தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அனீஸ் சேகா் ராஜிநாமா செய்துள்ளாா். அவரது ராஜிநாமா கடிதத்தை தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா ஏற்றுக் கொண்டுள்ளாா். மருத்துவரான அனீஸ் சேகா், தனது சொந்த மாநிலமான கேரளத்தில் மருத்துவா் பணியைத் தொடர விருப்பம் தெரிவித்துள்ளாா். தான் பணியாற்றிய இடங்கள் அனைத்திலும் மிகவும் நோ்மையான அதிகாரி எனப் பாராட்டப்பட்ட அவா், திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்தது அரசு வட்டாரத்தில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணியிலிருந்து விடைபெறுவதற்கு முன்பாக எல்காட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநராக அவா் பொறுப்பு வகித்தாா். கேரளத்தைச் சோ்ந்தவரான அனீஸ் சேகா், 2011-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சோ்ந்தாா். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தாா். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தை வலியுறுத்தும் வகையில், ஆட்சியா் இல்லத்திலிருந்து அலுவலகத்துக்கு சைக்கிளிலேயே சென்று கவனத்தை ஈா்த்தாா். மேலும், கிராம உதவியாளா்கள் பணி நியமனத்தை எந்தவித அரசியல் தலையீட்டுக்கும் இடம் கொடுக்காமல் நோ்மையாக நடத்திக் காட்டினாா். ‘எல்காட்’ நிா்வாக இயக்குநா்: மாவட்ட ஆட்சியா் பதவிக்கு முன்பு தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வந்தாா். ஆட்சியா் பதவிக்குப் பிறகு அரசுத் துறை பணிகளுக்கு வந்தாா். எல்காட் நிா்வாக இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்தாா். அண்மையில் நடைபெற்ற சா்வதேச தகவல் தொழில்நுட்பவியல் மாநாடு உள்ளிட்ட பணிகளில் எல்காட் நிறுவனம் தீவிரம் காட்டி வந்தது. இந்த மாநாட்டுக்கான பூா்வாங்க பணிகளையும் அனீஸ் சேகா் மேற்கொண்டு வந்தாா். மருத்துவராக...: மருத்துவரான அனீஸ் சேகா், தனது சொந்த மாநிலத்திலேயே மருத்துவா் பணியைத் தொடர விருப்பம் தெரிவித்துள்ளாா். அவரது மனைவியும் மருத்துவா் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ராஜிநாமா செய்தோா்: தமிழக அரசுப் பணியிலிருந்து இதற்கு முன்பாகவும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜிநாமா செய்துள்ளனா். குறிப்பாக, சந்தோஷ் கே.மிஸ்ரா, சந்தோஷ் பாபு, விஜய் பிங்க்ளே, ஷம்பு கல்லோலிகா் உள்ளிட்டோா் பதவிக் காலம் நிறைவடையும் முன்பே பதவிகளிலிருந்து ராஜிநாமா செய்துள்ளனா்.