எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

"எனது பல இயக்குனர் நண்பர்களை ஒரு மியுசிக்கல் ஃபிலிம் செய்ய சொல்லி கேட்டுகொண்டே இருப்பேன்.
எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் வானவில் வாழ்க்கை.

முற்றிலும் புதுமுக நடிகர்களை இதில் அறிமுகம் செய்துள்ளார். இந்தியாவின் முதல் மியுசிக்கல் ஃபிலிம் என்ற பெருமையை பெற்றுள்ள இப்படத்தில் மொத்தம் 17 பாடல்கள்  உள்ளது. இப்படத்தில் அறிமுகமாகும் கலைஞர்கள் அனைத்து பாடல்களையும் பாடி நடித்துள்ளனர். இரண்டு கல்லூரியின் இசைக்குழுக்கள் இடையே நடக்கும் போட்டியை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் வசந்த் டிரைலரை வெளியிட்டார். ‘பசங்க’ புகழ் இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் ‘கோ’ ‘அங்காடி தெரு’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன் இருவரும் பாடல்களை வெளியிட்டனர்.

இயக்குனர் வசந்த் பேசுகையில், "ஜேம்ஸ் வசந்தனை எனக்கு ஒரு இசையமைப்பாளராக மிகவும் பிடிக்கும். அவரது பாடல்களுக்கு நான் ரசிகன். ‘மெலோடி கிங்’ இவர்” என்று வாழ்த்தினார்.

இயக்குனர் பாண்டிராஜ் பேசுகையில், "ஜேம்ஸ் சார் எனக்கு சினிமாவைப் பற்றி நிறைய சொல்லி கொடுத்தவர். படத்தின் தயாரிப்பு நேரம் மற்றும் அதன் செலவுகளை உணர்ந்தவர். என்னை ஒரு மியுசிக்கல் படம் செய்ய சொன்னார். ஆனால், நான் அதிலிருந்து லாவகமாக விலகினேன். இன்று அத்தகைய ஒரு விஷயத்தை அவரே சாதித்து காட்டியுள்ளார்.” என்று கூறினார்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் பேசுகையில், "எனது நண்பன் ஆர்.கே.பிரதாப் இப்படத்திற்கு நன்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். திறமைமிக்க கலைஞன். இந்த வண்ணமயமான இளைஞர் குழு வெற்றிபெற வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

இறுதியாக பேசிய ஜேம்ஸ் வசந்தன், "எனது பல இயக்குனர் நண்பர்களை ஒரு மியுசிக்கல் ஃபிலிம் செய்ய சொல்லி கேட்டுகொண்டே இருப்பேன். இன்று அப்படி ஒரு நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. இந்த திறமைமிக்க இளைஞர் பட்டாளம் எனக்கு இந்த படத்தை உருவாக்குவதில் பெரிதும் உதவினர். இப்படத்தை தயாரித்த எனது தயாரிப்பாளர்கள் ஒசென்னா ஏ.ஜே.ஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தார்க்கு எனது நன்றிகள்." என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com