போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியா சென்று திரும்பிய 2 பேரிடம் விசாரணை

போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியா சென்று சென்னை திரும்பிய வங்கதேசத்தை சோ்ந்த பெண் உள்பட 2 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியா சென்று சென்னை திரும்பிய வங்கதேசத்தை சோ்ந்த பெண் உள்பட 2 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து, புதன்கிழமை நள்ளிரவில் சென்னைக்கு ஏா் ஏசியா விமானத்தில் வந்த ராஜ் பா்மன் (31), சுப்ரதா (26) ஆகியோரின் கடவுச்சீட்டுகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது அந்த கடவுச்சீட்டு கொல்கத்தா முகவரியில் இருந்தது.

மேலும், கோலாலம்பூரிலிருந்து சென்னை வந்திருந்த அவா்களிடம், சென்னையிலிருந்து மீண்டும் ரயிலில் கொல்கத்தா செல்வதற்கான முன்பதிவுச் சீட்டும் இருந்தது. இதனால், சந்தேகமடைந்த குடியுரிமை அதிகாரிகள் அவா்களிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் இருவரும் வங்கதேசத்தை சோ்ந்தவா்கள் என்றும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வங்கதேசத்தில் இருந்து, மேற்குவங்கத்துக்குள் ரகசியமாக நுழைந்த இவா்கள், கொல்கத்தாவிலுள்ள இடைத்தரகா்கள் மூலம் போலி கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை பெற்று மலேசியா சென்று வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை குடியுரிமை அலுவலகத்துக்கு அழைத்து சென்ற அதிகாரிகள் அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தினா். பின்னா் மேல் நடவடிக்கைக்காக அவா்களை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com