பிகிலா கைதியா?: தமிழ் சினிமாவுக்கு எது தேவை?

‘கைதி’க்கு வரவேற்பு பெருக ஆரம்பித்திருப்பது பார்வையாளர்களின் ரசனை மாற்றத்தைப்  பிரதிபலிக்கிறது.
பிகிலா கைதியா?: தமிழ் சினிமாவுக்கு எது தேவை?

தமிழ் சினிமா நூறாண்டுகளைக் கடந்திருக்கும் நிலையில் சினிமா என்கிற கலையைக் கையாளும் விதத்தில் நாம் முன்னகர்ந்து இருக்கிறோமா அல்லது பின்தங்கியிருக்கிறோமோ என்பதைச் சமீபத்திய தீபாவளி பண்டிகையின்போது வெளிவந்த பிகில் மற்றும் கைதி ஆகிய இரு படங்களைக் கொண்டு பார்ப்போம்.

*

முன்பெல்லாம் பண்டிகைக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சினிமா இருந்தது. ஒரு திரைப்படத்திற்குச் செல்லப் போகிறோம் என்பதே மிகுந்த ஆவலையும் பரபரப்பையும் கிளப்புவதாக இருந்தது. அதற்குக் கிளம்பும் சடங்குகளும் சுவாரசியமான அனுபவங்களாக இருந்தன. அதே மகிழ்ச்சியை இன்றும் நாம் தக்க வைத்திருக்கிறோமோ என்று பார்த்தால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

இருபத்து நான்கு மணி நேரமும் சினிமாக்களையும் அது தொடர்பான செய்திகளையும் உமிழ்ந்து கொண்டேயிருக்கும் தொலைக்காட்சி உள்ளிட்ட பல ஊடகங்கள் சினிமா மீதான ஆவலை பெரிதும் குலைத்திருக்கின்றன. மேலும் திரையரங்கக் கட்டணம், நொறுக்குத் தீனிகள், பார்க்கிங் போன்ற செலவுகள் அபரிமிதமாகப் பெருகியிருக்கும் சூழலில் ஒரு குடும்பம் சினிமாவிற்குச் செல்வது பெரும் சுமையாக மாறி விட்டிருக்கிறது. இதனால் முக்கியமான திரைப்படங்களுக்கு மட்டும் சென்றால் போதும், அல்லது அதையும் சில நாட்களில் தொலைக்காட்சியில் அல்லது இணையத்தில் பார்த்து விடப் போகிறோமே என்கிற விட்டேற்றியான மனநிலை பெருகியிருக்கிறது.

ஹாலிவுட் சினிமா, அதன் தமிழாக்க வடிவம், அமெரிக்காவின் தொலைக்காட்சித் தொடர்கள், சமீபத்தில் பெருகி வரும் வெப்சீரிஸ் போன்றவை இளைய தலைமுறையின் ரசனையை மெல்ல மாற்றியமைக்கத் துவங்கியிருக்கின்றன. இந்திய சினிமாவின் தேய்வழக்குகள் மீது அவர்களுக்கு ஒவ்வாமையும் கேலியும் உருவாகத் துவங்கியிருக்கின்றன. ஒரு திரைப்படம் என்பது புதுமையான உள்ளடகத்துடன் கச்சிதமாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்து ஒரு நல்ல அனுபவத்தைத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இன்றைய சினிமாவின் வணிகத்தைப் பிரதானமாக தீர்மானிப்பவர்கள் பெரும்பாலும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், தமிழ் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இது சார்ந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எந்தவொரு கவனஈர்ப்புத் தந்திரங்களையாவது செய்து பார்வையாளர்களைத் திரையரங்கிற்கு வரவழைக்கும் கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனால் வெறும் தந்திரங்களினால் பார்வையாளர்களைத் தொடர்ந்து ஏமாற்ற முடியாது.

முந்தைய காலத்துப் பண்டிகை நாள்களில் இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களோடு அடுத்த நிலையில் உள்ள நடிகர்களின் திரைப்படங்களும் கூடவே வெளியாகும். சுமாரான படங்கள் தோராயமாக ஐம்பது நாட்களும் முன்னணி நாயகர்களின் படங்கள் நூறு நாட்களுக்கும் மேல் ஓடுவது இயல்பான சூழலாக இருந்தது. எனவே ஒரு சராசரி பார்வையாளன் தன் தேர்வை சாகவாசமாகவும் பரவலாகவும் செய்ய வாய்ப்புகள் அதிகம் இருந்தன.

ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ். ஒரு முன்னணி நாயகனின் திரைப்படம் வெளியானால் அன்று இதர திரைப்படங்கள் அனைத்திற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகின்றன. பெரும்பான்மையான திரையரங்குகளைக் குறிப்பிட்ட பெருமுதலீட்டுத் திரைப்படமே கைப்பற்றிக் கொள்கிறது. ‘எந்தத் திரைப்படத்தைப் பார்ப்பது’ என்கிற தேர்வும் சுதந்தரமும் பார்வையாளனுக்கு முற்றிலும் மறுக்கப்படுகிறது.

‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்பது போல் குறிப்பிட்ட நடிகரின் திரைப்படமே எங்கும் வியாபித்திருக்கிறது. பண்டிகையைக் கொண்டாட ஒரு திரைப்படத்திற்குச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தால் வேறு வழியின்றி அந்த நடிகரின் திரைப்படத்தில் சென்றுதான் முட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சமகால நுகர்வுக் கலாசாரத்தில் ஒரு வாடிக்கையாளரின் முன்னால் பல்வேறு தேர்வுகள் கொட்டிக்  கிடக்கும் சூழலில் தமிழ் சினிமா அதற்கு எதிர்புறமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் ஏராளமான சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றில் கலந்திருக்கும் நல்ல முயற்சிகளும் பார்வையாளனின் கண்ணுக்கு அகப்படாமல் மறைந்து போகின்றன. நல்ல சினிமா மலரும் போக்கும் இதனால் பாதிக்கப்படுகிறது.

ஆனால் ஒரு விஷயம் மாறவில்லை. முன்னணி நாயகர்களின் திரைப்படங்களைப் பற்றிய அறிவிப்பு வந்தவுடனேயே குறிப்பிட்ட ரசிகர்களுக்கும் அவர்களின் எதிர்முனையில் நிற்கும் இன்னொரு நடிகரின் ரசிகர்களுக்கும் இடையே முட்டலும் மோதலும் சார்ந்த பரபரப்பு அதிகரித்து விடுகிறது. முன்பு தெரு முனைகளில் நிகழ்ந்து கொண்டிருந்த இந்த வரலாற்றுப் போர்கள், இன்று சமூகவலைத்தளங்களில் மேலதிக ஆவேசமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

‘எந்த நடிகரின் திரைப்படம் அதிகம் வசூல் அடைந்தது?’ என்பது உள்ளிட்ட பல விஷயங்களில் தயாரிப்பாளருக்கே தெரியாத புள்ளி விவரங்களுடன் ரசிகர்கள் ஆவேசமாக மோதிக் கொள்கிறார்கள். இதனால் தனக்கு என்ன பயன் என்கிற அடிப்படையை அவர்கள் சிந்திப்பதில்லை. திரைப்படம் வெளியாகும் நாள்களில் பாலாபிஷேகம், அலகு குத்துதல், காவடி தூக்குதல், மண்சோறு சாப்பிடுதல் போன்ற சடங்குகள் வைபோகமாக நடைபெறுகின்றன.

வருடங்கள் எத்தனையோ கடந்தாலும் இது போன்ற அபத்தமான ஆட்டுமந்தைப் போக்குகள் மாறாமல் இருப்பதற்கும், தமிழ் சினிமாவின் தரத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. நிழல் சாகசம் புரியும் கதாநாயகனை நிஜ அவதாரமாக கருதி வழிபடும் போக்கு இன்னமும் மாறாமல் இருக்கிறது.

அவர்களின் பாமரத்தனம் அப்படியே மாறாமல் இருந்தால்தான் தங்களின் வணிகம் அமோகமாக நடக்கும் என்பதை நடிகர்களும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஊடகங்களும் தங்களின் ஆதாயத்திற்காக இந்தப் போக்கினை எண்ணைய் ஊற்றி வளர்க்கிறார்கள். சினிமா தொடர்பான வம்புகளும் கிசுகிசுக்களும் உப்புக்குப் பெறாத விவரங்களும் முக்கியத்துவம் தந்து வெளியிடப்படுகின்றன.

முன்பு வணிக நோக்குத் திரைப்படங்களே பெரும்பாலும் தமிழ் சினிமாவை ஆக்ரமித்திருந்தன. மிக அரிதாகவே மாற்று முயற்சிகள் நடந்தன. மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்ரைய்யா போன்றவர்கள் இந்தப் போக்கினை வளர்த்தெடுக்க முயன்றாலும் அது சொற்பமாகவே ஈடேறியது.

