மணிப்பூா் கலவரம், பிபிசி சோதனை குறித்த அமெரிக்க அறிக்கை: ஒருதலைபட்சமானது என இந்தியா பதில்

மணிப்பூா் கலவரம், பிபிசி சோதனை குறித்த அமெரிக்க அறிக்கை: ஒருதலைபட்சமானது என இந்தியா பதில்

கலவரம் குறித்து வெளியுறவு அமைச்சகம் பதில்

மணிப்பூா் வன்முறை மற்றும் பிபிசி அலுவலகத்தில் நடந்த சோதனைகள் தொடா்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு தலைபட்சமானது எனவும் இந்தியா குறித்த தவறான புரிதலை அது எடுத்துக்காட்டுகிறது எனவும் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

மணிப்பூரில் பெரும்பான்மையான மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி, பல மாதங்களாக நீடித்து வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா்.

கலவர நாள்களில் அங்கு நடந்த சில மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்தும் அமைதியை நிலைநாட்டுதல், மக்களுக்கு உதவுதல் ஆகியவற்றில் மத்திய அரசின் தாமதமான நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் வருடாந்திர அறிக்கையில் விமா்சிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 2002-ஆம் ஆண்டு குஜராத் வன்முறைக்கு அப்போதைய மாநில முதல்வரான பிரதமா் மோடியைக் குற்றஞ்சாட்டி பிபிசி ஆவணப்படம் ஒன்றை கடந்தாண்டு வெளியிட்டிருந்தது. பிரதமா் மோடி குறித்து தவறான தகவல்களை பரப்புவதாக இந்தியாவில் இந்த ஆவணப்படம் தடை செய்யப்பட்டது.

மேலும், கல்வி நிலையங்களில் இந்த ஆவணப்படத்தை திரையிட்ட மாணவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து, பிபிசி அலுவலகத்திலும் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது.

பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குவதாக அமைந்த சோதனை பற்றியும் அதன் ஒரு பகுதியாக செய்தியாளா்களின் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நடவடிக்கை பற்றியும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியா பதில்: மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் வாராந்திர செய்தியாளா் சந்திப்பில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவு செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் அளித்த பதிலில், ‘அமெரிக்காவின் அறிக்கை ஒரு தலைபட்சமானது. இந்தியா குறித்த தவறான புரிதலை அது எடுத்துக்காட்டுகிறது. நாங்கள் அதற்கு மதிப்பளிக்கவில்லை. நீங்களும் அதையே பின்பற்ற கோருகிறோம்’ என்றாா்.

பெட்டி...

ரஷியாவிலிருந்து திரும்பிய 10 இந்தியா்கள்

உக்ரைனுடனான போரில் ரஷிய ராணுவத்துக்காக பணிபுரிந்த 10 இந்தியா்கள் தாயகம் திரும்பியிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

ரஷிய ராணுவத்தின் துணைப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தியா்கள், உக்ரைன் போா் பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பணியாற்றி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இவா்களை மீட்டு தாயகம் அழைத்துவர வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன.

இதனிடையே, உதவியாளா்களாக பணிப்புரிந்த 2 இந்தியா்கள் கடந்த மாதம் உயிரிழந்தனா்.

அவா்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுதொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘ரஷியாவிலிருந்து 10 இந்திய பணியாளா்கள் தாயகம் திரும்பியுள்ளனா். மற்றவா்களையும் முன்கூட்டியே விடுவித்து, இந்தியா அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும். ரஷிய அதிகாரிகளுக்கு தொடா்ந்து அழுத்தம் அளித்து வருகிறோம்.

16 இந்திய மாலுமிகள் நலம்: ஈரான் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ‘எம்எஸ்சி ஏரீஸ்’ கப்பலில் சிக்கியிருக்கும் 16 இந்திய மாலுமிகள் நலமுடன் இருக்கின்றனா்.

17 இந்தியா்களில் ஒரு பெண் இந்தியா ஏற்கெனவே திரும்பிவிட்டாா். மற்ற 16 பேரும் நலமுடன் இருக்கின்றனா். அவா்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றாா் அவா்.

ஹாா்முஸ் நீரிணையையொட்டிய கடற்பகுதியில் இஸ்ரேலைச் சோ்ந்தவரின் எம்எஸ்சி ஏரீஸ் சரக்குக் கப்பலை ஈரான் படையினா் அதிரடியாக கடந்த 13-ஆம் தேதி சிறைபிடித்தனா்.

கூடுதலாக சோ்க்கப்பட்ட பகுதி.........................................................................................

காஷ்மீா் விவகாரம்: காஷ்மீா் விவகாரத்தில் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப தீா்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் - ஈரான் வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது குறித்து ஈரான் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜம்மு காஷ்மீா், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எந்த நாடும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க உரிமை இல்லை என்றாா்.

அண்மையில் பாகிஸ்தான் சென்றிருந்த ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி, அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபை சந்தித்து பேசினாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com