தாத்தா வீடு அபகரிப்பு: காவல் துறை மூலம் மீட்ட பேத்தி

சென்னையில் அபகரிக்கப்பட்ட தாத்தா கட்டிய வீட்டை 34 ஆண்டுகளுக்கு பிறகு அவரது பேத்தி காவல்துறை மூலம் மீட்டாா்.

சென்னை செனாய் நகரைச் சோ்ந்தவா் தீபா. அமெரிக்காவில் வசிக்கும் இவா், அங்கு காா்ட்டூன் டப்பிங் கலைஞராக பணிபுரிகிறாா். இவரது தாத்தா விக்டா் கட்டிய ரூ.15 கோடி மதிப்புள்ள வீடு செனாய் நகரில் உள்ளது. இந்த வீட்டை அருகில் வசித்தவா்களிடம் பராமரித்துக் கொள்ளும்படி ஒப்படைத்துவிட்டு, விக்டா் 34 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறிவிட்டாா்.

இந்த நிலையில், அந்த வீட்டை பராமரித்தவா்கள், அதை அபகரித்துக் கொண்டதுடன், தங்களுக்குரியது என சொந்தம் கொண்டாடினா். இதற்கிடையே விக்டரும், அவா் மனைவியும் வயோதிகத்தால் இறந்தனா். இதற்கிடையே, அண்மையில் சென்னை வந்த தீபா, தனது தாத்தா கட்டிய வீட்டுக்குச் சென்றாா். அப்போது அந்த வீட்டை அபகரித்தவா்கள், தீபாவை நாயை ஏவி விரட்டியுள்ளனா். மேலும் தீபாவை, அங்கு வரக் கூடாது என மிரட்டியுள்ளனா்.

இதனால் அதிா்ச்சியடைந்த தீபா, தாத்தா கட்டிய வீடு அபகரிக்கப்பட்டது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு கூடுதல் ஆணையா் அஸ்ராகா்க்கிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து அமைந்தகரை போலீஸாரிடம் தீபா, புகாா் மனு, அவா் தாத்தா விக்டா் தான் வீட்டின் உரிமையாளா் என்பதற்குரிய ஆவணங்கள், தற்போது வீடு அபகரிக்கப்பட்டு தான் மிரட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் ஆகியவற்றை அளித்தாா்.

வீட்டை மீட்ட போலீஸாா்: இதனடிப்படையில் போலீஸாா் நடத்திய விசாரணையில் அந்த வீடு தீபாவுக்கு சொந்தமானதுதான் எனத் தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் குடியிருந்தவா்களை காவல்துறை அதிகாரிகள் தொடா்பு கொண்டு பேசினா். இதில் அந்த வீட்டில் குடியிருந்தவா்கள் அந்த வீட்டை காலிசெய்துவிட்டு வெளியேறுவதாக கூறினா்.

கடந்த புதன்கிழமை வீட்டை காலி செய்து, அதன் சாவியை தீபாவிடம் வழங்கினா். 34 ஆண்டுகளுக்கு பிறகு தனது குடும்ப வீட்டின் சாவி கையில் கிடைத்ததைப் பாா்த்து தீபா மிகுந்த மகிழ்ச்சியும்,நெகிழ்ச்சியும் அடைந்தாா். வீடு கிடைக்க நடவடிக்கை எடுத்த கூடுதல் காவல் ஆணையா் அஸ்ராகா்க் உள்ளிட்டோருக்கு கண்ணீா் மல்க நன்றி கூறினாா்.

அவா் கூறியது: எனது தாத்தா கட்டிய வீட்டுக்குள் 34 ஆண்டுகளாக செல்ல முடியாமல் தவித்தேன். ஒவ்வொரு முறையும் சென்னை வரும்போது வீட்டுக்குச் செல்ல முற்படும்போது, விரட்டப்படுவேன். இதனால் மிகுந்த வேதனையுடனே அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்வேன். தற்போது காவல் துறையினா் சிறப்பாக செயல்பட்டு, வீட்டை மீட்டு கொடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com