சோகங்களுக்குப் பின்னால்...

ஓரு பத்தாண்டுகளுக்கு முன் எப்போதாவதுதான் இதுபோன்ற அச்சம் ஏற்படும். பெரிய அளவில் ரயில் விபத்து, குண்டு வெடிப்பு போன்றவை நடக்கும்போதுதான் உடல் சிதைவைப் பார்க்க முடியும்; வாகன நொறுங்கலையும் பார்க்க முடிய
Updated on
2 min read

ஓரு பத்தாண்டுகளுக்கு முன் எப்போதாவதுதான் இதுபோன்ற அச்சம் ஏற்படும். பெரிய அளவில் ரயில் விபத்து, குண்டு வெடிப்பு போன்றவை நடக்கும்போதுதான் உடல் சிதைவைப் பார்க்க முடியும்; வாகன நொறுங்கலையும் பார்க்க முடியும்.

அப்போதெல்லாம் அதுபோன்ற காட்சிகளைப் பார்க்கவும் மக்கள் முகம் சுளிப்பர். ஆனால், இப்போதெல்லாம் அப்படியல்ல. காரணம், அடிக்கடி கால் உடைந்து, கை முறிந்து, முகம் சிதைந்து, குடல் சரிந்து... எல்லாம் இயல்பாகிவிட்டது.

குறிப்பாக, நான்கு வழிச்சாலை போன்ற நெடுஞ்சாலைகளில் விபத்துகள் குறைந்திருப்பதாக ஏதாவது ஒரு புள்ளிவிவரம் சொன்னாலும், குறைந்துள்ள விபத்துகள் கோரமாகியிருக்கின்றன என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

சில நாள்களுக்கு முன்பு அமைச்சர் மரியம்பிச்சை சென்னை நெடுஞ்சாலையில் நேரிட்ட விபத்தில் இறந்தார். வீங்கிய தலையின் உள்ளே எலும்புகள் நொறுங்கியிருந்ததாகக் கூறுகின்றனர் டாக்டர்கள்.

காரிலிருந்தவரிடம் "டிபனில் என்ன, இடியாப்பம் கொண்டு வந்திருக்கிறாயா?' என உற்சாகமாகக் கேட்டு, லேசாக வலப்புறம் திரும்பியபோது விபத்து நேர்ந்ததாகக் கூறுகின்றனர்.

60 வயதை நிறைவு செய்துள்ள மரியம்பிச்சையின் வாழ்வைச் சரிபாதியாகப் பிரித்துப் பார்த்தால் - முற்பகுதி எப்படிப்பட்டதோ, போகட்டும்; ஆனால், பிற்பகுதி எல்லோருடைய நினைவிலும் நிற்கும்படியானது.

எப்போதும் உற்சாகமாகவே இருப்பார். பழகுவதற்கு இனிமையானவர். மாமன்றக் கூட்டங்களில் மாநகராட்சி நிர்வாகத் தரப்பின் தவறுகளைச் சுட்டிக் காட்டும்போதும் சிரித்துக்கொண்டே முன்வைப்பார். சரியோ தவறோ, அந்த முன்வைப்பில் ஓர் உறுதி இருக்கும். "இது என்ன பெரிய விஷயமா? விடுங்க' என சிரித்துக்கொண்டே அதிகாரிகள் கூறினால், "சரி விடுங்க' என்று அமர்ந்துவிடுவார்.

மூன்று முறை மாமன்ற உறுப்பினராக இருந்ததால், சங்கிலியாண்டபுரத்தில் ஏறத்தாழ மக்கள் மனதில் குடியிருக்கும் செல்வாக்கு நிறைந்த மன்னராகவே வாழ்ந்தார் மரியம்பிச்சை. வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு அவரது சடலத்தைப் பார்க்க வந்த மக்கள் கூட்டமே இதற்கு நேரடிச் சாட்சி.

ஆனால், அன்று காலை 6.35 மணிக்கு பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, "சட்டப்பேரவைக்குள் அம்மா நுழைவதற்குள் நான் சென்றாக வேண்டும்' என்று காரோட்டியிடம் தெரிவித்துவிட்டு முன்சீட்டில் அமர்ந்தவர்தான், அடுத்த ஒரு மணி நேரத்தில் சடலமாக வந்தார் திருச்சிக்கு.

எதிரிக்கும்கூட இப்படியொரு சாவு வரக்கூடாது என்கின்றனர் மரியம்பிச்சையின் மரணத்தை சோகத்துடன்நோக்கும் அவரது அரசியல் நண்பர்கள். பதவியேற்ற பிறகு திருச்சி வந்தபோது தன்னைச் சந்தித்த அதிகாரிகளிடம் "ஆண்டவன் கொடுப்பான் சார், அவனே எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்குவான் சார்' என்றிருக்கிறார்.

மரியம்பிச்சையை ஒருகாலத்தில் எதிர்த்த அவரது முற்பகுதி வாழ்வின் எதிரிகள்கூட இந்த மரணத்தைச் சகித்துக் கொள்ளமாட்டார்கள் என்கிறார்கள். அத்தனை சோகம் கவ்விய நிகழ்வு மரியம்பிச்சையின் மரணம்.

"இரண்டரை மணி நேரத்தில் சென்னையில் கொண்டு சேர்த்துவிடுகிறேன் பாருங்கள்' என்று கூறிவிட்டு சமயபுரத்திலிருந்து வண்டியை எடுத்தவர் அந்தக் கார் ஓட்டுநர்.

சாதாரணக் கார்களுடன் ஒப்பிடுகையில் அந்த வேகம், அசுர வேகம் என்கிறார்கள் விஷயமறிந்த ஓட்டுநர்கள். திடீரென சாலையில் ஏதேனும் ஒன்றென்றால் எதுவும் செய்ய முடியாத வேகம்.

பல மணி நேரங்கள் பயணித்துச் செல்ல வேண்டிய தொலைவை, மிகச்சில மணி நேரங்களில் சென்றடைய தொழில்நுட்பம் பெருகியிருக்கிறது என்ற மனநிறைவையும் தாண்டி, எப்போதாவது நிகழும் இந்த மரணங்கள் மனத்தாங்கலை ஏற்படுத்துகின்றன.

"வேகம் விவேகமானதல்ல' என்ற அறிவுரைகள் எல்லாம் விசாலமான, நீண்ட, குண்டும் குழிகளும் அற்ற சாலைகளுக்குள்ளும், நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வரும் வாகனங்களின் வேகங்களுக்குள்ளும் புதைந்து போய்விடுகின்றன.

நெடுஞ்சாலைகளில் மட்டுமல்ல, இந்தப் பிரச்னை. மாவட்டங்களுக்குள், தெருக்களுக்குள்ளும்தான். இரு சக்கர வாகனங்களும்கூட இப்போதெல்லாம் "ஜெட்' வேகத்தில்தான் பறக்கின்றன. "கியர்' இல்லாத வாகனங்கள் எல்லாம் பரிதாபமாகச் செல்கின்றன. விழுந்து, உருண்டு, எலும்பு துருத்தி, சதைகள் பிய்ந்து... இந்தக் கோரமெல்லாம் சாதாரணமாகிவிட்டது.

இந்த "வேகம்' குறித்து ஒரு நல்ல - பரந்துபட்ட விவாதத்தை நடத்தி... அதன் மூலம் நல்ல ஒரு தீர்வை நோக்கிப் பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால், தனியார்மயம், தாராளமயம், உலகமயம்போல, கோரமான காட்சிகளும் இன்னும் கூடுதலாக கடந்து "சாதாரணமய'மாகிவிடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com