வாசகர்களின் கேள்விகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பதில்கள்!

எல்லா நடிகர்களுக்கும் மனைவி வந்த பிறகு அதிர்ஷடம் என்கிறார்கள். உங்கள் அனுபவம் எப்படி? (திருமணத்துக்குப் பிறகு படங்கள் குறைந்து விட்டதுபோல தெரிகிறதே!)
super star Rajnikanth
super star Rajnikanth

6-லிருந்து 60 வரை முள்ளும் மலரும், ஜானி போன்ற தங்கள் நடிப்புத் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்த படங்களுக்கு இடையில் டைகர், நெருப்பு, இன்ஸ்பெக்டர் ரஜினி போன்ற படங்களிலும் நடித்து உங்கள் இமேஜை கெடுத்துக் கொள்வது தேவைதானா?

என்.ஸ்ரீராமுலு, நாகப்பட்டினம்

எந்தப் படமானாலும் ஆரம்பத்தில் நன்றாக அமையும், நல்ல பெயரைப் பெற்று நன்றாக ஓடும் என்று எதிர்ப்பார்த்துத்தான் எடுக்கிறார்கள்! ஆனால் சில….வேறு திசையில் திரும்பி விடுகின்றன! இப்படிப்பட்ட படங்களில் வருவதால் தான் அப்படிப்பட்ட படங்களின் அருமை தெரிகிறது இல்லையா?

**

எல்லா நடிகர்களுக்கும் மனைவி வந்த பிறகு அதிர்ஷடம் என்கிறார்கள். உங்கள் அனுபவம் எப்படி? (திருமணத்துக்குப் பிறகு படங்கள் குறைந்து விட்டதுபோல தெரிகிறதே!)

டாக்டர் மிஸ்.எஸ்.அந்தோனி, கோவை-12

ஒரு மனிதன் திருப்தியாக, நல்லவிதமாக வாழ்வதற்கு பணம், வசதி, புகழ் மட்டும் கிடைத்தால் போதாது. மன நிம்மதி அவசியம் வேண்டும். என் மனைவி வந்த பிறகுதான் அது எனக்குக் கிடைத்தது. காசு பணத்தால் பெற முடியாத மன நிம்மதியை அவளால் அடைந்திருக்கும் போது அது என் அதிர்ஷ்டம் என்றுதான் அர்த்தம்! திருமணத்துக்குப் பிறகு எனக்கு படங்கள் குறைந்து விட்டதாகக் கூறுவது தவறு. நல்ல கேரக்டர்களை மட்டுமே ஏற்றுக் கொள்வது என்ற முடிவின் அடிப்படையில் எல்லா படங்களையும் ஏற்றுக் கொள்ளுவதில்லை! அவ்வளவே!

அரசியல், சினிமா, விபச்சாரம் இம்மூன்றில் குறிப்பிடத்தக்க தொழில்?

- எம்.ஏ.அஜீஸ், களியக்காவிளை

திறமையை வைத்து சம்பாதிப்பது சினிமா. பதவியை வைத்து பலப்படுத்திக் கொள்வது அரசியல். உடம்பை வைத்துப் பிழைப்பது விபச்சாரம். எல்லாமே தொழில் தான், பாகுபாடு இல்லை என்பது என் அபிப்ராயம். இதில் முதலிரண்டில் பெயர் வருவதை விரும்புவார்கள்! மூன்றாவதில் பெயர் வருவதை விரும்ப மாட்டார்கள்!

**

சினிமாவில் குடும்ப வாழ்க்கையில் உங்கள் லட்சியம் என்ன?

- ஏ.மோகன், கன்யாகுமரி

சினிமாவில் என் லட்சியம் மக்கள் விரும்பிப் பாராட்டும் காரக்டர்களை ஏற்று நடிப்பது, குடும்ப வாழ்க்கையில் எல்லோரையும் மகிழ்ச்சிகரமாக வாழ வைப்பது!

**

சூப்பர் ஸ்டாரான தங்களது உள்ளத்தைக் கவர்ந்த இலக்கிய நூல் எது?

- என்.இளங்கோ, கோவை-1

ஜாவர் சீதாராமன் எழுதிய ‘உடல் பொருள் ஆனந்தி!’

**

பெண்ணொருத்தி மீது ஏற்படும் காம உணர்வுகள்தான் காதல் என்கிறேன் நான். தங்கள் கருத்து?

- மண்டுநக்குடி அஜ்மா, கூத்தாநல்லூர்

உங்களது கருத்தை நான் ஏற்கவில்லை. பெண் மீது மதிப்பு, மரியாதை, அன்பு, பாசம்…இவை படிப்படியாக வளர்ந்து தெய்விகமான காதலாக உருவாகிறது என்பது என் கருத்து.

**

வெளிவரும் தமிழ் படங்களில் பெரும்பாலானவை ஓடாமல் போவதற்கு காரணமென்ன?

- கே.பி.என்.முருகன், நீலகிரி

கதை, அதைச் சொல்லுகிற முறை, எடுக்கிற விதம் சரியில்லாததால் இருக்கலாம்!

(1980-களில் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழில் வெளியான பேட்டி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com