Enable Javscript for better performance
Remembering the legend MSV- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  முகப்பு சினிமா ஸ்பெஷல்

  எம்.எஸ்.வி. நினைவு தினம்: காலத்தால் அழியாத பாடல்களும் சம்பவங்களும்

  By எழில்  |   Published On : 14th July 2020 02:17 PM  |   Last Updated : 14th July 2020 02:18 PM  |  அ+அ அ-  |  

  msv12

   

  தமிழர்களால் மறக்க முடியாத பல பாடல்களை அளித்த இசையமைப்பாளரான எம்.எஸ். விஸ்வநாதனின் நினைவு தினம் இன்று. 

  எம்.எஸ்.வி. என்று அனைவராலும் போற்றப்பட்ட இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் (87), சுவாசக் கோளாறு காரணமாக 2015, ஜூலை 14 அன்று காலமானார். சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரையுலகப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பட்டினப்பாக்கம் வழியாக சென்ற எம்.எஸ்.வி.யின் இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

  ஊர்வலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஏராளமான இசைக் கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தினர். பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர் கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் உள்ளிட்டோர் எம்.எஸ்.வி.யின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். பகல் 12.30 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல் எரியூட்டப்பட்டது. மறைந்த எம்.எஸ்.வி.க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் ஒருநாள் ரத்து செய்யப்பட்டன. 


  அந்த தாக்கத்தின் அடையாளம்தான் இளையராஜா!

  எம்.எஸ். விஸ்வநாதனின் மறைவுக்கு இசையமைப்பாளர் இவ்வாறு இரங்க தெரிவித்தார்:

  நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே என்னுடைய மானசீக குருவாக இருந்த சி.ஆர். சுப்பராமன் எப்படி என்னுடைய உயிரில் உடலில் கலந்திருந்தாரோ அப்படியே எம்.எஸ்.வி.யும் என் உயிரில், உடலில், ரத்தநாளங்களில் இதயத் துடிப்பிலும் மூச்சுக் காற்றிலும் கலந்திருக்கிறார். "தேவதாஸ்' படத்தை சி.ஆர். சுப்பராமனால் முடித்துக் கொடுக்க முடியாமல் போனது. இதைத் தொடர்ந்து அந்த படத்தின் பாடல்களையும், பின்னணி இசைகோர்ப்பு பணியையும், முடித்துக் கொடுத்தார் எம்.எஸ்.வி. படத்தில் பிற பாடல்கள் நன்றாக இருந்தபோதும் எம்.எஸ்.வி. இசையமைத்த "உலகே மாயம் வாழ்வே மாயம்' என்ற பாடல் அவருக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்த பாடலின் வெற்றியால் தேவதாஸ் படம் நீண்டநாள் ஓடியது. அதேபோல் எம்.எஸ்.வியின் இசையினால் ஓடிய படங்கள் எண்ணிலடங்காதவை. அந்த இசை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் மறக்க முடியாதவை. அந்த தாக்கத்தின் அடையாளம்தான் இளையராஜா என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. 

  பொதுவாக கலைஞர்களை வாழும் காலத்தில் அரசியலில் இருப்பவர்கள் கண்டுகொள்வதில்லை எம்.எஸ்.வி.யும் மத்திய அரசின் விருதுகளை தேடி போகவில்லை. ஆனால், எம்.எஸ்.வி.க்கு அவர் வாழும் காலத்திலேயே முதல்வர் ஜெயலலிதா தமிழக அரசு மூலம் தனிப்பட்ட முறையில் எம்.எஸ்.வி. அவர்களுக்கு அரசின் சார்பாக மரியாதை செய்து அவர்களுக்கு கெளரவம் செய்தார். இது பாராட்டுக்குரியது என்றார்.


  பத்ம விருது: கடைசிவரை நிராகரிக்கப்பட்ட எம்.எஸ்.வி!  
   

