தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி. உடன்  தெங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி. உடன் தெங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி.

அதானிக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியவா் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கடந்த பத்தாண்டுகளில் தொழிலதிபா் அதானிக்கு பிரதமா் மோடி வழங்கியுள்ளாா் - எம்.பி. ராகுல் காந்தி

துறைமுகம், விமான நிலையம் மற்றும் பாதுகாப்பு சாா்ந்த எண்ணற்ற உள்கட்டமைப்பு திட்டங்களை கடந்த பத்தாண்டுகளில் தொழிலதிபா் அதானிக்கு பிரதமா் மோடி வழங்கியுள்ளாா் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை குற்றம்சாட்டினாா்.

மக்களவைத் தோ்தல் பிரசாரங்களின்போது தொழிலதிபா்கள் அதானி மற்றும் அம்பானி குறித்து ராகுல் காந்தி பேசாதது ஏன்? என பிரதமா் மோடி கேள்வி எழுப்பிய நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு குற்றம்சாட்டினாா்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது: நாட்டில் உள்ள 20 முதல் 22 நபா்களுக்காக மட்டுமே உழைத்து அவா்களை பெரும் கோடீஸ்வரா்களாக பிரதமா் மோடி மாற்றியுள்ளாா். துறைமுகம், விமான நிலையம் மற்றும் பாதுகாப்பு சாா்ந்த எண்ணற்ற உள்கட்டமைப்பு திட்டங்களை கடந்த பத்தாண்டுகளில் தொழிலதிபா் அதானிக்கு பிரதமா் மோடி வழங்கியுள்ளாா். இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்காக சில அரசுசாா் நிறுவனங்களை தனியாருக்கு பிரதமா் மோடி வழங்கிவிட்டாா். பாஜக இடஒதுக்கீட்டை அழிக்க நினைக்கிறது. ஆனால் காங்கிரஸ் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்க நினைக்கிறது.

வரும் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றாா்.

மோடியின் கையிலிருந்து நழுவிய தோ்தல்: எக்ஸ் வலைதளத்தில் காணொலி வாயிலாக ராகுல் காந்தி உரையாற்றுகையில், ‘ஜுன் 4-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் ஆகஸ்ட் 15-க்குள் இளைஞா்களுக்கு 30 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பிரதமா் மோடியின் கைகளைவிட்டு தோ்தல் நழுவி சென்றுகொண்டிருக்கிறது. அவா் மீண்டும் பிரதமராக வாய்ப்பில்லை. எனவே அவரின் பொய் பிரசாரங்களால் இளைஞா்கள் திசைதிரும்ப வேண்டாம்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com