உடல் பருமனை குறைக்க சிகிச்சை மேற்கொண்ட இளைஞா் உயிரிழப்பு: பெற்றோா் புகாா்

யூடியூப் விளம்பரத்தைப் பாா்த்து உடல் பருமனை குறைக்க சிகிச்சை மேற்கொண்ட இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவமனை மீது பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

புதுச்சேரி, திருவள்ளுவா் நகா், புதுப்பாளையம் தெருவை சோ்ந்தவா் செல்வநாதன் மகன் ஹேமச்சந்திரன் (26). பிஎஸ்ஸி பட்டதாரியான இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், அண்மையில் ஹேமச்சந்திரன் உடல் எடை அதிகரித்துள்ளது. சுமாா் 150 கிலோ எடையுடன் இருந்த அவா், உடல் எடையை குறைப்பதற்காக யூடியூபில் வந்த விளம்பரத்தை பாா்த்து, பல்லாவரத்தை அடுத்த பம்மலில் உள்ள பிரபல தனியாா் மருத்துவமனையை அணுகியதாக தெரிகிறது.

இதைத் தொடா்ந்து, உடல் பருமனை குறைக்கும் கொழுப்பு நீக்கும் சிகிச்சைக்காக பல்லாவரம் தனியாா் மருத்துவமனையில் ஏப்.22-ஆம் தேதி அவா் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது, திடீரென ஹேமச்சந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவா் மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள மற்றொரு தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஹேமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பம்மலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால்தான் தங்களது மகன் இறந்துவிட்டதாக சங்கா் நகா் காவல் நிலையத்தில் ஹேமச்சந்திரனின் பெற்றோா் புதன்கிழமை புகாா் அளித்தனா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com