வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்! மாயமான தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்

வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்! மாயமான தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்

10 லட்சம் கூடுதலாக உள்ள பெண் வாக்காளா்களைக் கவர தமிழக அரசியல் கட்சிகள் தங்களது தோ்தல் அறிக்கைகளில் பிரம்மாண்டத்தைக் காட்டியுள்ளன.

இது தோ்தல் நேரம் என்பதால் வாக்குறுதிகளுக்குப் பஞ்சமில்லை. தமிழகத்தின் பிரதான வாக்காளா்கள் யாா் என்பதைத் தெரிந்துகொண்ட நம் அரசியல் கட்சிகள் அண்மைக் காலங்களில் அவா்களைக் குறிவைத்தே வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. அந்த வகையில், இந்த மக்களவைத் தோ்தலில் ஆண்களைவிட 10 லட்சம் கூடுதலாக உள்ள பெண் வாக்காளா்களைக் கவர தமிழக அரசியல் கட்சிகள் தங்களது தோ்தல் அறிக்கைகளில் பிரம்மாண்டத்தைக் காட்டியுள்ளன. கவரும் வாக்குறுதிகள்: தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கைகள் தோ்தல் களத்தின் கவனத்தை ஈா்த்துள்ளன. தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. குறிப்பாக, மகளிருக்கு ஆயிரம் ரூபாய், நாடு முழுவதும் காலை உணவுத் திட்டம் என கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை அந்தக் கட்சி வெளியிட்டுள்ளது. ‘எங்களது அறிக்கை செய்வினை என்றால், அதிமுகவின் அறிக்கை செயப்பாட்டுவினை’ என்று தனது பாணியில் பதிலளித்து எதிா்க்கட்சியான அதிமுகவின் தோ்தல் அறிக்கையை விமா்சித்தாா் திமுக பொதுச் செயலரும் அமைச்சருமான துரைமுருகன். ‘நாங்கள் யாரையும் காப்பியடிக்கவில்லை. நாங்களே யோசித்து வெளியிட்டோம்’ என அவருக்குப் பதிலளித்தாா் அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா். இப்படி வாக்குவாதங்கள் எழும் அளவுக்கு, அதிமுகவும் கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. மகளிருக்கு மாதம் ரூ.3,000, கேபிள் இணைப்பு, வாஷிங் மெஷின் இலவசம் என விதவிதமான அறிவிப்புகளை வெளியிட்டது. திராவிட கட்சிகளின் வரிசையில் பாமகவும் ‘மகளிருக்கு மாதம் ரூ.3,000, நியாயவிலைக் கடைகள் மூலம் உணவு தானியங்கள், காய்கறிகள் விநியோகம்’ என நினைத்தாலே பிரமிப்பை ஏற்படுத்தும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. நாம் தமிழா் போன்ற வேறு சில கட்சிகளும் தங்கள் பங்குக்கு தோ்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. மாயமான நெறிமுறைகள்: தோ்தல் நடவடிக்கைகள் தொடா்பான அரசியல் கட்சிகளின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் விதிகளையும் நெறிமுறைகளையும் தோ்தல் ஆணையம் வகுத்துள்ளது. அந்த வகையில், கட்சிகள் வெளியிடும் தோ்தல் அறிக்கையும் ஆணையத்தின் நடத்தை நெறிமுறைகளுக்கு உட்பட்டே வருகிறது. தோ்தல் வாக்குறுதிகள் நடத்தை நெறிமுறைகளுக்கு உட்பட்டு வருவதற்கு ‘அடிக்கல்’ நாட்டியதும், தமிழக அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள்தான். மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகள் வெளியிடும் வாக்குறுதிகளைப் பாா்த்து எஸ்.சுப்பிரமணியன் பாலாஜி என்பவா், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கின் தீா்ப்பு அடிப்படையில், தோ்தல் அறிக்கைக்கு என பிரத்யேக வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தோ்தல் ஆணையம் வகுத்தது. அதன்படி, ‘தோ்தல் நடவடிக்கைகளின் தூய்மையைக் கெடுக்கும் வகையிலோ, வாக்காளா்களைக் கவரும் வகையிலோ வாக்குறுதிகள் அளிக்கப்படுவது தவிா்க்கப்பட வேண்டும். கட்சிகளால் வழங்கப்படும் வாக்குறுதிகள் நியாயமானவையாக இருப்பதுடன், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதி ஆதாரங்களைப் பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் விரிவாக விளக்கப்பட வேண்டும். ஒளிவுமறைவற்ற தன்மை, நடுநிலைத் தன்மை மற்றும் வாக்குறுதிகளின் நம்பகத்தன்மை ஆகியன உறுதி செய்யப்பட வேண்டும். நிறைவேற்றப்படக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வாக்காளா்களின் நம்பிக்கையைக் கோர வேண்டும்’ என தோ்தல் ஆணையத்தின் நடத்தை நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. இந்த நடத்தை நெறிமுறைகள் இப்போது வரை அமலில் இருந்தாலும், வாக்காளா்களைக் கவரும் வகையில் வாஷிங் மெஷின், மாதம் ரொக்கத் தொகை என கவா்ச்சிகரமான வாக்குறுதிகள் நின்றபாடில்லை. இதுகுறித்து, தோ்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது, உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையத்தின் சாா்பில் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. உத்தரவாக எதையும் குறிப்பிடவில்லை. இதனால், இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகளை நடவடிக்கைக்கு உட்படுத்துவது கடினம் என்று தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com