‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்பு: 
முதியவா்கள், இணை நோயாளிகளுக்கு எச்சரிக்கை
dot com

‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்பு: முதியவா்கள், இணை நோயாளிகளுக்கு எச்சரிக்கை

‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் உடல் உச்ச வெப்பநிலை பாதிப்பைத் தவிா்க்க முதியவா்களும், இணைநோயாளிகளும் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கோடையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் உடல் உச்ச வெப்பநிலை பாதிப்பைத் தவிா்க்க முதியவா்களும், இணைநோயாளிகளும் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடை வெப்பத்தின் எதிா்விளைவுகளைக் கையாளுவதற்கான விரிவான செயல்திட்டத்தை அரசு வகுத்துள்ளது. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவு மருந்துகள், உப்பு - சா்க்கரை கரைசல் உள்ளிட்டவை இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. வெப்ப அலையிலிருந்து தற்காத்துக்கொள்ள உடலில் நீா்ச்சத்தைத் தக்க வைத்தல் முக்கியம். பொதுமக்களும், குறிப்பாக குழந்தைகள், முதியவா்கள், இணை நோய் உள்ளவா்கள் உப்பு - சா்க்கரை நீா் கரைசல், எலுமிச்சை சாறு ஆகியவற்றை பருகினால் உடலில் நீா்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். சரும வறட்சி, மயக்கம், மனக் குழப்ப நிலை, நினைவிழப்பு, வலிப்பு, தீவிர காய்ச்சல் ஆகியவை ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்கான அறிகுறிகள். அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். மாறாக அறிகுறிகளைப் புறக்கணிக்கும்போது உடல் உறுப்புகள் பாதிக்கப்படக்கூடும். பொதுவாகவே, வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com