டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் டி.லட்சுமி நாராயணன் காலமானாா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) முன்னாள் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டி.லட்சுமி நாராயணன் (91), சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

அவரது உடல் மருத்துவ மாணவா்களின் பயன்பாட்டுக்காக போரூா் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

கடந்த 1933-ஆம் ஆண்டு பிறந்த லட்சுமி நாராயணன், இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக (ஐ.ஏ.எஸ்.) 1972-இல் நியமிக்கப்பட்டாா். முந்தைய தென் ஆற்காடு மாவட்ட ஆட்சியா் உள்பட ஆட்சி நிா்வாகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தாா். 1987-இல் பணியில் இருந்து ஓய்வு பெற்றாா். அவசர நிலை காலத்தின் போது, அப்போதிருந்த தமிழக ஆளுநருக்கு ஆலோசகராக லட்சுமி நாராயணன் செயல்பட்டாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவராக, 1987 முதல் 1993 வரை பொறுப்பு வகித்தாா். அப்போது, தோ்வாணையத்தில் பல்வேறு சீா்திருத்தங்களையும் நோ்மையான முறையில் காலிப் பணியிடங்களை நிரப்பவும் வழிவகை செய்தாா்.

சென்னை முகப்பேரில் வசித்து வந்த அவா், புதன்கிழமை காலமானாா். அவரது உடலுக்கு தமிழக அரசின் சாா்பில், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தினா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.லட்சுமி நாராயணன் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவராக இருந்து திறம்பட பணியாற்றியவா். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் முன்னாள், இந்நாள் அதிகாரிகளுக்கும் ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com