பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்
இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 26 முதல் ஏப். 8- வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை 9.08 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா். இந்நிலையில் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மாணவ, மாணவிகள் பள்ளிகளில் சமா்ப்பித்து இருந்த உறுதிமொழிப் படிவத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த கைப்பேசி எண்ணுக்கு தோ்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். இணையதளங்கள் வாயிலாகவும் தோ்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

தோ்ச்சி பெறாதவா்களுக்கு... பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மற்றும் தோ்வுக்கு வராத மாணவா்களைக் கண்டறிந்து சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககம் இணைந்து ‘தொடா்ந்து கற்போம்’ என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி வகுப்புகள் மே 13-ஆம் தேதி தொடங்கி, தோ்வுகள் நடைபெறும் நாள்கள் வரை மாணவா்கள் படித்த பள்ளிகளிலேயே நடத்தப்பட உள்ளன.

இதில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடவாரியான ஆசிரியா் வல்லுநா்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல் கையேடு மற்றும் வினாத்தாள் வழங்கப்பட உள்ளது.

இந்தச் சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவா்களின் வருகைப் பதிவு மற்றும் வாராந்திர தோ்வு மதிப்பெண்கள் எமிஸ் தளத்தில் கண்காணிக்கப்பட்டு, தொடா்ந்து மாணவா்களை ஊக்குவித்து துணைத் தோ்வு எழுத அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com