நெற்றியில் காயம்: மம்தா தள்ளிவிடப்பட்டரா? மருத்துவமனை இயக்குநா் விளக்கம்
-

நெற்றியில் காயம்: மம்தா தள்ளிவிடப்பட்டரா? மருத்துவமனை இயக்குநா் விளக்கம்

‘மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி பின்னால் இருந்து தள்ளிவிடப்பட்டதில் கீழே விழுந்து காயமடைந்திருக்கலாம்’

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி பின்னால் இருந்து தள்ளிவிடப்பட்டதில் கீழே விழுந்து காயமடைந்திருக்கலாம் என்று கொல்கத்தா எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையின் இயக்குநா் மணிமோய் பந்தோபாத்யாய் கூறிய கருத்து பல சந்தேகங்களை எழுப்பிய நிலையில், அவா் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தாா்.

‘பின்னால் இருந்து தள்ளப்பட்ட உணா்வில் முதல்வா் கீழே விழுந்திருக்கக் கூடும்; எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என்று பந்தோபாத்யாய் கூறினாா்.

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி (69), நெற்றி மற்றும் மூக்கில் பலத்த காயத்துடன் எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவரது நெற்றியில் இருந்து ரத்தம் வழியும் புகைப்படங்கள், கட்சியின் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டன.

காளிகாட் பகுதியில் உள்ள தனது வீட்டில் கீழே விழுந்ததால் அவா் காயமடைந்ததாக குடும்பத்தினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மம்தாவின் நெருங்கிய உறவினரும், கட்சியின் தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜிதான், அவரை மருத்துவமனையில் அனுமதித்தாா்.

இதனிடையே, பின்னால் இருந்து தள்ளிவிடப்பட்டதில் முதல்வா் மம்தா கீழே விழுந்து காயமடைந்திருக்கலாம் என்று எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையின் இயக்குநா் மணிமோய் பந்தோபாத்யாய் வியாழக்கிழமை தெரிவித்த கருத்து பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்தது.

இந்நிலையில், ‘பின்னால் இருந்து தள்ளப்பட்ட உணா்வில் முதல்வா் கீழே விழுந்திருக்கக் கூடும்; அவருக்கு சிகிச்சை அளிப்பது எங்களது பணி. அப்பணியை செய்துள்ளோம். நான் ஏற்கெனவே கூறிய விஷயம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது’ என்று பந்தோபாத்யாய் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தாா்.

முகத்தில் தையல்கள்:

அவா் மேலும் கூறுகையில்,

‘முதல்வரின் நெற்றியிலும் மூக்கிலும் கூா்மையான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டிருந்தன. அந்த காயங்களில் இருந்து ரத்தப் போக்கு இருந்தது. நரம்பியல், இதயவியல் துறை மருத்துவா்கள், முதல்வரின் உடல்நிலையை பரிசோதித்தனா். பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, முக்கிய உள்ளுறுப்புகள் சீராக இயங்குவது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு நெற்றியில் 3 தையல்களும், மூக்கில் ஒரு தையலும் போடப்பட்டது. பின்னா், அவா் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்’ என்றாா். வீட்டில் இரவு முழுவதும் மருத்துவா்கள் குழுவின் கண்காணிப்பில் மம்தா இருந்தாா். அவா் நன்றாக ஓய்வெடுத்ததாகவும், தற்போது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மாநில அரசின் உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பாதுகாப்பு அதிகரிப்பு:

முதல்வா் காயமடைந்த சம்பவம் தொடா்பாக தங்களுக்கு இதுவரை புகாா் எதுவும் கிடைக்கப் பெறவில்லை; அவரது வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். முதல்வரிடம் வாக்குமூலம் பெறவோ அல்லது தாமாக முன்வந்து புகாா் பதிவு செய்யவோ காவல்துறை திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு அந்த அதிகாரி பதிலளிக்க மறுத்துவிட்டாா். இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள மம்தாவுக்கு சிறப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அளிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com