ஆனால் இன்றைய நிலைமையில் சற்று மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பே குறிப்பிட்ட படி உலக சினிமா, ஹாலிவுட் சினிமா, வெப்சீரிஸ் போன்வற்றின் பரிச்சயங்களால் ரசனையில் சற்று மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பாடல்கள், சண்டைக்காட்சிகள், ரொமான்ஸ், சென்டிமென்ட் என்கிற வழக்கமான கலவையை இளம் பார்வையாளர்கள் நிராகரிக்கத் துவங்கியிருக்கிறார்கள். இந்த மாற்றத்தை இளம் இயக்குநர்களும் புரிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள்.

இதற்காக வணிகநோக்குத் திரைப்படங்களை முற்றிலுமாக வெறுக்கத் தேவையில்லை. ஒரு காடு வளமாக இருக்கிறது என்பதன் அடையாளம், ஒரு கொழுத்த புலிதான் என்கிறார்கள். அதைப் போல சினிமாத்துறை தொடர்ந்து இயங்க அதன் வணிகம் சிறப்புற நடைபெறுவது அவசியம். ஆனால் வணிக நோக்குத் திரைப்படங்கள் ‘க்ளிஷே’க்களால் நிரம்பியிருக்காமல் புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டுமென்று பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த நோக்கில் ‘பிகிலை’ அப்பட்டமான வணிகநோக்குத் திரைப்படமாகவும் ‘கைதி’யை இந்தப் போக்கிலிருந்து சற்று விலகிய மாற்று முயற்சியாகவும் பார்க்கலாம். ஆனால் அடிப்படையில் இரண்டுமே வணிக சினிமாக்கள்தான் என்பதையும் கவனிக்க வேண்டும்.

*

பிகில் அல்லது கைதி ஆகிய இரண்டில் ஒரு திரைப்படம் பார்க்கலாம் என்று ஒரு சராசரி பார்வையாளன் முடிவு செய்தால் அவனுடைய தேர்வு என்னவாக இருக்கும்? நிச்சயம் ‘பிகில்’தான். குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் அந்தத் திரைப்படத்தை தேர்வு செய்வதில் ஆச்சரியம் ஒன்றும் இருக்க முடியாது. ஆனால் அதையும் தாண்டிய பொதுப் பார்வையாளர்களும் ‘பிகிலை’த்தான் தேர்வு செய்வார்கள்.

ஏனெனில் சினிமா என்பது இன்னமும் இங்கு கேளிக்கையின் பிரதான வடிவமாகத்தான் பார்க்கப்படுகிறது. அதைக் கலை வடிவமாக, சமூக மாற்றத்தின் கருவியாக பார்க்கும் போக்கு இங்குப் பரவலாக இல்லை. ஒரு திரைப்படத்திற்குச் சென்றால் அதில் காட்டப்படும் ஆடல், பாடல், நகைச்சுவை, சென்ட்டிமென்ட் அனைத்தையும் ரசித்து விட்டு மனமகிழ்ச்சியோடு வீடு திரும்ப வேண்டும் என்கிற எண்ணமே இன்று பெரும்பாலோனோருக்கு இருக்கிறது. ஒரு திரைப்படத்திற்குச் செல்லும் செலவே அதிகம் என்னும் போது அதுவொரு முற்றிலும் பொழுதுபோக்குப் படமாக இருக்க வேண்டும் என்றே சராசரியான பார்வையாளன் எதிர்பார்க்கிறான்.

ஆனால் இந்த நோக்கத்தை ‘பிகில்’ பூர்த்தி செய்திருக்கிறதா என்று பார்த்தால் ஒருபுறம் செய்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. ரசிகன் உள்ளிட்டு ஒரு சராசரி பார்வையாளன் எதிர்பார்க்கும் அத்தனை விஷயங்களும் அதில் இருக்கின்றன. ஆனால் வழக்கமான வணிக சினிமாவிலிருந்து சற்று மாறுபட்டு புதுமையான போக்கும் உள்ளடக்கமும் கொண்டிருக்கிறதா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை.

இதில் வரும் ராயப்பன் என்கிற பாத்திரம் ‘நல்ல ரெளடியாக’ இருக்கிறார். (இது போன்ற விசித்திரங்களை தமிழ் சினிமாவில் மட்டும்தான் காண முடியும்). கால்பந்து விளையாட்டின் மூலம் இளைஞர்களை முன்னேற்ற முடியும் என அவர் கருதுகிறார். தன் மகனை அதற்கான முன்னுதாரணமாக வளர்க்கிறார். ஆனால் சூழல் காரணமாக அது நடைபெறவில்லை. தந்தையின் இடத்திற்கு மகன் வர வேண்டிய சூழல். ‘காட்பாதர்’ என்னும் திரைப்படத்தின் திரைக்கதை ‘நாயகனில்’ இருந்து மறுபடியும் மறுபடியும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நகலெடுக்கப்படுகிறது என்பதற்கான உதாரணம் இது.

