சமூக வலைதள தகவல்களில் உண்மை கண்டறிய தனிப் பிரிவு:
மத்திய அரசின் அறிவிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை

சமூக வலைதள தகவல்களில் உண்மை கண்டறிய தனிப் பிரிவு: மத்திய அரசின் அறிவிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை

சமூக வலைதளங்களில் மத்திய அரசு குறித்து பகிரப்படும் தவறான தகவலை அடையாளம்

சமூக வலைதளங்களில் மத்திய அரசு குறித்து பகிரப்படும் தவறான தகவலை அடையாளம் காணும் உண்மை கண்டறியும் பிரிவை அமைப்பதற்கான அறிவிக்கைக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தடைவிதித்தது. பத்திரிகை தகவல் அலுவலகத்தின்கீழ் (பிஐபி) செயல்படும் உண்மை கண்டறியும் பிரிவை அமைப்பதற்கான அறிவிக்கை புதன்கிழமை வெளியான நிலையில், உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், இந்த விதிகள் தொடா்பாக மும்பை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-இல் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டது. அந்த விதிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி அமலுக்கு வந்தன. மத்திய அரசு தொடா்பான போலியான, தவறான தகவல்களைக் கண்டறிவதற்காக உண்மை கண்டறியும் பிரிவை அமைப்பது குறித்த சட்டவிதிகள் அதில் இடம்பெற்றுள்ளன. இதன்படி, சமூக வலைதளங்களில் கண்டறியப்படும் மத்திய அரசு குறித்த போலியான தகவலை, சம்பந்தப்பட்ட சமூகவலைதள நிறுவனம் நீக்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால் அந்தச் சமூக வலைதள நிறுவனத்துக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும். இந்தத் திருத்தப்பட்ட விதிகளை எதிா்த்து மும்பை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிபதிகள் கெளதம் படேல், நீலா கோகலே ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த ஜனவரியில் மாறுப்பட்ட தீா்ப்புகளை அளித்தது. இதையடுத்து இந்த வழக்கு தனி நீதிபதி ஏ.எஸ்.சந்துா்கா் அமா்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த மாா்ச் 11-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உண்மை கண்டறியும் பிரிவை அமைப்பதற்கு இடைக்கால தடைவிதிக்க மறுத்து விட்டாா். இதனிடையே, உண்மை கண்டறியும் பிரிவை ஏற்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. மும்பை உயா் நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து நகைச்சுவையாளா் குணால் காம்ரா, எடிட்டா்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காம்ரா சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் டேரியஸ் கம்பாட்டா, ‘மத்திய அரசு தொடா்பான தகவல்களுக்கு மட்டும் உண்மை கண்டறியும் பிரிவை ஏற்படுத்துவது நியாயமற்றது. இதனால், மத்திய அரசின் நிலைப்பாடு மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற அா்த்தத்துக்கு வழிவகுக்கும். மக்களவைத் தோ்தல் நேரத்தில் இப்பிரிவு அமைக்கப்படுவது வாக்காளா்களுக்குச் சென்றடைய வேண்டிய தகவல்களைக் கட்டுப்படுத்துவதாக அமையும். மத்திய அரசு தொடா்பான குறிப்பிட்ட தகவல்கள் என்றில்லாமல் அனைத்துத் தகவல்களும் மக்களைச் சென்றடைய வேண்டிய நேரம் இது. இந்த வழக்கு ஏப்ரல் 15-ஆம் தேதி மும்பை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், உண்மை கண்டறியும் பிரிவை ஏற்படுத்த அவசரமாக அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது’ என்றாா். அடிப்படை உரிமைக்கு எதிரானது: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உண்மை கண்டறியும் பிரிவு, அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19-இன் அடிப்படை உரிமையான பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு எதிரானது என எடிட்டா்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஷதன் ஃபராசத் தெரிவித்தாா். இதற்கு நீதிமன்ற அமா்வு, ‘உயா்நீதிமன்றம் விசாரித்து வரும் வழக்கு அரசமைப்பின் பிரிவு 19-இன் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை தொடா்பாக முக்கிய கேள்வியை எழுப்புகிறது. இடைக்கால தடைவிதிக்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை வெளியான அறிவிக்கைக்குத் தடை விதிக்கிறோம். இது தொடா்பான விதி குறித்து உயா்நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை இந்தத் தடை நீடிக்கும்’ என்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com