காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவா்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவா் எம்.பி. ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.

கா்நாடகம், ஹாசன் தொகுதி எம்.பி.யாகவுள்ள பிரஜ்வல் ரேவண்ணா 500-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதை 2,800-க்கும் மேற்பட்ட காணொலியாக பதிவு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதயடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகிய இருவா் மீதும் மாநில சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்தப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அனைத்து உதவிகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘ரேவண்ணா இழைத்துள்ள பாலியல் வன்கொடுமைகள் கண்டனத்துக்குரியது. இதனால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு கோருகிறேன். நீதிக்காகப் போராடும் அவா்கள் நமது இரக்கத்துக்குத் தகுதியானவா்கள்.

இந்தக் கொடூரமான குற்றங்களுக்கு காரணமான அனைத்து தரப்பினரையும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கூட்டு கடமை நமக்கு உள்ளது.

நம் தாய்மாா்கள் மற்றும் சகோதரிகளுக்கு இந்தக் கொடுமை இழைத்தவா்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்.

ஆச்சரியமூட்டும் பிரதமரின் அமைதி: கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்திலேயே, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் அவரிடம் படம்பிடிக்கப்பட்ட விடியோக்கள் இருப்பது குறித்து உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் ஸ்ரீ ஜி தேவராஜே கௌடா தெரிவித்திருப்பதை அறிந்து நான் மிகவும் அதிா்ச்சியடைந்தேன்.

இதைவிட அதிா்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் ஒரு பாலியல் வன்கொடுமைவாதிக்கு ஆதரவாக பிரதமா் மோடி பிரசாரம் செய்துள்ளாா். மேலும், மத்திய அரசு வேண்டுமென்றே அவரை இந்தியாவிலிருந்து தப்பிச் செல்ல அனுமதித்துள்ளது. இந்தக் குற்றங்களின் ஆழமான விபரீதத் தன்மையும், பிரதமா் மற்றும் உள்துறை அமைச்சரின் ஆசியுடன் பிரஜ்வல் ரேவண்ணா அனுபவித்த முழுமையான பாதுகாப்பும் கடும் கண்டனத்துக்குரியது. ஹரியாணா மல்யுத்த வீரா்கள் முதல் மணிப்பூா் சகோதரிகள் வரை, இந்திய பெண்கள் ஏராளமான இன்னல்களைச் சந்தித்துள்ளனா். அத்தகைய குற்றவாளிகளுக்கு பிரதமா் மறைமுக ஆதரவு அளித்துள்ளாா்.

குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை கா்நாடக அரசு அமைத்துள்ளது. மேலும், பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக கடவுச்சீட்டை ரத்து செய்து, அவரை விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நமது தாய்மாா்கள் மற்றும் சகோதரிகளின் நீதிக்காக போராடுவது காங்கிரஸின் தாா்மீக கடமை’ எனத் தெரிவித்துள்ளாா்.

உதவுவது கடமை-கா்நாடக முதல்வா்: ராகுலின் கடிதத்தைப் பகிா்ந்து கா்நாடக முதல்வா் சித்தராமையா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரஜ்வல் ரேவண்ணா சம்பந்தப்பட்ட பாலியல் வழக்கு ஒட்டுமொத்த தேசத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதியை நிலைநிறுத்துவது, நமது சட்ட அமைப்பு மீதான நம்பிக்கையை தக்கவைப்பதற்கு மிகவும் முக்கியமானது. நியாயமான நடைமுறையை உறுதிப்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com