  லதா மங்கேஷ்கருக்கு 1969ல், முதல் பத்ம விருது வழங்கப்பட்டது. பத்மஸ்ரீகூட இல்லை, நேராக பத்ம பூஷன். ஆஷா போஷ்லேவுக்கு மிகத் தாமதமாக (2008) கொடுக்கப்பட்டாலும், பத்ம விருதுகளிலேயே மிகவும் உயரியதான பத்ம விபூஷன் கிடைத்தது. (அதற்கு முன்பே 2000ம் வருடத்தில் அவருக்கு பால்கே விருது அளிக்கப்பட்டது.) நம்ம ஊர் எஸ். ஜானகி 1957லிருந்து சினிமாவில் பாடுகிறார். 55 வருடங்களுக்குப் பிறகுதான் முதல் பத்ம (பூஷன்) விருது பாக்கியம் கிடைத்தது. கோபம் கொண்டு அவர் அந்த விருதை வாங்க மறுத்துவிட்டார். ஆனால், கடைசிவரை எம்.எஸ்.வி. மீது பத்ம விருதின் நிழல் கூட படவில்லை. 

  லதா மங்கேஷ்கர், ஆஷா போஷ்லே ஆகியோருக்கும் எம்.எஸ்.விக்கும் வடக்கு, தெற்கு என்பதைத் தாண்டி திறமையிலும் பங்களிப்பிலும் ஏதாவது வித்தியாசம் உண்டா?

  சமூக சேவை, இலக்கியம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பத் துறை, வர்த்தகம், மருத்துவம், விளையாட்டு போன்ற துறைகளில் தனித்துவமாக சாதனை புரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள், சாதி, தொழில், பால் இன வேறுபாடின்றி வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கிறது. பத்ம விருதுகள் - பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ என்று ரகம் பிரிக்கப்பட்டவை. ஆனால், திறமையைத் தாண்டி தெற்கு, வடக்கு என்று பேதம் பார்ப்பதுதான் இந்த விருதின் மீதான மதிப்பைக் கேள்விக்குறியாக்குகின்றன.

  2012-ம் ஆண்டு, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோருக்கான பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியபோது இவ்வாறு கூறினார்:

  எம்.எஸ். விஸ்வநாதன், மற்றும் டி.கே. ராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேசிய விருது, பத்ம விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டுக்கான பத்ம விருதுக்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய மத்திய அரசு, அதற்கு செவி சாய்க்கவில்லை. “ஜனாதிபதி அவார்டு வேண்டாம், ஜனங்க அவார்டு போதும்” என்று இங்கிதம் தெரிந்த சங்கீத வித்வான் எம்.எஸ்.வி. கூறினாலும்; நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

  எம்.எஸ்.வி.க்கு பத்ம விருது வழங்கப்படாதது குறித்து ஏவிஎம் சரவணணும் வருத்தம் தெரிவித்தார். 

  இசை மேதையான எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருது வழங்காதது வருத்தம் அளிக்கிறது. பத்ம விருதுக்குப் பரிந்துரை செய்து தாம் பமுறை கடிதம் எழுதியுள்ளதாகவும் எம்.எஸ்.வி.க்கு பின்னால் வந்து சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் எம்.எஸ்.வி.யின் சாதனைகளுக்கு அங்கீகாரம் தர மறுத்துவிட்டதாக அவர் தன் இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார்.

  எம்.எஸ்.வி. பாராட்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியது என்ன?
   

  ஜெயா டி.வி.யின் 14ம் ஆண்டுத் துவக்க விழா மற்றும் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு வழங்கும் விழா 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்த விழாவுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். எம்.எஸ். விஸ்வநாதனுக்கு `திரை இசை சக்கரவர்த்தி' என்ற பட்டத்தை அவர் வழங்கினார். அதையடுத்து எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் தலா 60 பொற்காசுகள் கொண்ட பொற்கிழியையும், போர்டு பியஸ்டா' காரையும் வழங்கி கவுரவித்தார்.

  விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

  இருபதாம்  நூற்றாண்டு ஈன்றெடுத்த ஈடு இணையற்ற இசை மாமேதைகளான மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் - டி.கே. ராமமூர்த்தியை இந்த இனிய மாலைப் பொழுதினிலே கௌரவிப்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை நல்கிய ஜெயா டி.வி. நிர்வாகத்திற்கு எனது நன்றி.

  இசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அழகு ஒலி. இசை என்றால் இசைய வைப்பது. மனிதர்களையும், உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அழகு சாதனம் இசை. இசை மக்களின் இதயங்களை இணைக்கும் பாலம். சோகம், இன்பம், துன்பம், அச்சம் ஆகிய அடிப்படை உணர்ச்சிகளை வழங்குவது இசை. அதனால் தான் “இசைக்கு மயங்காதார் எவருமில்லை” “இசை கேட்டால் புவி அசைந்தாடும்” என்றெல்லாம் இசையின் மகிமையை புகழ்ந்துரைப்பர் சான்றோர்கள்.

  இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இசையின் மூலம் நம் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டவர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும்  டி.கே. ராமமூர்த்தி.

  இசைப் பின்னணி ஏதுமில்லாத ஏழ்மை குடும்பத்தில் பிறந்த  எம்.எஸ். விஸ்வநாதன், நான்கு வயதில் தனது தந்தையை இழந்த சூழ்நிலையில் நீலகண்ட பாகவதரிடம் இசையினை பயின்று 13-வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்திய பெருமைக்குரியவர்.  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த “ஜெனோவா” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எம்.எஸ். விஸ்வநாதன், ‘பணம்’ திரைப்படம் முதல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் வரை  கூ.மு. ராமமூர்த்தியுடன் இணைந்து 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில், 1,200-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து, ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்த பெருமை  எம்.எஸ்.வி.யைச் சாரும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான்.

  முன்னூறுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை கொண்டும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார்;  மூன்றே இசைக் கருவிகளை வைத்தும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார்  எம்.எஸ்.வி. . ஆர்மோனியம், பியானோ, கீ போர்டு என மூன்றையும் பிரமாதமாக வாசிக்கும் திறன் பெற்றவர்  எம்.எஸ்.வி. . தனித் தன்மை வாய்ந்த தனது குரலின் மூலம் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. . மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படங்களில் பாடிய பெருமையும், மனப் பக்குவமும் இவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. பிற இசையமைப்பாளர்களுடன் இணைந்தும் இசையமைத்து இருக்கிறார். அந்தக் காலத்தில் பல இசைக் கலைஞர்களுக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லை. இவருடைய குழுவில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லை. வறுமையில் வாடிய பல கலைஞர்கள் இவர் மூலம் வளம் பெற்றனர்.  இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான ‘நீராருங் கடலுடுத்த’ என்ற பாடலுக்கு இசையமைத்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பவர்  எம்.எஸ். விஸ்வநாதன்.

  டி.கே. ராமமூர்த்தி மெல்லிசை மன்னர் மட்டுமல்ல வில்லிசை மன்னரும் கூட. இசைப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். மிகப் பெரிய வயலின் வித்வான். பணம் படைத்தவன் என்ற திரைப்படத்தில் வரும் ‘கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா’ என்ற பாடலில் வரும் சோக இசை  டி.கே. ராமமூர்த்தியின் வயலின் இசையாகும்.   சி.ஆர். சுப்பராமன் என்ற மிகப் பெரிய இசையமைப்பாளரின் குழுவில் வயலின் வாசித்துக் கொண்டிருந்தவர்  டி.கே. ராமமூர்த்தி .  அப்போது அதே குழுவில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தவர்  எம்.எஸ். விஸ்வநாதன் . எதிர்பாராத சூழ்நிலையில்  சுப்பராமன்  இயற்கை எய்திய போது, அவர் விட்டுச் சென்ற திரைப்படங்களுக்கு  விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்து, அதன் தொடர்ச்சியாக பல திரைப் படங்களுக்கு இசையமைத்து நம்மை எல்லாம் இசை என்னும் இன்பக் கடலில் மூழ்கடித்தவர்கள். இப்படிப்பட்ட இசை மாமேதைகளை நமக்களித்த சுப்பராமன்-க்கும் நாம் இந்தத் தருணத்தில் நன்றி செலுத்த வேண்டும்.

