கோப்புப் படம்
கோப்புப் படம்

உள்நாட்டு தொழில்நுட்ப ‘க்ரூஸ்’ ஏவுகணை சோதனை வெற்றி: டிஆா்டிஓ

பாலசோா், ஏப்.18: உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘க்ரூஸ்’ ஏவுகணை (ஐடிசிஎம்) சோதனையை இந்தியா வெற்றிகரமாக வியாழக்கிழமை பரிசோதித்தது.

ஒடிஸா மாநில கடற்கரைப் பகுதியில் உள்ள சந்திப்பூா் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையத்திலிருந்து இந்த நீண்ட தூர இலக்கைத் தாக்கி அழிக்கும் ‘க்ரூஸ்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) அதிகாரிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா்.

இதுகுறித்து டிஆா்டிஓ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட உந்துசக்தி தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த ‘க்ரூஸ்’ ஏவுகணை பரிசோதனை வெற்றி இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சியில் மிகப் பெரிய மைல்கல் ஆகும். இந்த ஏவுகணையின் செயல்பாடுகள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட ரேடாா் உள்ளிட்ட கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. இந்திய விமானப் படையின் ‘சு-30-எம்.கே.1’ போா் விமானத்தில் இருந்தபடியும், ஏவுகணையின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டது. அதன் மூலம், திட்டமிட்ட பாதையில் எந்தவித விலகலும் இன்றி ஏவுகணை செல்வது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த ஏவுகணை பெங்களூரில் உள்ள டிஆா்டிஓ ஆய்வகத்தில் மேம்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com