வலியவன் - சினிமா விமரிசனம்

ஹீரோயின், ஹீரோவின் காதலை ஏற்க வேண்டுமென்றால் ஒருவரைக் காண்பித்து, அவனை நீ

ஹீரோயின், ஹீரோவின் காதலை ஏற்க வேண்டுமென்றால் ஒருவரைக் காண்பித்து, அவனை நீ அடிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார். சாதாரணனான ஹீரோவும், நாயகி சொன்ன ஆளைப் பார்த்தவுடன் ஓகே சொல்லி விடுகிறார். அவர் அடிக்க வேண்டியவர். சர்வதேச குத்துச் சண்டை வீரர்! எதனால் ஹீரோயின் அப்படிச் சொல்கிறார்? ஹீரோவும் ஏன் ஒப்புக்கொள்கிறார்? இந்தக் கேள்விகளுக்கான விடைதான் வலியவன் படத்தின் எளிமையான கதை.

'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கிய சரவணன்தான் இந்தப் படத்தின் இயக்குநர் என்பதை நம்பமுடியாத அளவுக்கு ஒரு படம். கடைசி கால் மணி நேரம் தவிர மீதிக் காட்சிகளில் வேகமோ சுவாரசியமோ இல்லை. அதிலும் முதல் பாதி மிகவும் ஏமாற்றிவிடுகிறது. எங்கேயும் எப்போதும் படத்தில் இரண்டு அழகான காதல் கதைகளை வழங்கிய சரவணன் இந்தப் படத்தில் சறுக்கியது அநாவசிய காதல் காட்சிகளில்தான். காமெடியும் எடுபடாதது ரசிகர்களை ரொம்பவே சோதித்துவிடுகிறது. ஒருவழியாக, இறுதிக் கட்டத்தில்தான் படம் வேகம் பிடிக்கிறது. 2 மணி நேரமாக அமைதியாக இருக்கும் ரசிகர்கள் அப்போதுதான் லேசாக ஆர்ப்பரிக்கிறார்கள். 

ஜெய் ஆக்‌ஷன் ஹீரோ, ஆண்ட்ரியா சோலோ ஹீரோயின் என இரு ஆச்சரியங்கள். படம் முழுக்க ஜெய், வாய்ஸ் ஓவரில் நிறைய பேசுகிறார். பல இடங்களில் அவர் என்ன பேசுகிறார் என்பதே புரியவேயில்லை. சமகால தமிழ் சினிமா ஹீரோக்கள்போல் கிளைமாக்ஸில், தன்னையும் வலியவனாக மாற்றிக்கொண்டுள்ளார்.  கதைப்படி ஹீரோயினுக்கு கிளாமர் வேடமில்லை என்றாலும் சில காட்சிகளில் ஆண்ட்ரியா ரொம்பக் கவர்ச்சியா வருகிறார்! அழகம் பெருமாளுக்கு நல்ல வேடம். அப்பா - மகன் பேசிக்கொள்ளாத காட்சிகளும் அதன் விளைவுகளும் உணர்வுபூர்வமாகக் கையாளப்பட்டுள்ளன.

பாடல்களில் ஏமாற்றிய இமான், பின்னணி இசையில் வெகுவாகக் கவர்ந்திருக்கிறார். எடிட்டிங் சிறப்பாக இருந்திருந்தால் ஓரளவு படத்தைக் காப்பாற்றியிருக்க முடியும்.

வில்லன், ஒலிம்பிக்ஸில் குத்துச் சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். (ஆனாலும் பணத்துக்காக தங்கத்தை விட்டுக் கொடுத்தவராகக் காண்பிக்கப்படுகிறார்). ஒருநாள், ஹீரோ இவரை இரவு நேரத்தில் அடித்துத் துவைத்துவிடுகிறார். அதன் வீடியோ வெளியே பரவிவிடுகிறது. வீடியோவில் உள்ளது தான் இல்லை என்று சமாளித்தாலும், அந்தக் குத்துச்சண்டை வீரர், தன்னை அடித்தவனுடன் சண்டை போட்டு திறமையை நிரூபிக்க முன் வருகிறார்! அதுவும், மீடியா முன்பு! அது எல்லா டிவிகளிலும் லைவாக வேறு ஒளிபரப்பப்படுகிறது! இப்படியொரு போட்டிக்கு எந்த ஒரு குத்துச் சண்டைப் பிரபலம் ஒப்புக்கொள்வார்? 

இன்னமும், எங்கேயும் எப்போதும்தான் சரவணனின் அடையாளமாக இருக்கிறது. அதை அடுத்தப் படத்திலாவது மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

- தினமணி.காம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com