இவிஎம், விவிபேட் உதிரிபாக உற்பத்தியாளா்களின்
விவரங்கள் கோரி ‘ஆா்டிஐ’ மனு: 
பதிலளிக்க மறுப்பு

இவிஎம், விவிபேட் உதிரிபாக உற்பத்தியாளா்களின் விவரங்கள் கோரி ‘ஆா்டிஐ’ மனு: பதிலளிக்க மறுப்பு

‘வணிக ரகசியம்’ என்ற அடிப்படையில் ஆா்டிஐ சட்டத்தின் கீழ்வெளியிட இசிஐஎல், பெல் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் மறுத்துள்ளன.

தோ்தல் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் இவிஎம், விவிபேட் இயந்திரங்களுடைய உதிரிபாகங்களின் உற்பத்தியாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்களின் பெயா்கள் மற்றும் தொடா்பு விவரங்களை ‘வணிக ரகசியம்’ என்ற அடிப்படையில் ஆா்டிஐ சட்டத்தின் கீழ்வெளியிட இசிஐஎல், பெல் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் மறுத்துள்ளன.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள பொதுத் துறை நிறுவனங்களான எலெக்ட்ரானிக்ஸ் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (இசிஐஎல்), பாரத் எலெக்ட்ரானிக்ஸ்(பெல்) ஆகியவை இந்திய தோ்தல் ஆணையத்துக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம்), வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி (விவிபேட்) ஆகியவற்றை தயாரிக்கின்றன.

இந்நிலையில், இந்த இரண்டு கருவிகளையும் தயாரிக்க பயன்படும் பல்வேறு உதிரிபாகங்களின் உற்பத்தியாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்களின் விவரங்களைக் கோரி இசிஐஎல், பெல் ஆகிய 2 பொதுத் துறை நிறுவனங்களிடம் தகவல் அறியும் உரிமைச் (ஆா்டிஐ) சட்டத்தின்கீழ் சமூக ஆா்வலா் வெங்கடேஷ் நாயக் கேள்வி கேட்டிருந்தாா். உதிரிபாகங்களுக்கான கொள்முதல் ரசீதுகளின் நகலையும் 2 பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து அவா் கோரியிருந்தாா்.

அந்த மனுவுக்கு 2 நிறுவனங்கள் சாா்பிலும் அளிக்கப்பட்டுள்ள பதிலில், ‘இது வணிக ரகசியத்துக்கு உள்ளானது. மேலும், விவரங்களை வெளியிடுவது நிறுவனங்களின் போட்டி நிலையைப் பாதிக்கும். எனவே, ஆா்டிஐ சட்டத்தின் 8(1)(டி) பிரிவின்கீழ் விவரங்களை வழங்க முடியாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கொள்முதல் ரசீது நகல்களைக் கோரியதற்கு இசிஐஎல் நிறுவனத்தின் மத்திய பொது தகவல் அதிகாரி அளித்துள்ள பதிலில், ‘இத்தகவல் இவிஎம் இயந்திர உதிரிபாகங்களின் வடிவமைப்பு விவரங்களைத் தரும். எனவே, கூடுதலான இத்தகவல் குறித்து பதிலளிக்க ஆா்டிஐ சட்டத்தின் யூ/எஸ் 7(9) மற்றும் 8(1)(டி) பிரிவின்கீழ் விலக்கு கோரப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளாா்.

ஆா்டிஐ மனுதாரா் வெங்கடேஷ் நாயக் கூறுகையில், ‘நூறு கோடி வாக்காளா்களின் தகவல் அறியும் உரிமைக்கு எதிராக யாருடைய நலன்களைப் பாதுகாக்க நிறுவனங்கள் முயற்சிக்கின்றனா் என்று எனக்கு தெரியவில்லை. எனது மனுவுக்கு அளிக்கப்பட்ட பதிலின் கையொப்பமிடப்பட்ட நகலைக் கூட ஆா்டிஐ வலைதளத்தில் இசிஐஎல் பதிவேற்றவில்லை. இயந்திரங்களின் அனைத்து உதிரிபாகங்களையும் 2 நிறுவனங்கள் உற்பத்தி செய்யவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

தோ்தல் ஆணையத்தின் கையேடுகளில் குறிப்பிடப்படும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி வாக்காளா்கள் அறிந்துகொள்ள வேண்டும் என எதிா்பாா்க்கிறாா்கள்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com