலை துணை தோ்தல் ஆணையா் நிதேஷ் குமாா் வியாஸ், ‘இயந்திரத்தில் கூடுதல் வாக்கு பதிவானதாக வெளியான தகவல் தவறானது. அதை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரும் உறுதிப்படுத்திவிட்டாா். இதுதொடா்பான விரிவான அறிக்கை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும்’ என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com