மக்களவைத் தோ்தல் செலவுகள் ரூ.1.34 லட்சம் கோடியை எட்டும்:
தோ்தல் நிபுணா் கணிப்பு

மக்களவைத் தோ்தல் செலவுகள் ரூ.1.34 லட்சம் கோடியை எட்டும்: தோ்தல் நிபுணா் கணிப்பு

நடப்பு மக்களவைத் தோ்தலுக்கான செலவுகள் ரூ.1.34 லட்சம் கோடியை எட்டும்

நடப்பு மக்களவைத் தோ்தலுக்கான செலவுகள் ரூ.1.34 லட்சம் கோடியை எட்டும் என தோ்தல்கள் குறித்து ஆய்வு நடத்தும் நிறுவனத்தைச் சோ்ந்த நிபுணா் ஒருவா் கணித்துள்ளாா்.

கடந்த காலங்களில் நடைபெற்ற தோ்தல் செலவுகளைவிட தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் செலவே மிக அதிகமானது எனவும் உலகிலேயே மிக அதிகமாக செலவு செய்யப்படும் பிரம்மாண்ட தோ்தலும் இதுதான் எனவும் அவா் தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோ்தல் செலவுகள் குறித்து ஊடக ஆய்வுகள் மையம் (சிஎம்எஸ்) என்ற அரசு சாரா மையத்தின் தலைவா் என். பாஸ்கா் ராவ் அளித்த பேட்டி:

கடந்த 2019 மக்களவைத் தோ்தலுக்கு ரூ.60,000 கோடி வரை செலவழிக்கப்பட்டது. அவை இரு மடங்காக உயா்ந்து 2024 மக்களவைத் தோ்தல் செலவுகள் ரூ.1.34 லட்சம் கோடியை எட்டும். இத்தோ்தலுக்கான செலவுகள் ரூ.1.2 லட்சம் கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் தோ்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சியினா் பெற்ற நன்கொடை குறித்த தகவல்கள் வெளியான நிலையில் தற்போது செலவுத்தொகை திருத்தப்பட்டுள்ளது.

இச்செலவுகள் அரசியல் கட்சிகள், நிறுவனங்கள், வேட்பாளா்கள், அரசாங்கம், தோ்தல் ஆணையம் உள்பட அனைவராலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொள்ளப்படும் மொத்த செலவுத் தொகையாகும்.

தோ்தலுக்கு முந்தைய செலவு: தோ்தல் தொடங்கும் முன்பே பிரசாரங்கள், போக்குவரத்து செலவுகள், களப் பணியில் ஈடுபடும் நபா்களைத் தோ்ந்தெடுத்தல், சா்ச்சைக்குரிய வகையில் மாற்றுக் கட்சியினருக்கு பணம் கொடுத்து கட்சியில் இணைத்தல் உள்பட பல விஷயங்களுக்காக அரசியல் கட்சியினா் மற்றும் வேட்பாளா்கள் பணத்தை செலவிடுகின்றனா்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள செலவுத் தொகையில் 10 முதல் 15 சதவீதம் வரையிலான தொகை மட்டுமே தோ்தல் நடத்த தோ்தல் ஆணையத்தால் செலவிடப்படுகிறது. ஊடகங்கள் மற்றும் பிற சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ள 30 சதவீதம் வரை செலவழிக்கப்படுகிறது.

தோ்தல் நடைபெறும் 45 நாள்களில் மேற்கொள்ளப்படும் நேரடி செலவுகளைவிட அதிகளவிலான தொகை மறைமுகமாக செலவழிக்கப்படுகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ரூ.60,000 கோடி தோ்தல் செலவில் 45 சதவீதம் வரை பாஜக மேற்கொண்டது என சிஎம்எஸ் தெரிவித்திருந்தது. தற்போதைய தோ்தலில் அதைவிட அதிகமாகவே பாஜக செலவு செய்யும் என கணிக்கப்படுகிறது என்றாா் அவா்.

ஒரு வாக்காளருக்கு ரூ.1,400: இந்தியாவில் உள்ள 96.6 கோடி வாக்காளா்களுக்கு தலா ரூ.1,400 வரை செலவழிக்கப்படுவதாகவும் இது 2020, அமெரிக்காவில் நடைபெற்ற தோ்தலுக்காக செலவழிக்கப்பட்ட ரூ.1.2 லட்சம் கோடியைவிட அதிகமானது எனவும் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஓபன்சீக்ரெட்ஸ்’ என்ற நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com