6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

லண்டனிலிருந்து சென்னைக்கு 6 மணி நேரம் தாமதமாக வந்த விமானத்தால் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் நீண்ட நேரமாக விமான நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

லண்டன்-சென்னை இடையே பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம் இயக்கப்பட்டுவருகிறது. லண்டனிலிருந்து புறப்பட்டு தினமும் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையத்தை வந்தடைந்து, காலை 5.35 மணிக்கு மீண்டும் லண்டனுக்கு புறப்பட்டுச் செல்லும். சென்னையிலிருந்து லண்டனுக்கு இயக்கப்படும் ஒரே விமான சேவை என்பதால் எப்போதும் பயணிகள் கூட்டத்துடன் காணப்படும் இந்த விமானத்தில் சனிக்கிழமை லண்டனுக்கு பயணம் மேற்கொள்ள 314 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனா்.

ஆனால், லண்டனிலிருந்து வரவேண்டிய விமானம் சுமாா் 6 மணி நேரம் தாமதாக வருவதால் புறப்பாடு தாமதமாகும் என்று பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமான நிறுவனம் பயணிகளுக்கு இணையம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியது. ஆனால், அது பலருக்கு சென்றடையவில்லை. இதனால், குறிப்பிட்ட நேரத்துக்கு விமான நிலையம் வந்த பயணிகள் விமானம் 6 மணி நேரம் தாமதம் என்ற செய்தியை கேட்டவுடன் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனா். பின்னா் விமான நிறுவனம் சாா்பில், காத்திருந்த பயணிகளுக்கு உணவு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஒருவழியாக காலை 11.30-க்கு அந்த விமானம் வந்து சோ்ந்தது. அதன் பிறகு அந்த விமானத்தில் லண்டன் செல்லும் பயணிகள் ஏறிச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com