  இன்னிசையாய், செந்தமிழாய் இருப்பவன் இறைவன். அந்த செந்தமிழ்ப் பாடல்கள் பல நம் மனதிற்கும், நினைவிற்கும் என்றும் இனிமைத் தரக் கூடியவை. அன்று முதல் இன்று வரை  ராமநாதன், மகாதேவன்,  ஆதி நாராயண ராவ்,  சலபதி ராவ்,  தக்ஷிணாமூர்த்தி,  சுப்பைய்யா நாயுடு,  இளையராஜா போன்ற எத்தனையோ இசையமைப்பாளர்கள் எவ்வளவோ இனிமையான பல பாடல்களை நமக்குத் தந்துள்ளனர்.  பல்வேறு புதுமைகளை புகுத்தியுள்ளனர்.  நம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத அளவுக்கு இசையமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்  விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை.  இவர்கள் இசையமைத்த பல பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து மக்களை பரவசத்திற்கு உள்ளாக்கின. ஹம்மிங், கோரஸ், பறவை இனங்களின் ஒலிகள், விசில் போன்றவற்றை மிக நுட்பமாக இசை வாத்தியங்களில் ஒன்று போல பயன்படுத்தி மக்களின் மனதை உருக வைத்து, நினைவில் நிலைத்து இறுகி நிற்கும் பாடல்களைத் தந்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை.

  நினைவில் இருந்து நீங்காத அளவுக்கு மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் அனைத்தும் பிரபலம் அடைந்ததற்கு கதையின் தன்மை, நடிகர்கள் மற்றும் நடிகையர்களின் திறமையான நடிப்பு, இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் திறமை, முக்கியமாக கண்ணதாசன், வாலி போன்ற மிகப் பெரிய பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதிய விதம், மிகத் திறமை வாய்ந்த ஈடு இணையற்ற பின்னணிப் பாடகர்களான பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, எம்.எஸ். ராஜேஸ்வரி, பி. லீலா, ஜிக்கி, சீர்காழி கோவிந்தராஜன், ஜமுனா ராணி, ஏ.எம். ராஜா, பாலசரஸ்வதி, ராகவன், சரோஜினி, வாணி ஜெயராம் ஆகியோர் பாடல்களை பாடிய விதம் போன்றவை காரணங்களாக இருந்தாலும், இந்தப் பாடல்கள் எல்லாம் இன்றும் என்றும் தமிழக மக்களின் மனதில் நீக்கமற நிறைந்து இருக்கும் பாடல்களாக திகழ்வதற்கு, புகழ் பெறுவதற்கு காரணம் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோரின் இன்னிசையில் அமைந்தது என்பது தான் உண்மை.

  எனக்கு  நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் வளரும் போது எவ்வளவோ விஷயங்களை பார்த்து, ரசித்து, அனுபவித்து இருக்கிறேன்.  காற்று, நிலவு, பூமி, கதிரவன், மரம், செடி, கொடி, மலர்கள் இவையெல்லாம் வாழ்க்கையுடன் எப்படி இரண்டற கலந்து இருக்கின்றனவோ, ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோரும் எப்படி இரண்டற கலந்து இருக்கிறார்களோ, அதே போல் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையும் என்னுடன் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. அந்த இசையுடனேயே நான் வளர்ந்திருக்கிறேன்.  

  விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணையின் இசைக்கு எல்லையே கிடையாது. அனைத்து வயதினரையும் ஈர்க்க வல்லது. 1950-களிலும், 1960-களிலும் இவர்கள் மெட்டமைத்த பாடல்கள் இன்றும் பசுமையாக அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பெற்றுள்ளன.

  தொலைக்காட்சிகளில் இன்றைக்கும் இசைப் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் 10-வயது, 12-வயது சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்தப் போட்டிகளில் இந்தக் குழந்தைகள் பாடுவதற்கு தேர்ந்தெடுக்கும் பாடல்கள் எல்லாம் இந்த மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாடல்கள் தான். எனது தலைமுறை, அதற்கு முந்தைய தலைமுறையில் உள்ளவர்கள் எல்லாம் இவர்கள் இசையமைத்த படங்களை பார்த்ப்பார்கள். அதில் உள்ள பாடல்களை கேட்டிருப்பார்கள்.  அவ்வாறு படங்களை பார்க்காமலேயே இந்தக் காலத்து குழந்தைகளுக்கும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை தான் பிடித்க்கிறது. அந்த ராகம் தான் பிடித்க்கிறது.  அதனால், இவர்கள் இசையமைத்த பாடல்களை தெரிந்தெடுத்து போட்டிகளிலே பாடுகிறார்கள்.

