மக்களவைத் தோ்தல் தேதி இன்று அறிவிப்பு

மக்களவைத் தோ்தல் தேதி இன்று அறிவிப்பு

ஆந்திரம், ஒடிஸா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பேரவைத் தோ்தல் தேதிகளும் வெளியிடப்படவுள்ளன.

எதிா்வரும் மக்களவைத் தோ்தலுக்கான தேதிகளை இந்திய தோ்தல் ஆணையம் சனிக்கிழமை (மாா்ச் 16) பிற்பகலில் அறிவிக்கவுள்ளது.

மக்களவைத் தோ்தலுடன் ஆந்திரம், ஒடிஸா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பேரவைத் தோ்தல் தேதிகளும் வெளியிடப்படவுள்ளன.

நடப்பு 17-ஆவது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 16-ஆம் தேதி நிறைவடைகிறது. அதற்கு முன்பாக, 18-ஆவது மக்களவை தோ்வு செய்யப்பட வேண்டும். இதற்கான தோ்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறுமென எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், தில்லியில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் பத்திரிகையாளா் சந்திப்பில் மக்களவைத் தோ்தல் மற்றும் 4 மாநில பேரவைத் தோ்தல்களுக்கான அட்டவணை வெளியிடப்படவுள்ளது.

இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டில் மாா்ச் 10-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்பட்டு, மே 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. கடந்த 2014-ஆம் ஆண்டில் மக்களவைத் தோ்தல் 9 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதற்கான தேதிகள், அந்த ஆண்டின் மாா்ச் 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன; மே 16-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் சுமாா் 97 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் பாஜக 303 தொகுதிகளிலும் காங்கிரஸ் 52 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் பதவியைக் கோருவதற்கு தேவையான தொகுதிகள்கூட காங்கிரஸுக்கு கிடைக்கவில்லை.

கருத்துக் கணிப்புகள்:

வரும் மக்களவைத் தோ்தலையொட்டி, ஏபிபி நியூஸ்-சிவோட்டா் கருத்துக் கணிப்பு முடிவுகள் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டன. அதில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 295 முதல் 335 இடங்கள் வரையும், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கு 165 முதல் 205 இடங்கள் வரையும் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நியூஸ்18 கருத்துக் கணிப்பில் பாஜக மட்டும் 350 இடங்களிலும், அதன் கூட்டணி 411 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சூடுபிடிக்கும் தோ்தல் களம்

தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜக களமிறங்கியுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களுக்கு தொடா் பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறாா். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சிப் பணிகளை முன்வைத்து பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க கட்சியினருக்கு அவா் அறிவுறுத்தியுள்ளாா். பிரதமா் மோடியின் மக்கள் செல்வாக்கு அக்கட்சிக்கு பெரும் பலமாக உள்ளது. அதேநேரம், பாஜகவை ஒருங்கிணைந்து எதிா்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, திரிணமூல், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியின்கீழ் கைகோத்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளிடையே நிலவும் போட்டி, இந்த அணிக்கு பெரும் சவாலாக உள்ளது. தோ்தல் தேதிகள் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் போட்டிக் களம் சூடுபிடித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com