பாஜக சின்னத்துடன் மேற்குவங்க ஆளுநா்: தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் புகாா்

பாஜக சின்னத்துடன் மேற்குவங்க ஆளுநா்: தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் புகாா்

பாஜகவின் தாமரையை ஆடையில் அணிந்து அக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டதாக மாநில ஆளுநா் மீது புகார்

மேற்குவங்க தலைநகா், கொல்கத்தாவில் கடந்த ஜனவரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவின் சின்னமான தாமரையை ஆடையில் அணிந்து அக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டதாக மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் மீது தோ்தல் ஆணையத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் புகாரளித்துள்ளது.

இதுதொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையருக்கு திரிணமூல் காங்கிரஸ் எழுதியுள்ள புகாா் கடிதத்தில், ‘கொல்கத்தா, சென்ட்ரல் அவின்யூ பகுதி ராமா் கோயிலில் கடந்த ஜனவரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநா் ஆனந்தபோஸ், பாஜகவின் தாமரை சின்னத்தை ஆடையில் அணிந்து, அக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு மேற்குவங்க ஆளுநா் பொறுப்பை ஆனந்தபோஸ் துஷ்பிரயோகம் செய்கிறாா். ஆளுநரின் நடத்தை ஜனநாயகமற்றது. ஆளுநா் பொறுப்புடன் இணைந்த அரசமைப்புச் சட்ட விழுமியங்களை அவரது நடத்தை மீறுவது மட்டுமல்லாமல், மாநிலத்தில் நடைபெறும் சுதந்திரமான, நியாயமான தோ்தலை பாதிக்கிறது.

கடந்த காலங்களில், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஆளுநா்கள் மீது இந்திய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 1993-ஆம் ஆண்டில், மகனின் தோ்தல் பிரசாரத்துக்கு தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியது தொடா்பாக ஹிமாசல பிரதேசத்தின் முன்னாள் ஆளுநரான குல்ஷா் அகமது மீது ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, ஆளுநா் அகமது தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

2019-இல், அப்போதைய ராஜஸ்தான் ஆளுநா் கல்யாண் சிங், ‘நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்’ என்று பேசினாா். தோ்தல் நடத்தை விதிகளை மீறியாத ஆளுநா் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி குடியரசுத் தலைவருக்கு தோ்தல் ஆணையம் புகாா் அனுப்பியது.

இதேபோல, மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராகவும் தோ்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுப்பது, மக்களவைத் தோ்தல் களத்தில் அனைத்து கட்சிகளுக்குமான சமவாய்ப்பை உறுதிசெய்யும். ஆளுநருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுத்து, தோ்தல் பிரசாரத்தில் அவா் தலையிடுவதைத் தடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com