  நான் குழந்தையாக இருந்த போதே புகழ் பெற்று விளங்கியவர்கள் இந்த மெல்லிசை மன்னர்கள். அப்போது தொலைக்காட்சி இல்லை; வீடியோ இல்லை; சி.டி., டி.வி.டி., கணினி, டேப் ரிகார்டர் ஆகிய எதுவும் கிடையாது.  ரேடியோவும், கிராமபோனும் தான் இருந்தன. இந்தக் காலத்து குழந்தைகளுக்கு கிராமபோன் என்றால் என்ன என்றே தெரியாது. இசைத்தட்டு என்றால் என்ன என்றே தெரியாது.  இப்படிப்பட்ட நவீன தகவல்தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத போதே புகழின் உச்சியில் இவர்கள் இருந்க்கிறார்கள் என்றால் அது மிகவும் வியக்கத்தக்கது. இவர்களுடைய பாடல்கள் ஜனரஞ்சகமாகவும், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டும் இருக்கும். அதனால் தான் இவர்களுடைய பாடல்கள் எல்லாம் சாகா வரம் பெற்றிருக்கின்றன. தியேட்டரில் ஒரு முறை படத்தைப் பார்த்தாலே அந்தப் பாடல்கள் எல்லாம் மனதில் பதிந்துவிடும். என் மனதில், குழந்தையாக இருந்த போது, அப்படித்தான் பதிந்துவிட்டன. என் உயிர் மூச்சு உள்ளவரை, அந்தப் பாடல்கள், என் மனதைவிட்டு அகலாது.

  “சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே” என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் பிரபல கர்நாடக சங்கீத மேதை மதி டி.கே. பட்டம்மாள்  கண்ணீர் விட்டு அழுததாக நான் கேள்விபட்டிருக்கிறேன். நானே பார்த்து ரசித்த ஒரு தொலைக்காட்சி பேட்டியில், வீணை காயத்ரியிடம், “உங்களுக்கு சினிமா பாடல் பிடிக்குமா” என்ற கேள்வி கேட்கப்பட்ட போது,  உடனே வீணையை எடுத்து “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா” என்ற பாடலை வாசித்துக் காண்பித்தார்கள். அதாவது, திரைப்படப் பாடல்களில் நாட்டம் இல்லாத கர்நாடக இசை மேதைகளையும் தன் வயப்படுத்தியவர்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி .

  இசையால் நம்மை புது உலகுக்கு கொண்டு செல்வது போன்ற உணர்வைத் தந்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை. மெலடி யுகத்தை உருவாக்கி இனிமையையும், நவீனத்தையும், காலத்திற்கு ஏற்ப புதுமையையும் படைத்தவர்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இசையை இனிய திசைக்கு ப்பிவிட்டவர்கள்.  உலகெங்கும் உள்ள நல்ல இசையை தமிழ் சினிமாவில் புகுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு. இசைக் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து முதன் முதலில் அதிக அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்திய பெருமை இந்த மெல்லிசை மன்னர்களையே சாரும். கேட்போரை ஈர்த்து இழுக்கும் வகையில் இனிமையான சுருதியினைக் கொண்ட பல பாடல்களை தந்தவர்கள். உலக இசையை தமிழ் இசையில் புகுத்திய பெருமையும் இவர்களுக்கு உண்டு. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் இசையமைத்து புகழ் பெற்று விளங்கினார்கள்.

  இசையைப் பற்றி நுணுக்கமாக தெரியாதவர்களையும் இசைய வைத்த பெருமை மெல்லிசை மன்னர்களுக்கு உண்டு.

  சங்கீதத்தைப்  பற்றி நுணுக்கமாக எதுவும் தெரியாமல் சங்கீதத்தை ஒருவர் ரசிக்க முடியுமா?

  இந்தக் கேள்விக்கு திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை பல ஆண்டுகளுக்கு முன் வானொலி பேட்டி மூலம் பதில் சொல்லியிருக்கிறார்.

