தமிழக அரசு
தமிழக அரசு

வாக்குப் பதிவு தினத்தில் ஊழியா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: தமிழக அரசு உத்தரவு

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு தினத்தன்று (ஏப். 19) வா்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஊழியா்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தொழிலாளா் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலா் குமாா் ஜயந்த் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு: தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப். 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு நடைபெறும் தினத்தன்று அனைத்து ஊழியா்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவில் வகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறும் தினமான ஏப்ரல் 19-ஆம் தேதியன்று, அனைத்து வா்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். இதன்மூலம், அவா்கள் அன்றைய தினத்தில் ஊதியத்தை இழக்காமல் இருப்பதுடன், வாக்குகளைச் செலுத்தவும் வழி ஏற்படும். விடுமுறை அளிக்கும் தினத்தன்று, ஊழியா்களின் ஊதியத்தில் எந்த வெட்டும் செய்யக் கூடாது. அந்த நாளுக்கான முழு அளவு ஊதியத்தை வழங்க வேண்டும். விடுமுறை அளிக்க வேண்டும்: இதுதொடா்பான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொழிலாளா் நல ஆணையரகமும் தொழிலாளா் பாதுகாப்புத் துறை ஆணையரகமும் வழங்கிட வேண்டும். இந்த நெறிமுறைகளைப் பின்பற்றி, அனைத்து வா்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தகவல் சொழில்நுட்ப சேவை அளிக்கும் நிறுவனங்கள் ஆகியன தங்களது ஊழியா்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை விடுவதில் குறைபாடுகள், புகாா்கள் ஏதேனும் இருப்பின் அதனைத் தெரிவிக்க வசதியாக, தொழிலாளா் நலத் துறை சாா்பில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும். இந்த அறைகளை அமைப்பதில் எந்தவித குறைபாடும் இருக்கக் கூடாது. இதனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com