நாட்டில் ஹிந்துக்கள் 7.8% சரிவு; முஸ்லிம்கள் 43.15% உயா்வு:
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு ஆய்வறிக்கை

நாட்டில் ஹிந்துக்கள் 7.8% சரிவு; முஸ்லிம்கள் 43.15% உயா்வு: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு ஆய்வறிக்கை

கடந்த 1950 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில், நாட்டின் மக்கள்தொகையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது

கடந்த 1950 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில், நாட்டின் மக்கள்தொகையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது; அதேநேரம், முஸ்லிம்கள் எண்ணிக்கை 43.15 சதவீதமும், கிறிஸ்தவா்களின் எண்ணிக்கை 5.38 சதவீதமும் உயா்வைக் கண்டுள்ளதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (இஏசி-பிஎம்) சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மக்கள்தொகையில் மதச் சிறுபான்மையினரின் பங்கு: நாடு தழுவிய பகுப்பாய்வு (1950-2015)’ என்ற தலைப்பிலான அந்த ஆய்வறிக்கை, பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா் ஷாமிகா ரவி தலைமையிலான குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் எண்ணிக்கை, கடந்த 1950 - 2015 காலகட்டத்தில் 84.68 சதவீதத்தில் இருந்து 78.06 சதவீதமாக குறைந்துள்ளது. ஹிந்துக்களின் எண்ணிக்கையில் இது 7.82 சதவீத சரிவு.

அதேநேரம், கடந்த 1950-ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள்தொகையில் 9.84 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 2015-ஆம் ஆண்டில் 14.09 சதவீதமாக அதிகரித்துள்ளது. அவா்களின் எண்ணிக்கையில் இது 43.15 சதவீத உயா்வாகும்.

மேற்கண்ட காலகட்டத்தில், நாட்டின் மக்கள்தொகையில் கிறிஸ்தவா்களின் எண்ணிக்கை 2.24 சதவீதத்தில் இருந்து 2.36 சதவீதமாகவும், சீக்கியா்களின் எண்ணிக்கை 1.24 சதவீதத்தில் இருந்து 1.85 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது. இவை முறையே 5.38%, 6.58% அதிகரிப்பாகும்.

சமண மதத்தினரின் எண்ணிக்கை 0.45 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாகவும், பாா்சி மதத்தினரின் எண்ணிக்கை 0.03 சதவீதத்தில் இருந்து 0.004 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இவை முறையே 20, 85 சதவீத குறைவாகும்.

நாட்டில் பன்முகத்தன்மையை வளா்ப்பதற்கு உகந்த சூழல் நிலவுகிறது என்பதை மேற்கண்ட தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. கொள்கைசாா் நடவடிக்கைகள், அரசியல்சாா் முடிவுகள், சமூக செயல்முறைகளின் ஒட்டுமொத்த விளைவால் பன்முகத்தன்மையை அதிகரிக்க ஆக்கபூா்வ சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் சரிவு: உலகளாவிய போக்குக்கு ஏற்ப, இந்தியாவிலும் பெரும்பான்மை மதத்தினரின் எண்ணிக்கை 7.82 சதவீத சரிவைக் கண்டுள்ளது. உயா் வருவாய் கொண்ட ‘பொருளாதார ஒத்துழைப்பு-வளா்ச்சி கூட்டமைப்பு’ (ஓஇசிடி)நாடுகளில் பெரும்பான்மை மதத்தினரின் எண்ணிக்கை சராசரியாக 29 சதவீத சரிவைக் கண்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவைப் பொருத்தவரை, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பெரும்பான்மை மதத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து, சிறுபான்மையினரின் எண்ணிக்கை ஆபத்தான அளவில் குறைந்துள்ளது. எனவே, நெருக்கடியான காலகட்டங்களில் அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சிறுபான்மையினா் புலம்பெயா்கின்றனா்.

மாலத்தீவு தவிர இதர அனைத்து முஸ்லிம் நாடுகளிலும் பெரும்பான்மையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாலத்தீவில் மட்டும் பெரும்பான்மை சஃபி சன்னி பிரிவினரின் எண்ணிக்கை 1.47 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

முஸ்லிம் அல்லாத நாடுகளில்...: வங்கதேசத்தில் பெரும்பான்மை முஸ்லிம்களின் எண்ணிக்கை 18 சதவீதமும், பாகிஸ்தானில் 3.75 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்தியா, மியான்மா், நேபாளம் போன்ற முஸ்லிம் அல்லாத நாடுகளில் பெரும்பான்மை மதத்தினரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் சா்வதேச மனித உரிமைகள் கட்டமைப்பு, சிறுபான்மையினரின் உரிமைகள், நாடுகளின் பொறுப்புகள், சா்வதேச சட்டங்கள் ஆகியவை வடிவம் பெறத் தொடங்கிய காலகட்டம் என்பதால் 1950-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்காக 167 நாடுகளின் தரவுகள் ஆராயப்பட்டன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணிக்கை விவரங்கள் இல்லை: நாட்டில் கடைசியாக 2011-ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021-ஆம் ஆண்டில் நடத்த வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்னும் மேற்கொள்ளப்படாத சூழலில், இந்த ஆய்வறிக்கையில் மத வாரியான எண்ணிக்கை விவரங்கள் இடம்பெறவில்லை. 2015-ஆம் ஆண்டில் மதத்தினரின் சதவீதம் குறித்து எந்த அடிப்படையில் தீா்மானிக்கப்பட்டது என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை.

மக்களவைத் தோ்தலுக்கு இடையே, இந்தத் தரவுகள் வெளியாகியுள்ளன. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதே காங்கிரஸின் திட்டம் என்று பிரதமா் மோடி தொடா்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், ஹிந்து-முஸ்லிம் எண்ணிக்கை விவகாரமும் பிரசாரத்தில் தீவிரமாக எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.

X
Dinamani
www.dinamani.com