  இசை ரசிகர்களை இரு வகையாக பிரிக்கலாம். சங்கீத லட்சணங்களையும், நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டு, குற்றம் குறைகள் எங்கே வரும் என்று எதிர்பார்த்து அதை விமர்சிக்கும் ரசிகர்கள் ஒரு விதம். இவர்கள் எல்லாம் லட்சண ஞானஸ்தர்கள்.

  இன்னொரு விதம் சங்கீதத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் இசையை ரசிக்கும் ரசிகர்கள். இவர்கள் எல்லாம் லட்சிய ஞானஸ்தர்கள். இப்படிப்பட்ட ரசிகர்கள் தான் அதிகம். இவர்கள் சுலபமாய் புரிந்து கொண்டு ஆனந்தப்படும் வகையில் இசையமைக்க வேண்டும் என்கிறார் ராஜரத்தினம் பிள்ளை .

  திருச்சி மலைக்கோட்டை கோயில் கும்பாபிஷேகம். மதுரை நாதஸ்வர வித்வான் பொன்னுசாமிப் பிள்ளை வாசித்துக் கொண்டிருந்தார். நாட்டை, மல்லாரி எல்லாம் வாசித்து முடித்தவுடன், ராக ஆலாபனையை ஆரம்பித்தார்.

  ஒரு முக்கியமான கட்டத்தில், “ பலே ” என்று ஒரு குரல் கேட்டது.  அந்தப் பாராட்டு எங்கிருந்து வந்தது தெரியுமா? கியாஸ் லைட் தூக்கிக் கொண்டிருந்த ஓருவர் தான் அப்படி சபாஷ் போட்டார். பல இடங்களில் இது போன்ற நாதஸ்வர இசையை கேட்டுக் கேட்டு ஞானம் அடைந்த லட்சிய ஞானஸ்தர் அந்த ரசிகர். இதைக் கேட்ட அந்த நாதஸ்வர வித்வானுக்கு பரமானந்தம். இதை நினைக்க, நினைக்க நமக்கு சந்தோஷம் பொங்குகிறது என்கிறார் ராஜரத்தினம் பிள்ளை.

  லட்சண ஞானஸ்தராக இருந்தாலும் சரி, லட்சிய ஞானஸ்தராக இருந்தாலும் சரி, இசையிலிருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது இனிமையையும், இன்பத்தையும் தான்.

  தங்களது ஜனரஞ்சகமான இசையின் மூலம் லட்சிய ஞானஸ்தர்களை, அதாவது பாமரர்களை ரசிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், லட்சண ஞானஸ்தர்களான இசை மேதைகளும் பாராட்டும் வண்ணம் சாதனை படைத்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை.

  இந்தியாவை எத்தனையோ அரச வம்சங்கள் ஆண்டிருந்தாலும், இந்திய வரலாற்றில் குப்தர்கள் காலத்தை தான் “பொற்காலம்” என்று சொல்வார்கள். அது போல, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையின் உச்சியிலே கொடிகட்டிப் பறந்த காலம் தான் இசைக்கு, திரைப்பட இசைக்கு ஒரு பொற்காலம் என்று சொல்லலாம்.

  விஸ்வநாதன் - ராமமூர்த்தி மற்றும் கே.வி. மகாதேவன் ஆகியோர் இசையமைத்த கால கட்டத்தில் வெளிவந்த படங்கள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றின் காரணமாகவே அந்தக் காலம் தென்னிந்திய திரைப்பட இசையின் பொற்காலமாக திகழ்ந்தது.  

  இப்படிப்பட்ட புகழுக்கும், பெருமைக்கும் உரிய  எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளை பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேசிய விருது, பத்ம விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டிற்கான பத்ம விருதிற்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய மத்திய அரசு, அதற்கு செவி சாய்க்கவில்லை. “ஜனாதிபதி அவார்டு வேண்டாம், ஜனங்க அவார்டு போதும்” என்று இங்கிதம் தெரிந்த சங்கீத வித்வான் எம்.எஸ்.வி.  கூறினாலும்; நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

  1963-ஆம்  ஆண்டு விஸ்வநாதன் - ராமமூர்த்தி-க்காக ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு விழா எடுத்தார்கள். அந்த விழாவில் தான், இவர்களுக்கு “மெல்லிசை மன்னர்கள்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. அந்த விழாவிற்கு என்னுடைய தாயார் என்னை அழைத்துச் சென்றார்கள். இவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை நாமும் நடத்த வேண்டும் என்று எனக்கு நீண்ட காலமாக ஆசை. அந்த ஆசை இன்றைக்கு ஜெயா டி.வி. மூலம் நிறைவேறி இருக்கிறது.

