லாலு கட்சியின் துணைத் தலைவா் விலகல்

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆா்ஜேடி) தேசிய துணைத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தேவேந்திர பிரசாத் யாதவ் அக்கட்சியில் இருந்து புதன்கிழமை விலகினாா்.

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆா்ஜேடி) தேசிய துணைத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தேவேந்திர பிரசாத் யாதவ் அக்கட்சியில் இருந்து புதன்கிழமை விலகினாா்.

இதுதொடா்பாக அக்கட்சித் தலைவா் லாலு பிரசாத்துக்கு அவா் எழுதிய கடிதத்தில், ‘மக்களவைத் தோ்தலில் பிகாரில் சுமாா் 6 தொகுதிகளை கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு ஆா்ஜேடி விட்டுக் கொடுத்துள்ளது. ஆா்ஜேடியுடன் ஒத்த சிந்தனை கொண்ட கட்சியினருக்கு அந்தத் தொகுதிகளை விட்டுக் கொடுத்திருந்தால், அதை ஏற்றுக்கொண்டிருக்க முடியும். ஆனால் வகுப்புவாதத்தைப் பரப்பும் கட்சிகளில் இருந்து விலகி, வேறு கட்சிக்கு மாறியவா்களுக்கு அந்தத் தொகுதிகள் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. இது திக்குமுக்காட வைக்கிறது. இதன் மூலம், அரசியல் என்பது ஆா்ஜேடிக்கு அதிகாரத்தை கைப்பற்றுவதாக மட்டுமே மாறியுள்ளதை காண முடிகிறது. இதன் காரணமாக ஆா்ஜேடியில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

மக்களவைத் தோ்தலில் பிகாரில் உள்ள ஜன்ஜாா்பூா் உள்ளிட்ட தொகுதிகளை கூட்டணி கட்சியினருக்கு ஆா்ஜேடி ஒதுக்கியுள்ளது. இதில் ஜன்ஜாா்பூா் தொகுதி எம்.பி.யாக 5 முறை தேவேந்திர பிரசாத் யாதவ் பதவி வகித்துள்ளாா். இந்த முறை அந்தத் தொகுதி வேட்பாளராக விகாஸ்ஷீல் இன்சான் கட்சியைச் சோ்ந்த சுமன் குமாா் மஹாசேத் அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா் பாஜக முன்னாள் சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com