ரெளடியாக மாறும் மகன் என்ன செய்கிறார்? தந்தையின் கனவை நண்பனின் மூலம் நிறைவேற்ற முயல்கிறார். அதில் தடை ஏற்படும் சூழலில் தானே அந்தக் கனவை நிறைவேற்ற முன்வருகிறார். அதில் எதிர்கொள்ள சிக்கல்களை தீர்க்க என்னவெல்லாம் செய்கிறார் என்பதெல்லாம் இரண்டாம் பாதி. இது அப்பட்டமாக ‘சக்தே இந்தியா’ என்னும் திரைப்படத்தை நகலெடுத்திருக்கிறது.

ஆக இரண்டு திரைக்கதைகளை சாமர்த்தியமாக ஒட்ட வைக்கும் நோக்கில் அட்லி செயல்பட்டிருக்கிறார். இதில் ஒன்றும் பெரிதாகத் தவறில்லை. முன்னோர்களிடமிருந்து தூண்டுதல் பெற்றுதான் இளம் படைப்பாளர்கள் செயல்பட முடியும். ஆனால் அவை முன்னோடிகளின் படைப்பைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அடுத்த அடியைத் தாண்டிச் செல்லும் சிறப்பைக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, இருப்பதையும் பாழ்படுத்தும் அபத்தத்தை நிகழ்த்தக் கூடாது. ‘பிகிலில்’ நடைபெற்றிருக்கும் விபத்து இதுதான்.

இரண்டு திரைக்கதைகளும் சரியாக ஒட்டாமல், குழப்பியடித்து இந்தப்படத்தின் மையம் என்ன என்று குழம்ப வேண்டியிருக்கிறது. பிகில் டிரைய்லரின் மூலம் இது விளையாட்டு சார்ந்த திரைப்படம் என்கிற தோற்றத்தைக் கொண்டிருந்தது. ஆனால் படத்திலோ அவை தொடர்பான காட்சிகள் மிக மொண்ணைத்தனமாகவும் சொற்பமாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தன. நாயகனின் சாகசக் காட்சிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த முக்கியத்துவம் கூட இதற்கு அளிக்கப்படவில்லை.

மாறாக ‘சக்தே இந்தியா’வில் என்ன நடக்கிறது? படத்தின் ஆரம்பக்காட்சி முதல் இறுதிவரை விளையாட்டை ஒட்டியே திரைக்கதை நகர்கிறது. மத அடையாளம் காரணமாக நாயகன் அடையும் அவமதிப்பு என்ன, ஏன் அவன் எவரும் கவனிக்காத பெண்கள் ஹாக்கி அணியை வழிநடத்திச் செல்ல முன்வருகிறான், அந்தப் பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் அரசியல்களும் சிக்கல்களும் என்ன என்பதெல்லாம் மிக வலுவான காட்சிகளாக அமைகின்றன. குறிப்பாக விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான காட்சிகள் அதிகபட்ச நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருந்தன. நாயகனின் பின்னணியோ, அவன் செய்யும் சாகசங்களோ படத்தில் கிடையாது. ஆனால் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதையுடன் இருந்தது.

‘சக்தே இந்தியா’வும் வணிகத் திரைப்படம்தான். ஆனால் பரபரப்பான திரைக்கதையின் இடையில் இந்தியாவின் பன்மைத்துவ அடையாளச் சிக்கல், சிறுபான்மையினர் இங்கு எதிர்கொள்ளும் அவமதிப்புகள், பின்தங்கிய மாநிலங்களில் உள்ளோர் எதிர்கொள்ளும் அவமானங்கள், விளையாட்டுத் துறையில் உள்ள அரசியல், பெண்கள் விளையாட்டு பாரபட்சத்துடன் அணுகப்படுவது போன்ற பல ஆதாரமான விஷயங்கள் உறுத்தாமல் அதே சமயத்தில் அழுத்தத்துடன் திரைக்கதையில் இணைக்கப்பட்டிருந்தன.

ஆனால் இவை எதுவுமே ‘பிகிலில்’ சாத்தியப்படவில்லை. ‘பெண்களின் முன்னேற்றத்திற்கான திரைப்படம்’ என்கிற பிரகடனம் முழங்கப்பட்டாலும் அவை வலிந்து நுழைக்கப்பட்ட செயற்கைத்தன்மையுடன் இருந்தது. பெண்களை அவமதிக்கும் காட்சிகள் இருந்ததற்காக ‘பிகில்’ விமரிசிக்கப்படும் நகைமுரண் வேறு நடந்துள்ளது.