  இசையின் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இனிய இசைப் பயணம் வெற்றிப் பாதையில் இனிதே தொடர வேண்டும் என்று வாழ்த்தி, இசையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து நல்ல இசையமைப்பாளர்களை, பாடகர்களை உருவாக்கும் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, மத்திய அரசின் விருதுகள் நிச்சயம் உங்களை நாடி வரும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, நீங்கள் இருவரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்றார்.

  அமெரிக்காவுக்கு அழைத்த கவிஞரைக் காப்பாற்ற கேசட் அனுப்பிய எம்.எஸ்.வி.


  கண்ணதாசன் என்றால் எம்.எஸ்.வி., எம்.எஸ்.வி. என்றால் கண்ணதாசன் என்று எண்ணும் அளவுக்கு இருவர் கூட்டணியும் தமிழ்த் திரையிசை உலகில் மிகவும் பலம் வாய்ந்த கூட்டணியாக அமைந்து அற்புதமான பாடல்களைப் படைத்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

  இருவரும் ஒரே நாளில் ஜூன் 24 அன்று பிறந்தார்கள். கண்ணதாசன் 1927-ம் வருடம், எம்.எஸ்.வி. அதற்கு அடுத்த வருடம்.

  இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய, திரையிசை வரலாற்றில் கவிஞர் கண்ணதாசனுக்கு தனி இடமுண்டு. இவரது பாடல்களில் கற்பனை வளமும், சொல்லாட்சியும் தத்துவங்களும் அனுபவங்களும் புதைந்திருக்கும், 

  எம்.எஸ்.வி - கண்ணதாசன் கூட்டணியில் அமைந்த பாடல்களில் மனிதர்களின் பிறப்பு, இறப்பு, சோகங்கள், விரக்திகள், வெறுமைகள், வீழ்ச்சிகள், ஆசைகள், ஏமாற்றங்கள் என அனைத்தையும் உணரலாம். 

  2003-ல் வெளியான ராணி மைந்தன் எழுதிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. என்கிற நூலில் கண்ணதாசன் - எம்.எஸ்.வி நட்பு பற்றி பல அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில:

  ***

  இரவு பதினோரு மணிக்கு எம்.எஸ்.வி. வீட்டு தொலைபேசி ஒலித்தால் மறுமுனையில் கவிஞர் என்று அர்த்தம்.

  ‘டேய்... புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்பார்.

  ஒரு தரம் ஒரு வேண்டுகோளை தன் நண்பரிடம் வைத்தார் கவிஞர்.

  ‘நீ எப்போ மேடையில கச்சேரி பண்ணினாலும் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... பாட்டை முதல்ல பாடணும்.’

  ‘சரி’ என்று கவிஞருக்கு அன்று கொடுத்த வாக்கை இன்றும் காப்பாற்றி வருகிறார் எம்.எஸ்.வி. அப்படி அந்தப் பாட்டைப் பாடி முடிக்கும்போது, ‘ புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... அந்த கண்ணதாசன் புகழ் பாடுங்களே’ என்று சற்றே மாற்றி உணர்ச்சியோடு பாடுவார்.

  ***

  கண்ணதாசன் அவர்களின் உடல்நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அவரைச் சிறப்புச் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குக் கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

  கவிஞருக்கும் மெல்லிசை மன்னருக்கும் இடையே நட்பு பிறந்து அது இறுகிய பின்னர் எந்த வெளிநாட்டுப் பயணத்துக்கும் எம்.எஸ்.வி. இல்லாமல் கவிஞர் சென்றது கிடையாது. ஒட்டிப் பிறந்த இரட்டையர் போலவே இவர்கள் இரண்டு பேரும் வெளியிடங்களுக்குப் போய் வந்தார்கள். அதிலும் நாட்டை விட்டுப் போவது என்றால் இரண்டு பேரும் ஒன்றாகத்தான் திட்டமிட்டுப் போய் வருவார்கள்.

