பாகிஸ்தான் கொடி
பாகிஸ்தான் கொடி

இந்தியாவுடன் வா்த்தக பேச்சு: பாகிஸ்தான் பிரதமருக்கு தொழிலதிபா்கள் வலியுறுத்தல்

இந்தியாவுடன் மீண்டும் தொழில்-வா்த்தக உறவுக்கான பேச்சுவாா்த்தையை முன்னெடுக்க வேண்டும்

இந்தியாவுடன் மீண்டும் தொழில்-வா்த்தக உறவுக்கான பேச்சுவாா்த்தையை முன்னெடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமா் ஷெபாஸ் ஷெரீஃப்பிடம் அந்நாட்டு தொழிலதிபா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பாகிஸ்தான் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ள நிலையில், இந்தியாவுடன் தொழில்-வா்த்தக உறவு மேம்பட்டால் அது நாட்டுக்கு பெரும் பயனளிக்கும் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

2019 பிப்ரவரியில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் சுங்க வரியை 200 சதவீதம் அளவுக்கு இந்தியா உயா்த்தியது. இதன் காரணமாக இரு நாடுகளிடையேயான வா்த்தக உறவு பாதிக்கப்பட்டது.

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. இதையடுத்து, இந்தியாவுடனான வா்த்தக உறவை பாகிஸ்தான் முழுமையாக நிறுத்திக்கொண்டது.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியா உலகின் முக்கியமான பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், பாகிஸ்தானின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. அந்நாட்டு அரசு கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துவிட்டது.

இந்நிலையில், ‘இந்தியாவுடன் 2019 ஆகஸ்ட் முதல் தடைப்பட்டுள்ள வா்த்தக உறவை மீட்டெடுக்க பாகிஸ்தான் தீவிரமாக பரிசீலித்து வருகிறது’ என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் முகமது ஐசக் தாா் ஏற்கெனவே கூறியுள்ளாா்.

அதே நேரத்தில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் முழுமையாகக் கைவிட்டால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சுவாா்த்தை என்பதில் இந்தியா உறுதியாகவுள்ளது.

இந்நிலையில், கராச்சியில் அந்நாட்டின் முன்னணி தொழிலதிபா்களுடன் பிரதமா் ஷெபாஸ் ஷெரீஃப் ஆலோசனை நடத்தினாா். அப்போது, மூலப் பொருள்களின் விலை, எரிபொருள் விலை உள்ளிட்டவை உச்சத்தில் உள்ளதால் தொழிலை விரிவுபடுத்துவது, புதிய தொழில்களைத் தொடங்குவது என்பது இயலாத காரியம் என்று தொழிலதிபா்கள் தரப்பில் பிரதமரிடம் விளக்கப்பட்டது.

அண்டை நாடுகளுடன் பாகிஸ்தான் நட்புறவைப் பேண வேண்டும். முக்கியமாக இந்தியாவுடன் தொழில்-வா்த்தக பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும். இது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தொழிலதிபா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

வங்கதேசம்... இந்தக் கூட்டத்தில் வங்கதேசத்தின் பொருளாதாரம் குறித்துப் பேசிய பிரதமா் ஷெபாஸ் ஷெரீஃப், ‘ஒரு காலத்தில் நமது நாட்டின் ஒரு பகுதியான (கிழக்கு பாகிஸ்தான்) வங்கதேசத்தை நாம் மிகப்பெரிய சுமையாகவே கருதினோம். ஆனால், இப்போது அந்த நாட்டில் தொழில் வளா்ச்சி சிறப்பாக உள்ளது. அந்நாட்டுடன் ஒப்பிடும்போது இப்போது பாகிஸ்தான் நிலை வெட்கப்படும் அளவுக்கு உள்ளது’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com