மேலும் ‘மெசேஜ் சொல்கிறோம்’ என்கிற பாவனையில் இந்த இயக்குநர்கள் செய்யும் அட்டூழியங்கள் தாளவில்லை. விவசாயம், மருத்துவம், அரசியல், பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றை ஊறுகாயாகத் தொட்டுக்கொண்டு வணிக சினிமாக்களைத்தான் இவர்கள் உற்பத்தி செய்கிறார்கள்.  சமூகப் பிரச்னைகளை ஆவேசமாகப் பேசுகிறோம் என்கிற நாடகத்தின் மூலம் அவற்றின் அழுத்தத்தை நீர்த்துப் போகும் ஆபத்தைத்தான் செய்கிறார்கள். பிகிலும் இதற்கு விதிவிலக்கல்ல.

கைதியும் அடிப்படையில் ஒரு வணிகப்படமே. ஆனால் காதல், டூயட், அபத்த நகைச்சுவை என்கிற வழக்கமான அம்சங்கள் எதுவும் இதில் இல்லை. அவை துணிச்சலாகத் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. வழக்கமான கலவையைத் தாண்டி இந்தத் திரைப்படம் ஒரு படி முன்னேறியிருந்தது. ஒரே இரவில் நிகழும் திரைக்கதை என்கிற சவாலைத் தனக்குள் ஏற்படுத்திக்கொண்டு அந்த எல்லைக்குள் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் பயணித்திருந்தது. கார்த்தி, நரேன், தீனா, ஜார்ஜ் உள்ளிட்ட சொற்ப பாத்திரங்களே இருந்தாலும் தன் பரபரப்பை எவ்வகையிலும் தவற விடாத படமாக உள்ளது. 

ஆனால் இதிலும் தனிநபர் சாகசம், அது தொடர்பான மிகையான சித்திரங்கள், அப்பா – மகள் செண்டிமென்ட் போன்ற வழக்கமான அம்சங்கள் இருந்தது ஏமாற்றமே. இவற்றைத் தவிர்த்தும் கூட இந்தப் படத்தை விறுவிறுப்பாகவும் மேலதிக நம்பகத்தன்மையுடனும் இயக்குநரால் சொல்லியிருக்க முடியும். ஆனால் அவற்றையும் தவிர்த்தால் பார்வையாளர்கள் ஏற்பார்களா என்கிற தயக்கம் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் ஒருவேளை இருந்திருக்கக்கூடும்.

இந்தத் தீபாவளிக்கு வெளி வந்த திரைப்படங்களில், ஒரு சராசரி பார்வையாளனின் முதல் தேர்வு ‘பிகிலாக’ இருந்தாலும் சினிமா ரசனையில் முன்னேறிய சமூகத்தினரின் தேர்வு ‘கைதி’யாகவே இருந்தது. துவக்கத்தில் ‘பிகிலின்’ ஆக்கிரமிப்பு மற்றும் பாதிப்பு அதிகம் இருந்தாலும், வாய்மொழிப் பாராட்டு காரணமாக ‘கைதி’க்கு வரவேற்பு பெருக ஆரம்பித்திருப்பது பார்வையாளர்களின் ரசனை மாற்றத்தைப்  பிரதிபலிக்கிறது.

இந்த ரசனை மாற்றம் பெருநகரம், சிறுநகரம் போன்றவற்றில் உள்ள இளம் தலைமுறையினரிடம் பெருகியிருக்கலாம். ஆனால் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் இன்னமும் வழக்கமான கலவையில் உள்ள சினிமாக்களையே அதிகம் விரும்புகிறார்கள். அதனால்தான் வணிக இயக்குநர்களின் ஆக்கிரமிப்பு இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த ரசனை மாற்றம் இனி கிராமங்களிலும் மெல்லப் பரவும் போது வழக்கமான தேய்வழக்கு சினிமாக்கள் எடுபடாது. வணிக சினிமாவாக இருந்தாலும் அதில் புதுமையும் வித்தியாசமும் இருக்க வேண்டும் என்று சமகால பார்வையாளர்கள் எதிர்பார்ப்பது பரவலாகிக் கொண்டு வருகிறது. பெரும்பாலான இளம் இயக்குநர்கள் இந்த மாற்றத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ், அட்லி ஆகிய இருவருமே இளம் இயக்குநர்கள்தான். முன்னவருக்கு இந்த மாற்றம் புரிந்திருக்கிறது. பின்னவருக்கும் இனி இது புரியத் துவங்கும். அல்லது மெல்லப் பெருகும் ரசனை மாற்றம் அவரைப் போன்றவர்களுக்குப் புரிய வைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com