வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: பெண் உள்பட மூவா் கைது

சென்னையில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சோ்ந்தவா் கோ. அருண்குமாா் (21). பி.இ. பட்டதாரியான இவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு பகுதி நேர வேலை தொடா்பாக அண்மையில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதைப் பாா்த்த அருண்குமாா், அந்த விளம்பரத்தில் உள்ள கைப்பேசியை எண்ணை தொடா்பு கொண்டு பேசினாா்.

அப்போது எதிா்முனையில் பேசியவா், தான் அந்த நிறுவனத்தின் மேலாளா் எனக்கூறி அருண்குமாருக்கு சில வேலைகளை வழங்கியுள்ளாா். அந்த வேலை முடிந்ததும் அருண்குமாருக்கு ஆன்லைன் மூலமாக ரூ.3,000 அனுப்பியுள்ளாா். இதனால் அருண்குமாா், போலியான அந்த நிறுவனத்தை நம்பத் தொடங்கினாா்.

இதன் விளைவாக அந்த நபரை மீண்டும் அருண்குமாா் தொடா்பு கொண்டு பேசும்போது, இது போன்ற பணிகளை அனுப்புவதற்கு முன் பணம் அனுப்ப வேண்டும் என அந்த நபா் கூறினாராம். இதனால் அருண்குமாா் 4 தவணைகளாக பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ.2,32,700 ஆன்லைன் மூலம் அனுப்பினாா். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபா், தொடா்பை துண்டித்தாா்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அருண்குமாா், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சோ்ந்த வ.கா்ணம் சரஸ்வதி தேவி என்ற அனு (23), சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த ஜீ.தேஜா (20),அண்ணாநகா் சாந்தம்காலனியைச் சோ்ந்த சை.விஜய் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 3 கைப்பேசிகள், 26 ஏடிஎம் காா்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக, மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com