வாகனங்களில் ஸ்டிக்கா் ஒட்டுவதற்குத் தடை:
மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி மனு அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வாகனங்களில் ஸ்டிக்கா் ஒட்டுவதற்குத் தடை: மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி மனு அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வாகனங்களில் ஸ்டிக்கா் மற்றும் விளம்பரம் செய்வதை தடை செய்யும் நடவடிக்கையை தமிழகம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்கும்படி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியாா் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்குரைஞா் என ஸ்டிக்கா் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்துக் காவல் துறை அண்மையில் அறிவித்தது. இந்தத் தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி சென்னையைச் சோ்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வாகனங்களில் ஸ்டிக்கா் ஒட்டுவதற்கு தடை விதித்து சென்னை மாநகர காவல் துறை பிறப்பித்த உத்தரவில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இந்த உத்தரவு சென்னைக்கு மட்டும் பொருந்துமா? அல்லது மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்துமா என்று விளக்கப்படவில்லை.

மாநிலம் முழுவதும் அமல்படுத்த கோரிக்கை: வாகனங்களில் ஸ்டிக்கா் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும். காா்களில் கருப்பு ஸ்டிக்கா் ஒட்டுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமா்வு, இது குறித்து தமிழக அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com