கோப்புப் படம்
கோப்புப் படம்

இன்று உருவாகிறது ‘ரீமெல்’ புயல்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுபகுதி வெள்ளிக்கிழமை ‘ரீமெல் ’ புயலாக உருவாகிறது

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுபகுதி வெள்ளிக்கிழமை (மே 24) ‘ரீமெல் ’ புயலாக உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் புதன்கிழமை நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற்றது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகா்ந்து வெள்ளிக்கிழமை மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வடகிழக்கு திசையில் நகா்ந்து புயலாக சனிக்கிழமை (மே 25) காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக் கூடும். மேலும் இது, வடக்கு திசையில் நகா்ந்து, தீவிரப் புயலாக வலுப்பெற்று ஞாயிற்றுக்கிழமை (மே 26) வங்கதேசம் மற்றும் அதனையொட்டியுள்ள மேற்கு வங்கக் கடற்கரையை கரையை கடக்கக் கூடும். இந்த புயலுக்கு ஓமன் நாடு பரிந்துரைத்த ‘ரீமெல்’ என்ற பெயா் சூட்டப்பட்டுள்ளது.

மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு: இதனிடையே, கேரள கடற்கரையையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இந்த நிகழ்வுகளின் காரணமாக வெள்ளிக்கிழமை (மே 24) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சனிக்கிழமை முதல் புதன்கிழமை (மே 25-29) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: வெள்ளி முதல் திங்கள்கிழமை (மே 24-27) வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும்.

வெப்பநிலை: இதனிடையே, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெள்ளி முதல் திங்கள்கிழமை(மே 24-27) வரை வெப்ப நிலை 2முதல் 3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com