பழம்பெரும் இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி காலமானார்

பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி (93) உடல்நலக்குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) காலமானார்.
பழம்பெரும் இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி காலமானார்

பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி (93) உடல்நலக்குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) காலமானார்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை பூர்விகமாக கொண்ட தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தினர், கேரள மாநிலத்துக்கு தொழில் நிமித்தம் சென்றனர். ஆலப்புழையில் வசித்து வந்த தட்சிணாமூர்த்தி மலையாள திரைப்பட இசையில் கர்நாடக சங்கீதத்தை அறிமுகம் செய்தவர்.

அடிப்படையில் கர்நாடக இசை வாய்ப்பாட்டுக்காரரான இவர் பழம்பெரும் பின்னணிப் பாடகி பி.லீலாவுக்கு வாய்ப்பாட்டு கற்றுத் தந்தார். லீலாவின் தந்தை மூலம் தட்சிணாமூர்த்திக்கு திரைப்பட வாய்ப்பு வந்தது.

1948-ல் வெளிவந்த "நல்லதங்காள்' திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது. "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை இசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகரை திரைப்பட உலகுக்கு அறிமுகம் செய்தவர் இவர்.

பின்னாளில் ரஹ்மான் இளம் வயதில் தட்சிணாமூர்த்தியின் இசையில் கீபோர்டு வாசித்துள்ளார். கே.ஜே.யேசுதாஸின் தந்தை அகஸ்டின் ஜோசஃப், யேசுதாஸ், அவரது மகன் விஜய் யேசுதாஸ் என மூன்று தலைமுறையினர் இவரது இசையில் பாடியுள்ளனர்.

பல மலையாள திரைப்படங்களுக்கு இவரது இசையில் இசையமைப்பாளர் இளையராஜா கிடார் வாசித்துள்ளார்.

பின்னர் தட்சிணாமூர்த்தியிடம் சிறிது காலம் கர்நாடக இசை பயின்றார் இளையராஜா. அவரது மகள் பவதாரிணியும் இவரிடம் கர்நாடக இசை பயின்றவர்.

குருவாயூரில் உள்ள பிரபல கிருஷ்ணன் கோயில் நிர்வாகம் "நாராயணீயம்' என்ற பக்தி செய்யுள்களுக்கு இசை அமைக்க இவரைத் தேர்ந்தெடுத்தது. மலையாள திரையிசை உலகில் இவரை "ஸ்வாமி' என்று அழைப்பர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு தட்சிணாமூர்த்தி இசையமைத்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வி.தட்சிணாமூர்த்தி உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு சனிக்கிழமை நண்பகல் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com