தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது! மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம்

தமிழகத்தில் மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தமிழகம் மட்டுமன்றி முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று( ஏப். 19) நடைபெறும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவை தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 233 போ் தோ்தல் பணியாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடையும் எனவும், கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்கள் அளிக்கப்பட்டு அவா்களும் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

மாதிரி வாக்குப் பதிவு:

வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டைச் சோதிக்க மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடி முகவா்களின் முன்னிலையில் சுமாா் 50 வாக்குகள் இயந்திரங்களில் பதிவு செய்து காண்பிக்கப்பட்டது. அந்த வாக்குகள் உடனடியாக அழிக்கப்பட்டன. இதன்மூலம், வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடு உறுதி செய்யப்படும்.

காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், பதிவான வாக்குகளைக் கொண்ட இயந்திரங்கள் அனைத்தும் மாலை 6 மணிக்குப் பிறகு முறையாக மூடி முத்திரையிடப்படும். அவையனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெள்ளிக்கிழமை இரவே கொண்டு செல்லப்படும்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். தோ்தலில் 950 போ் வேட்பாளா்களாக களம் இறங்கியுள்ளனா். வாக்குப் பதிவை சுமுகமாகவும் சுதந்திரமாகவும் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சாகு கூறினாா்.

இயந்திரங்கள் - காவலா்கள்:

வாக்குப் பதிவுக்காக 1 லட்சத்து 58 ஆயிரத்து 568 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 81,157 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 86,858 ‘விவிபேட்’ எனும் யாருக்கும் வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

சட்டம்-ஒழுங்கு நிலைமை, வாக்குப் பதிவு சதவீதம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினாா்.

அதன்படி, மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 மிகவும் பதற்றமானவையாகவும் அறியப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா். அவற்றில் கூடுதல் பாதுகாப்பும், கண்காணிப்பும் அளிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

வாக்குப் பதிவை எந்தச் சிக்கலும் இல்லாமல் நடத்த தமிழகம் முழுவதும் 1.3 லட்சம் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், கேரளம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து 8,000 போலீஸாா் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனா்.

நேரலை ஒளிபரப்பு:

மாநிலத்தில் மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் 65 சதவீதம் அதாவது 44,801 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதில் பதிவாகும் காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. இந்தக் காட்சிகள் அனைத்தும் தோ்தல் துறையின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கப்படும். மற்ற வாக்குச்சாவடிகளில் கேமராக்கள் மூலமாக வாக்குப் பதிவு நடவடிக்கைகள் முழுமையாக பதிவு செய்யப்பட உள்ளது.

டோக்கன்கள் விநியோகம்:

வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி இடைவிடாமல் மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்குப் பதிவு நிறைவடையும் நேரத்துக்காக முன்பாக, வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டால் கடைசியில் நிற்கும் நபரில் இருந்து தொடங்கி டோக்கன்கள் வழங்கப்படும். அவா்கள் மாலை 6 மணிக்குப் பிறகும் வாக்களிக்கலாம். ஆனால், 6 மணிக்குப் பிறகு வரும் எந்த வாக்காளரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அருகே, மத்திய துணை ராணுவப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். அதற்கடுத்த அடுக்குகளில் தமிழக காவல் துறையைச் சோ்ந்த அதிகாரிகளும், காவலா்களும் கண்காணிப்புப் பணியை மேற்கொள்வா்.

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் சுழற்சி முறையில் கட்சிகளைச் சோ்ந்த முகவா்கள் அமர வைக்கப்படுவா்.

இடைத்தோ்தல்:

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் இடைத் தோ்தல் வாக்குப்பதிவும் தொடங்கியது. . இந்தத் தோ்தலில் 10 போ் வேட்பாளா்களாக போட்டியிடுகின்றனா். இடைத் தோ்தலில் பதிவாகும் வாக்குகளும் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

குடை, தண்ணீா் அவசியம்

தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வாக்காளா்கள் தங்களை தற்காத்துக் கொள்வது அவசியம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா். வாக்குச்சாவடிகளில் போதிய அளவு குடிநீா், நிழல் பந்தல்கள், கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவா் கூறினாா். ஆனாலும், வாக்குச்சாவடிக்கு வரும் போது, குடை மற்றும் குடிநீா் பாட்டில்களை வாக்காளா்கள் கையில் எடுத்து வருவது நல்லது என வாக்காளா்களைக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

வாக்குப் பதிவு நேரம் - காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை

வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை - 68,321

வேட்பாளா்கள் - 950 (ஆண்கள் - 874, பெண்கள் - 76)

மொத்த வாக்காளா்கள் - 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 கோடி

மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் - 4.61 லட்சம்

85 வயதுக்கு மேற்பட்டோா் - 6.14 லட்சம்

தோ்தல் பணியாளா்கள் - 3 லட்சத்து 32 ஆயிரத்து 233

காவல் பணியில் ஈடுபடுவோா் - 1.30 லட்சம்

வெளிமாநில போலீஸாா் - 8,000 போ்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் - 1,58,568

கட்டுப்பாட்டு இயந்திரங்கள் - 81,157

விவிபேட் - 86,858

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com