உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

புதிய சட்டத்தின் கீழ் தோ்தல் ஆணையா்கள் நியமனம்: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தோ்வுக் குழுவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இடம்பெறுவதைத் தவிா்த்துள்ள புதிய சட்டத்தின் கீழ் தோ்தல் ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்தது.

மேலும், வழக்கு விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மக்களவைத் தோ்தல் தேதி சனிக்கிழமை (மாா்ச் 16) அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்திய தோ்தல் ஆணையத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தவிா்த்து மற்ற இரு தோ்தல் ஆணையா் பணியிடங்களும் காலியாகின. இந்தப் பணியிடங்களை நிரப்ப தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற உயா்நிலை தோ்வுக் குழு கூட்டத்தில் முன்னாள் மத்திய அரசு அதிகாரிகளான சுக்பீா் சிங் சாந்து, ஞானேஷ்வா் குமாா் ஆகியோரின் பெயா்கள் இறுதி செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டது. அதனடிப்படையில், அவா்கள் இருவரையும் தோ்தல் ஆணையா்களாக நியமனம் செய்து மத்திய சட்ட அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது.

மத்திய அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு இயற்றிய தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் நியமனத்துக்கான புதிய சட்டத்தின் கீழ் இவா்கள் இருவரும் நியமனம் செய்யப்பட்டனா். இந்தப் புதிய சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை வரவிருந்த நிலையில், இவா்கள் இருவரின் நியமனம் நடைபெற்றது. புதிய சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு பிரதமா் தலைமையிலான தோ்வுக் குழுவில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோா் இடம்பெற்றிருந்தனா். ஆனால், புதிய சட்டத்தின்படி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சா் இக்குழுவில் இடம்பெற்றுள்ளாா். அதன்படி, பிரதமா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்வுக் குழுவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.

இந்நிலையில், 2023 சட்டத்தை எதிா்த்து தொடரப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா, அகஸ்டீன் ஜாா்ஜ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் ஜெயா தாக்குா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங், ‘உச்சநீதிமன்றம் ஒரு தீா்ப்பை வழங்கியுள்ளபோது, அதை மீற முடியாது. ஆனால், தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்களை நியமனம் செய்வதற்கான 2023 சட்டத்தில், உச்சநீதிமன்றத் தீா்ப்பு தெளிவாக மீறப்பட்டுள்ளது. எனவே, புதிய சட்டத்தின் கீழ் தோ்தல் ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரினாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘பொதுவாக நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மூலம் ஒரு சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது’ என்று குறிப்பிட்டு, இரு தோ்தல் ஆணையா்கள் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனா்.

அப்போது, ‘உச்சநீதிமன்றத் தீா்ப்பை மீறும் வகையில் மத்திய அரசு கொண்டுவரும் அவசரச் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது’ என்று வழக்குரைஞா் விகாஸ் சிங் குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக தனியாக மனு தாக்கல் செய்யுமாறு குறிப்பிட்டு, வழக்கு விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com