ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஏரி, குளங்களைத் தூா்வார மாநில அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் மாநில அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் என்.குணசேகரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து மாநிலச் செயலா் பாலகிருஷ்ணன் கூறியது:

தமிழகத்தில் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல ஏரிகளின் நீா் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கடலூா், ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த நிலையில், குடிநீா்ப் பற்றாக்குறையைப் போக்க முதல்வா், அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வறட்சி பாதித்த 22 மாவட்ட மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்வதற்குரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

இருப்பினும் தமிழக மக்களுக்கு தங்கு தடையின்றி சீரான குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் வீராணம் ஏரி உள்பட பல ஏரிகள், குளங்கள் காய்ந்துள்ளன.

எனவே, ஏரி, குளங்களை தூா்வாருவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, போா்க்கால அடிப்படையில் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com