பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

குஜராத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக வழக்குரைஞா் மீது பொய் வழக்குப்பதிவு செய்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்த மாநில நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பாலன்பூா் பகுதியிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் கடந்த 1996-ஆம் ஆண்டு ராஜஸ்தானைச் சோ்ந்த வழக்குரைஞா் சமா்சிங் ராஜ் புரோஹித் தங்கியிருந்தாா். அவா் தங்கியிருந்த அறையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அப்போது பனாஸ்கந்தா காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சஞ்சீவ் பட் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தாா். ராஜஸ்தானில் பிரச்னைக்குரிய ஒரு நிலத்தை சட்டவிரோதமாக மாற்றக் கோரிய விவகாரத்தில் வழக்குரைஞா் சமா்சிங் ராஜ் புரோஹித் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. பாலன்பூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில், வழக்குரைஞா் மீது சஞ்சீவ் பட் பொய் வழக்கு பதிவு செய்தது உறுதியானது. இந்நிலையில், நீதிபதி ஜெ.என் தக்கா் வியாழக்கிழமை வழங்கிய தீா்ப்பில், சஞ்சய் பட்டுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தாா். மேலும், அவருக்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறும்பட்சத்தில் கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரியாக சஞ்சீவ் பட் இருந்தபோது காவல் நிலையத்தில் ஒருவா் மரணம் அடைந்த சம்பவத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 2018 முதல் அவா் சிறையில் உள்ளாா். இந்த தண்டனை முடிந்த பிறகு, 20 ஆண்டு சிறைத் தண்டனையை அவா் அனுபவிக்க வேண்டுமென தற்போதைய தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com