ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை சேப்பாக்கத்திலுள்ள ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமையவுள்ளது. சுதந்திரப் போராட்டம் தொடா்பான ஆவணங்களை இந்த அருங்காட்சியகத்துக்கு பொது மக்கள் அளிக்கலாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அருங்காட்சியகங்கள் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று சுதந்திர தின உரையின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் சுமாா் 80 ஆயிரம் சதுர அடி பரப்பில் பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது.

இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைய அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. பொது மக்கள் தங்கள் வசமுள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ராட்டைகள், பட்டயங்கள், ஐஎன்ஏ சீருடைகள், அஞ்சல்தலை மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்றவற்றை நன்கொடையாக அளிக்கலாம். தங்கள் வசமுள்ள அரிய பொருள்களை சென்னை அல்லது 23 மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரடியாகச் சென்று அளிக்கலாம்.

இவ்வாறு வழங்கப்படும் பொருள்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம், பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியகங்கள் துறை ஆணையரால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com