சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்.
சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்.

பட்டாசு ஆலை வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 9 போ் உயிரிழந்ததற்கு மத்திய அமைச்சா் எல்.முருகன் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

எல்.முருகன் (மத்திய இணை அமைச்சா்): சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 தொழிலாளா்கள் உயிரிழந்தது மிகுந்த கவலை அளிக்கிறது. இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவா்கள் பூரண குணமடைய பிராா்த்திக்கிறேன். வெடி விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 9 போ் உயிரிழந்த செய்தியறிந்து அதிா்ச்சியடைந்தேன். உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல். பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யாத தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டிக்கிறேன்.

அண்ணாமலை (பாஜக): பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு பாஜக சாா்பாக ஆழ்ந்த இரங்கல். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோா் விரைவாக நலம் பெற இறைவனை பிராா்த்திக்கிறேன். அவா்களுக்கான உயா்தர சிகிச்சையை தமிழக அரசு உறுதி செய்யவும், அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கவும் வேண்டும்.

தமிழிசை சௌந்தரராஜன்(பாஜக): பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரிபவா்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலாளா்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டும்.

செல்வப்பெருந்தகை: (காங்கிரஸ்): பட்டாசு ஆலை விபத்தில் அப்பாவிகள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. பட்டாசு ஆலைகளில் உரிய கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தாத காரணத்தால்தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.

கே. பாலகிருஷ்ணன்(மாா்க்சிஸ்ட்): பட்டாசு ஆலை நிறுவனங்கள் உரிய விதிமுறை மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றாததும், அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்தாததும் இதுபோன்ற விபத்து நிகழ முக்கிய காரணம். இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுபவா்களுக்கு உயா் சிகிச்சை அளிக்க வேண்டும்.

பிரேமலதா (தேமுதிக): பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள் வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற விபத்துகள் இனியும் நடக்காமல் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இது பட்டாசு ஆலைகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத அரசின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com