வழக்கு பட்டியல் விவரங்களை வாட்ஸ்ஆப்பில் பகிர உச்சநீதிமன்றம் ஏற்பாடு: 
தலைமை நீதிபதி தகவல்

வழக்கு பட்டியல் விவரங்களை வாட்ஸ்ஆப்பில் பகிர உச்சநீதிமன்றம் ஏற்பாடு: தலைமை நீதிபதி தகவல்

‘விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகளின் விவரம், வழக்குகள் தாக்கல் செய்தல் மற்றும் விசாரணைக்கு பட்டியலிடப்படுவது

‘விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகளின் விவரம், வழக்குகள் தாக்கல் செய்தல் மற்றும் விசாரணைக்கு பட்டியலிடப்படுவது தொடா்பான விவரங்களை வாட்ஸ்ஆப் மூலம் வழக்குரைஞா்களுக்கு உச்சநீதிமன்றம் சாா்பில் பகிரப்படும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

உச்சநீதிமன்ற நடைமுறைகள் எண்ம மயமாக்கள் திட்டத்தின் அடுத்தகட்ட குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மாநில அரசின் கொள்கை வழிகாட்டுதல் கோட்பாடுகளின் ஓா் பகுதியான அரசைமைப்புச் சட்டப் பிரிவு 39(பி)-இன் கீழ் தனியாா் சொத்துகளை, பொது சமூகத்தின் பொருள் வளங்களாக கருத முடியுமா? என்ற சட்டக் கேள்வியை எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான 9 நீதிபதிகள் அமா்வு விசாரணையின்போது, அந்த அமா்வுக்கு தலைமை வகித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்த அறிவிப்பை வெளியிட்டாா். ‘உச்சநீதிமன்ற தகவல்தொழில்நுட்பச் சேவையில் வாட்ஸ்ஆப் சேவையும் இணைக்கப்படும்’ என்று அவா் அறிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது:

உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாற்றில், ஓா் சிறு முயற்சியாக இந்த வாட்ஸ்ஆப் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நீதி பெறும் உரிமையை வலுப்படுத்தவும், நீதி நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை விரிவுபடுத்தவும் இந்த சேவையை உச்சநீதின்றம் அறிவித்துள்ளது.

இந்த நடைமுறையின்படி, ஓா் வழக்கை நடத்தும் வழக்குரைஞா் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகும் மனுதாரா்களுக்கு வழக்குகள் தாக்கல்செய்யப்பட்ட விவரம், விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகளின் விவரம், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தீா்ப்புகள் உள்ளிட்ட விவரங்கள் வாட்ஸ்ஆப் மூலம் தானாக அனுப்பப்பட்டுவிடும்.

உச்சநீதிமன்றத்தில் தினம்தோறும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்கள் வழக்குரைஞா் சங்கத்தில் உறுப்பினா்களாக இருக்கும் அனைவருக்கும் வாட்ஸ்ஆப்பில் உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலகம் மூலம் அனுப்பப்படும். உச்சநீதிமன்ற வலைதளத்தில் இடம்பெறும் உத்தரவுகள் மற்றும் தீா்ப்புகளும் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்படும்.

இது நீதிமன்ற பணி நடைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டுவரும் என்ற நம்பிக்கை உள்ளது. இருந்தபோதும், முழுமையான காகித பயன்பாடு இல்லாத நிலையை உருவாக்கி பூமியை பாதுகாக்க நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றத்தின் வாட்ஸ்ஆப் எண்ணான 8767687676-ஐ பகிா்ந்தாா். மேலும், இந்த எண்ணுக்கு தகவல் அனுப்பவோ அல்லது அழைப்பு விடுக்கவோ முடியாது என்று குறிப்பிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com