  வெளிநாட்டு ரசிகர்களுக்கும் அதுதான் பிடித்திருந்தது.

  ஆனால் கவிஞர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குப் போன போது எம்.எஸ்.வி.-யால் உடன் போக முடியவில்லை.

  கவிஞர் என்னமோ நீயும் வாடா என்று வருந்தி வருந்தி கூப்பிடத்தான் செய்தார்.

  சொந்தப் படங்கள் எடுத்ததில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, முடித்துக் கொடுக்க வேண்டிய படங்கள் கையில் இருந்த நிலை எல்லாமாகச் சேர்ந்து எம்.எஸ்.வி.-யால் அப்போது போக முடியவில்லை.

  அமெரிக்கா போனதும் கவிஞர் போட்ட முதல் போன் கால் வேறு யாராக இருக்கும்?

  ‘என்னங்க - எம்.எஸ்.வி.-யை அழைத்து வராமல் வந்திருக்கீங்களே...’ என்றுதான் என்னிடம் எல்லோரும் கேக்கறாங்க விசு’ என்றார்.

  ‘விசா பத்தியெல்லாம் கவலைப்படாதே. அதுக்கு எல்லாம் ஏற்பாடு செய்ய இங்கே தயாரா இருக்காங்க. வாடா விசு’ என்று அமெரிக்காவிலிருந்து கவிஞர் அழைப்பு விடுத்தார்.

  தன் நிலைமையை விளக்கி அப்போதைக்கு வர முடியாததைச் சொல்லி நட்புடன் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் எம்.எஸ்.வி.

  ‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதும்கூட அடிக்கடி என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாராம் கவிஞர். சில சமயம் நினைவு தப்பிய நிலையிலும் ‘ டேய்.. விசு...அந்த ட்யூன் போடுடா..., இந்த பல்லவி....’ என்று இங்கே நாங்கள் எப்படிப் பழகுவோமோ அதேபோன்ற வார்த்தைகளையே சொல்லிக் கொண்டிருந்தாராம். இந்த விவரங்களையெல்லாம் கவிஞரின் குடும்பத்தினரும் அமெரிக்காவில் இருந்த அவரது ரசிகர்களும் அப்போது முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்-ரிடம் தொலைபேசி மூலம் சொல்லியிருக்கிறார்கள். உடனே எம்.ஜி.ஆர். என்னுடன் தொடர்பு கொண்டு ‘கவிஞர் உங்க நினைவாகவே இருக்காராம்... விசு, உடனே அமெரிக்கா போக முடியுமா நீங்க?’ என்று கேட்டார். எனது அன்றைய சூழலில் போக முடியாமல் இருந்ததை விளக்கினேன்.

  உடனே எம்.ஜி.ஆர். ‘அப்ப ஒண்ணு செய்யுங்க விசு... நீங்க கவிஞரோட பேசற மாதிரி, ட்யூன் போடற மாதிரி, அவர்கிட்டயிருந்து பல்லவி வாங்கற மாதிரி, உங்க இரண்டு பேரின் கிண்டல், கேலி, நட்பு இதெல்லாம் பிரதிபலிக்கிற மாதிரி ஒரு கேசட் பண்ணி அனுப்புங்க. அதைப் போட்டுக் கேட்டா கவிஞருக்கு ஒருவேளை ஆறுதலா இருக்கலாம்...’ என்றார்.

  அப்படியே செய்து அனுப்பினோம். ஆனால் அந்த கேசட் அங்கு போய் அவரைச் சேர்வதற்குள் அவர் போய்ச் சேர்ந்துவிட்டார் (17-10-1981).

  கவிஞர் இறந்த பின்பு அவர் என் கனவில் வராத நாளே இல்லை. நாங்கள் எப்போதும் போல பேசிக்கொண்டிருக்கிறோம்.

  (நன்றி -  ராணி மைந்தன் எழுதிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. நூல்)


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp