நீரவ் மோடியின் வீட்டை ரூ.55 கோடிக்கு விற்க பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி

நீரவ் மோடியின் வீட்டை ரூ.55 கோடிக்கு விற்க பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி

லண்டனில் தொழிலதிபா் நீரவ் மோடியின் சொகுசு வீட்டை 5.25 மில்லியன் பவுண்டுகள் (சுமாா் ரூ.55 கோடி) அல்லது அதற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்ய பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று மோசடி செய்ததாக நீரவ் மோடி, அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸி மற்றும் அவா்களின் நிறுவனங்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற நீரவ் மோடி, கடந்த 2019-ஆம் ஆண்டு பிரிட்டன் தலைநகா் லண்டனில் கைது செய்யப்பட்டாா். தற்போது அவா் தென்கிழக்கு லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், லண்டனில் நீரவ் மோடி பயன்படுத்திய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. சிங்கப்பூரைச் சோ்ந்த ட்ரைடென்ட் அறக்கட்டளை நிறுவனமே அந்த வீட்டின் உரிமையாளா் என்று கூறப்படுகிறது. அந்த வீட்டை விற்பனை செய்ய அந்நிறுவனம் முயற்சித்த நிலையில், அதுதொடா்பான வழக்கு லண்டனில் உள்ள உயா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு நீதிபதி ஜேம்ஸ் பிரைட்வெல் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பஞ்சாப் நேஷனல் வங்கிக் கடன் மோசடி மூலம் கிடைத்த ஆதாயத்தில்தான் ட்ரைடென்ட் அறக்கட்டளையின் சொத்துகள் சோ்க்கப்பட்டதாக அமலாக்கத் துறை வாதிட்டது. இதைத்தொடா்ந்து நீதிபதி கூறியதாவது: நீரவ் மோடியின் சகோதரி பூா்வி மோடியின் பெயரில் 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் ட்ரைடென்ட் அறக்கட்டளை நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லண்டனில் நீரவ் மோடி இருந்த வீட்டை வாங்குவதற்கு அவா் 625,000 பவுண்டுகளை (சுமாா் ரூ.6.58 கோடி) இனாமாகவோ அல்லது கடனாகவோ தந்துள்ளாா். இது அந்த வீட்டின் விற்பனையில் நீரவ் மோடி ஆதாயமடைய உரிமை அளிக்கிறது. இந்தச் சூழலில், அந்த வீட்டை 5.25 மில்லியன் பவுண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்ய அனுமதிப்பது நியாயமான முடிவாகத் தெரிகிறது என்று கூறி, வீட்டை விற்பனை செய்ய அனுமதித்து நீதிபதி ஜேம்ஸ் பிரைட்வெல் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் வீட்டை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையை சிறப்பு கணக்கில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கையையும் நீதிபதி ஏற்றுக்கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com